வாண்டுமாமா படைத்த பல கதாபாத்திரங்களில் என்னை கவர்ந்த ஒரு கதாபாத்திரம் சி.ஐ.டி சிங்காரம் ஆகும். மேலைநாடுகளின் ஷர்லக் ஹோம்ஸ் போன்ற துப்பறியும் கதாபாத்திரங்கள் அழியா புகழுடன் விளங்குவதற்கு காரணம் கதைகளின் விறுவிறுப்பும் சஸ்பென்ஸுமே ஆகும். அத்தகைய ஒரு கதாபாத்திரம் தமிழில் இல்லை என்று வருத்தபடுபவர்கள் வாண்டுமாமாவின் சி.ஐ.டி சிங்காரம் கதைகளை படிக்கலாம். மேலை நாட்டு துப்பறியும் கதைகளில் இருக்கும் அனைத்து விஷயங்களை உள்ளடக்கி அருமையக இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து உள்ளார் வாண்டுமாமா. ஒன்று மட்டும் எனக்கு நிச்சியமாய் தெரியவில்லை. ஜெய்சங்கர் இந்த கதாபாத்திரத்தை பார்த்து தனது படங்களுக்கு பெயர் வைத்தாரா அல்லது ஜெய்சங்கர் பார்த்து வாண்டுமாமா இந்த பெயர் வைத்தாரா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் நமது பேச்சுவழக்கில் சி.ஐ.டி சிங்காரம் மற்றும் சி.ஐ.டி சங்கர் போன்ற பெயர்கள் வழக்கமான ஒன்றாக போய்விட்டது. (C.I.D - Criminal Investigation Department)
பார்வதி சித்திரக்கதை இதழின் 12வது இதழாக வெளியிடப்பட்டது டயல் ஒன் நாட் நாட் (Dial 100). 12 சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த தொகுப்பில் அனைத்து கதைகளின் வடிவமும் ஒன்றே. சென்னையில் நடக்கும் சிறு சிறு குற்றங்களை சிங்காரம் விசாரித்து சரியான குற்றவாளியை பிடிப்பதே அனைத்து கதைகளின் பொதுவான வடிவம். இந்த சாதாரண கதையமைப்பில் வாண்டுமாமா புகுத்திய புதுமை(தமிழில்) வாசகர்களின் மூளைக்கு வேலை கொடுப்பது. கதையில் ஆங்காங்கே சில வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் சிறிது யோசித்து விடைகளை யூகிக்க வேண்டும். இந்த யுத்தியால் சதாரண கதை கூட விறுவிறுபடைகிறது. லயன் வாசகர்களுக்கு இந்த யுத்தி 'ஜார்ஜ் நோலன்' மற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் (ட்ரேக்?? பெயர் மறந்து விட்டது) மூலம் ஏற்கனவே பழக்கம் தான் இருந்தாலும் தமிழ் படைப்பில் இத்தகைய விஷயத்தை பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கதை உங்கள் பார்வைக்கு...
காமிக்ஸ் கதைகளில் லாஜிக் என்பது அவ்வளவாக தேவையில்லை எனினும் துப்பறியும் கதைகளுக்கு ரொம்ப முக்கியம். இந்த கதைகளில் லாஜிக் ஓட்டைகள் மிக மிக குறைவு. ஆனால் இவ்வளவு புகழ் பெற்ற சி.ஐ.டி ஏன் ஜேப்படி திருடர்கள் போன்றவர்களையே வளைத்து வளைத்து பிடிக்கிறார் என்பது தான் புரியவில்லை. 'லம்ப்'பாக எதையாவது பிடிக்க வேண்டாமா. ஷர்லக் ஹோம்ஸ் கதைகளில் வாட்ஸன் போல பாலு எனற உதவியாளர் உள்ளார். இவர் சும்மா பேச்சுதுணைக்கு மட்டும் தான் போல. வேறு எதுவும் உருப்படியாக செய்வதாக தெரியவில்லை. எப்பிடி இருப்பினும் தமிழ் சித்திரக்கதைகளில் ஒரு வித்தியாசமான, சுவையான மற்றும் தரமான ஒரு கதையை கொடுத்த வாண்டுமாமாவிற்கு நன்றிகள். வழக்கமாக ஒருவர் 60 பக்க காமிக்ஸ் கதையை 60 நிமிடங்களில் படித்தால் இந்த கதையை படிக்க கண்டிப்பாக 80 நிமிடங்களாவது ஆகும். காரணம் வாண்டுமாமா உங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதுதான்.
ரமணி
இந்த கதைக்கு ஓவியம் ரமணி. இதுபோன்ற துப்பறியும் கதைக்கு நுணுக்கமான ஓவியங்கள் மிக அவசியம். அதை சிறப்பாக செய்திருக்கிறார் ரமணி. சிறு சிறு விஷயங்களை கூட தெளிவாக வரைந்துள்ளார். வாண்டுமாமா - செல்லம் கூட்டணிக்கு இனையான கூட்டணி வாண்டுமாமா - ரமணி கூட்டணியாகும். எழுத்துகளும் மிக அழகாக இருக்கிறது. ரமணி பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். அட்டைபடம் சுப்பு எனபவரால் வரையப்பட்டிருகிறது.
சி.ஐ.டி சிங்காரம் கதைகள் எழுத்து கதை வடிவில் பூந்தளிர் இதழில் வந்துள்ளது. இதே கதைகளை வானதி பதிப்பகம் முழு புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்களில் சித்திரங்கள் இல்லாதது பெறும் குறை. நண்பர் விஸ்வா சி.ஐ.டி சிங்காரமின் கல்கி இதழ் அவதாரம் பற்றி தனது பதிவில் கூறி உள்ளார்.
சி.ஐ.டி சிங்காரம் கதைகள் எழுத்து கதை வடிவில் பூந்தளிர் இதழில் வந்துள்ளது. இதே கதைகளை வானதி பதிப்பகம் முழு புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்களில் சித்திரங்கள் இல்லாதது பெறும் குறை. நண்பர் விஸ்வா சி.ஐ.டி சிங்காரமின் கல்கி இதழ் அவதாரம் பற்றி தனது பதிவில் கூறி உள்ளார்.
வாண்டுமாமா வேறுசில துப்பறியும் கதாநாயகர்களையும் உருவாகியுள்ளார். அதை பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போம்.
பின்குறிப்பு :
1. கூடுதல் தகவல்களுடன் அமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் பதிவு update செய்யப்பட்டுளது. படிக்க இங்கே சொடுக்கவும்
பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை கண்டிப்பாக தெரிவிக்கவும்































