Showing posts with label ஓவியர் தங்கம். Show all posts
Showing posts with label ஓவியர் தங்கம். Show all posts

Sunday, November 28, 2010

மர்ம வீரன் ராஜராஜ சோழன் (Marma veeran Rajaraja cholan)

வணக்கம் நண்பர்களே. விஜயன் சாரின் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும்  புத்துணரச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது. இந்த மகிழ்ச்சியான தருனத்தில் தஞ்சை நகரில் இருந்து வெளிவந்த ஒரு காமிக்ஸ் முயற்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரிய பெரிய வரலாற்று புத்தகங்களை புரட்டி தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இன்று உள்ளது. பள்ளிகளில் புகட்டப்படும் கல்வில் நம் சொந்த இன வரலாறு பற்றி அதிகம் கற்பிக்கப்படுவதில்லை. நெப்போலியன், அசோகா, ஷாஜகான் போன்ற மன்னர்களை விட ராஜராஜ சோழன் மற்றும் கரிகால சோழன் பற்றி நம் மாணவர்கள் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலக போர் பற்றி நமக்கு தெரிந்ததை விட இந்திய - சீன போர் பற்றி குறைவாகவே நமக்கு தெரியும். அவள்ளவு ஏன்? தீரன் சின்ன மலை என்ற தமிழ் வீரன் ஆங்கிலேயர்களை இரண்டு போர்களில் வீழ்த்தி உள்ளான். அவனை பற்றி எந்த பாடபுத்தகத்திலும் சரி எந்த வெகுஜன பத்திரிக்கையிலும் சரி நான் படித்தது கிடையாது (சிறிது காலம் முன் வரை). உங்களுக்கு தெரிந்த சில மாணவர்களிடம் மேற்கண்ட தகவல்கள் பற்றி சில கேள்விகள் கேட்டு பாருங்கள். நாம் நம்முடைய சொந்த கலாச்சாரம் பற்றியும் நம் தமிழ் வரலாறு பற்றியும் எந்த அளவு தெரிந்து வைத்துள்ளோம் என தெரியும். நம்முடைய வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டால் இந்த குறை ஓரளவு தீரும்.

அட்டைபடம்

முகப்பு பக்கம்

 அதே சமயம் நமது ஊடகங்களிலும் தமிழ் மன்னர்கள் பற்றிய கதை, கட்டுரை மற்றும் தகவல்கள் நிறைய வரவேண்டும். தமிழ் மன்னர்கள் பற்றி கொண்டு சேர்க்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்திடவே செய்கின்றன. கல்கியின் படைப்புகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தமிழ்நாட்டின் மன்னர்கள் கால வாழ்க்கை முறை பற்றி பாடப்புத்தகங்களின் மூலம் தெரிந்து கொண்டதை விட கல்கியின் நூல்கள் மூலமே நான் அதிகம் அறிந்து கொண்டேன் என்பதுதான் உண்மை. இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் நூலானது தமிழ் மன்னன் ராஜராஜ சோழனின் பெருமைகளை சிறுவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகும்.
கன்னிதீவு, தங்க கண்ணாடி, ராஜகம்பீரன் போன்ற சித்திரக்கதைகளை வழங்கிய ஓவியர் தங்கம் அவர்களின் துனைவியார் ஓவியர் சந்திரோதயம் அவர்களின் கைவண்ணத்தில் 'மர்ம வீரன் ராஜராஜ சோழன்' உருவாகி உள்ளது. தரமான காகிதத்தில் அற்புதமான அட்டைபடத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2005 லேயெ வந்துவிட்ட இந்த இதழ் இப்போதுதான் கையில் கிடைத்தது. விலை ரு.60
புத்தக விபரங்கள்
முன்னுரை


அணிந்துரை


சோழ அரசு வளமுடனும், பாண்டிய அரசு வீழ்ச்சி அடைந்த நிலையில் இருந்த காலகட்டத்தில் இந்த கதை துவங்குகிறது. சோழ இளவரசி குந்தவைக்கு குறி வைத்து பாண்டியர்கள் தீட்டும் சதி திட்டத்துடன் கதை ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் நாகையில் சோழ இளவரசர் அருள்மொழி ஒரு முக்கியமான கடற்பயணம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் ஆழ்ந்துள்ளார். கடற்கொள்ளையர்களை ஒழித்து தமிழக வாணிபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே அவரது கடற்பயனத்தின் நோக்கம். இந்நிலையில் அவர் பெருமதிப்பு வைத்திருக்கும் புத்த பிட்சுகள் புத்த சிலையை சாவகம், காம்போஜம் போன்ற தீவுகளுக்கு கொண்டு சேர்க்கு புனித பணியையும் இளவரசரிடம் கொடுக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் தன் அக்காவிற்கு ஆபத்து இருப்பதை சோழ நாட்டு ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொள்கிறார். இளவரசர் மாறுவேடத்தில் பழையாறுக்கு பயணமாகிறார். அங்கு தன் சகோதரிக்கு நிகழவிருந்த ஆபத்துகளை களைகிறார். பாண்டிய எதிரிகளை அழிக்கிறார். இது தான் கதை.

கதாபாத்திரங்கள் அறிமுகம்

கதையின் ஆரம்பம் (பாண்டிய ஒற்றர்களின் திட்டம்)
குந்தவை - அருள்மொழி சந்திப்பு

சிறுவர்களை குறி வைத்து கதை புனையப்பட்டிருப்பதால் 'தீவிர' இலக்கிய தாகத்துடன் படிப்பவர்களுக்கு ஏற்ற இதழ் இதுவல்ல. சிறுவர்களுக்கான படைப்பு என்ற வகையில் இது ஒரு மிகச்சிறந்த படைப்பு. சித்திரங்கள் நன்றாக உள்ளன. எடிட்டிங்கில் மட்டும் சிறிது அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது ஒரு சிறிய குறை. ஆசிரியர் கல்கியில் கதாபாத்திரங்களை கொண்டே இந்த கதையில் பாத்திரங்களை படைத்திருக்கிறார். கதை நடைபெறும் காலகட்டமும் பொன்னியின் செல்வன் காலகட்டமே. ஓவியர் மணியம் கொடுத்த உருவங்களிலே கதாபாத்திரங்களை உலாவிடுகிறார் ஆசிரியர் சந்திரோதயம். இந்த புத்தகத்தில் சித்திரக்கதை தவிர 'சித்திரமும் மொழியும்' எனற கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இதில் பழைய சித்திர எழுத்து முறை பற்றியும் இன்ன பிற தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழின் முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகத்தை பற்றியும் கூறுகிறார்கள். பயனுள்ள தகவல்கள். ஆசிரியர் சந்திரோதயம் அவர்கள் ஒரு ஓவிய ஆசிரியர் என்பது இங்கு ஒரு கூடுதல் தகவல். ஆசிரியர்க்கு ஓவியத்திலும் வரலாற்றிலும் ஒரு சேர ஆர்வம் இருப்பது புத்தகத்தில் தெளிவாய் தெரிகிறது. ஆர்வம் மட்டுமே முதலாய் கொண்டு இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளனர் தங்கம்-சந்திரோதயம் தம்பதியினர். அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.

சித்திர எழுத்துக்கள் பற்றிய கட்டுரை

ஆசிரியர் பற்றி

இந்த புத்தகம் இன்னும் ஆசிரியரிடம் இருப்பு உள்ளது. கீழ்கண்ட முகவரிக்கு M.O அனுப்பி இந்த புத்தகத்தை வாங்கி விடலாம். நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால் 'ராஜகம்பீரன்' சித்திரக்கதை புத்தகத்துடன் இதனுடன் வாங்கிட மறந்திட வேண்டாம். M.O அனுப்பி பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் புத்தகம் வாங்குவது தொடர்பான தகவல்களை அவர்களே தெரிவித்து விடுவர். நண்பர்களை இப்போதும் புத்தகம் வாங்கி படித்த பிறகும் நங்களுடைய கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.



தினத்தந்தியில் ராஜகம்பீரன் பற்றிய மதிப்புரை படிக்க
ராஜகம்பீரன் சித்திரக்க்தை பற்றிய முழுமையான பதிவை படிக்க
தினமணியில் தங்கம் தம்பதி பற்றிய கட்டுரை படிக்க


Monday, September 27, 2010

ராஜராஜன் சோழன் சித்திரக்கதை பற்றி தினமணி

இந்த வார தினமணி - கொண்டாட்டம் இணைப்பு ராஜராஜன் சோழன் சிறப்பு இதழாக மலர்ந்து இருந்தது. அதில் "இராஜ கம்பீரன்" சித்திரக்கதை படைத்த ஓவியர் தங்கம் அவர்களின் பேட்டி வெளிவந்திருகிறது. அதன் ஸ்கேன் வடிவம் இதோ ....
சித்திரக்கதை எழுத்தாளர் ஒருவரின் பேட்டியை தினமணி வெளியிடுவது ஆரோக்கியமான  சங்கதி.
ஓவியர் தங்கம் பேட்டி

தினமணி கொண்டாட்டம் முகப்பு பக்கம்

ஓவியர் தங்கம் அவர்களின் துணைவி சந்திரோதயம்  அவர்களும்  "மர்ம வீரன் ராஜராஜ சோழன்" என்ற சித்திரக்கதையை வழங்கி உள்ளதாக தெரிகிறது.
"இராஜ கம்பீரன்" சித்திரக்கதை பற்றிய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்.

Friday, October 9, 2009

தமிழர் புகழ் போற்றும் இராஜ கம்பீரன் (Rajakambeeran)

வணக்கம்,
தமிழகத்திற்க்கு சற்று தொலைவில் உள்ள ஒரு தீவில் தமிழர்கள் பலர், தமிழர்களை வெறுக்கும் ஒரு கொடூரனால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். . அவர்களை மீட்க புலி கொடி பறக்கும் கப்பலில் தனது வீரர்களுடன் வருகிறார் தமிழினம் காக்கும் தலைவர். தமிழ்பற்றுள்ள வீரர்கள் அவர்களை மீட்பார்களா இல்லையா?

என்ன நண்பர்களே தமிழர்களை வருத்தும் ஈழ பிரச்சனை பற்றி கூறுவது போல இருக்கிறதா... இல்லை இது ஓவியர் ப.தங்கம் அவர்கள் படைத்துள்ள "இராஜகம்பீரன்" சித்திர கதையின் சாரம் தான்.



தமிழில் உருவாக்கப்படும் சித்திர கதைகள் அறவே நின்று விட்ட இன்றைய காலகட்டதில் வெளியிடப்பட்டு இருக்கும் முழுமையான தமிழ் சித்திர கதை தான் இராஜகம்பீரன். கிரவுன் சைஸ் அளவில் 214 பக்கங்களுடன்ம் அருமையான் சித்திரங்களுடனும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓவியர் ப. தங்கம் அவர்கள் கதையெழுதி சித்திரம் வரைந்து இந்த இதழை படைத்திருக்கிறார். 70 வயது ஆகி இருந்தாலும் தமிழ் - தமிழர் வரலாறு - சித்திரகதை ஆகியவை மேலுள்ள பற்றால் அருமையான இந்த இதழை வெளியிட்டு இருக்கிறார். இவரிடம் இருந்து இன்னும் பல வரலாறு கூறும் சித்திர கதைகளை எதிர் பார்க்கலாம் என் நினைக்கிறேன். தினதந்தி நாளிதழில் பணியாற்றி இருக்கும் தங்கம் அவர்கள், கருப்பு கண்ணாடி என்ற சித்திர கதையை உருவாக்கி உள்ளார். இந்த கதை 1960களில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. (எனது தந்தை கூட தனது சிறு வயதில் இந்த கதை படித்துள்ளதாக கூறுவார்). கன்னிதீவு கதையின் ஆரம்ப காலங்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழர் வரலாறின் மீது தீராத பற்று வைத்து இருப்பது அவர் எழுத்தில் நன்றாக தெரிகிறது.



900 ஆண்டுக்கு முன் வாழ்ந்து சரித்திரதில் முக்கிய இடம் பெற்றுள்ள இராஜராஜ சோழன் காலத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கடல் வாணிபர்கள் கடற்கொள்ளையன் ஒருவனால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க செல்லும் சோழ நாட்டு வீரர் குழு கடற்கொள்ளையர்களை வீழ்த்துகிறார்களா என்பதே கதை சுருக்கம்.

சோழர் காலத்து வரலாற்று கதையினை சித்திர கதை வடிவில் படிப்பதே மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது. கதையின் பல இடங்களில் தமிழர்களின் பழம்பெருமைகள் நன்றாகவே உணரமுடிகிறது. இராஜராஜ சோழன் தவிர கவிஞர் ஒட்டக்கூத்தர், குலோத்துங்கசோழன் ஆகியோரும் இந்த கதையில் இடம் பெற்றுள்ளனர். கூடவே ஒரு புத்தபிட்சு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். பண்டைய தமிழகத்தில் புத்த மதத்தினர் தமிழ்ர்களுடன் நல்ல நட்புடன் வாழ்ந்து இருக்கிறார்கள். (ஆனால் இன்று ?? )

பழைய தமிழர்கள் கடற்பயணத்தை எப்படி திட்டமிட்டு மேற்கொண்டார்கள் என்பதை நுணுக்கமாக விவரித்துள்ளார் ஆசிரியர். தீவில் இருக்கும் கைதிகளை மீட்கும் விதமும் ஏனோதானோ என் இல்லாமல் சுவையாகவும் நம்பும்படியாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சில காட்சிகளில் ஒரே கருத்துள்ள வசனங்கள் திரும்ப திரும்ப வருவது ஒரு சின்ன குறை. அதே போல் கதை இராஜராஜ சோழன் பற்றியதா அல்லது இரண்டாம் இராஜராஜ சோழன் பற்றியதா என்பதிலும் சிறு குழப்பம் உள்ளது.

ஓவியங்களை பொறுத்த வரை சிறப்பவாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழர்களின் கலை பன்பாட்டு அடையாளங்கள் நன்றாகவே பிரதிபலிக்கிறது. இராஜராஜ சோழனின் கம்பீர தோற்றம் மனதை கொள்ளை கொள்கிறது. (கதையின் தலைப்பு போலவே)
சித்திர கதை மட்டுமில்லாமல் பல வரலாற்று தகவல்களும், சிற்பங்களின் புகைபடங்களும் இந்த நூலில் அடங்கியிருக்கிறது.

Pic1 - கதாபாத்திரங்கள் அறிமுகம்


Pic2 - குலோத்துங்கசோழன் தனது அன்னையிடம் ஆசி பெறும் காட்சி



Pic3 கப்பல் கட்டும் இடம்

Pic4 - ராஜராஜ சோழனின் கம்பீர தோற்றங்கள்

Pic5 - கடற்பயணம் துவக்கம்

Pic6- கடற்கொள்ளையர்கள் அழிப்பு

தமிழில் இது போன்ற சித்திர கதைகள் வந்ததே இல்லை என கூறுவதை விட இது போன்று இன்னும் நிறைய கதைகள் வரவேண்டும் என்பதே என் விருப்பம். தமிழக நூலக துறை இந்த புத்தகத்தை அங்கிகரித்து நூலகங்களில் இடம்பெற செய்திருப்பது ஆரோக்கியமான செய்தி.
சென்ற பதிவிற்கு கருத்துரை எழுதிய ஓவியர் ப. தங்கம் அவர்களின் மகன் இராஜேந்திரன் தங்கமுத்து அவர்களுக்கு நன்றிகள்

புத்தக விபரங்கள்

பதிப்பகம் தங்கப்பதுமை,
முகவரி - ஞானம் நகர், 6வது தெரு மேற்கு
மாரியம்மன் கோவில் அஞ்சல்
தஞ்சாவூர்

பக்கங்கள் - 214, விலை - 145/-

Wednesday, September 30, 2009

தினதந்தி புத்தக மதிப்புரையில் "இராஜ கம்பீரன்"

(பதிவிற்க்கு செல்லும் முன்  திருமண வாழ்க்கையில் "அடி" எடுத்து வைக்கும் ரஃபிக் நண்பர்க்கு வாழ்த்துக்கள்........ ஹனிமூன் கிளம்பியாச்சா சார்?? )

இன்றைய (30/09/09)  தினதந்தி பத்திரிக்கையில் "புத்தக மதிப்புரை" பகுதியில் வெளிவந்துள்ள "இராஜ கம்பீரன்" என்ற சித்திரகதை புத்தகம் பற்றிய மதிப்புரை உங்கள் பார்வைக்கு.....



எழுத்து & சித்திரம் - தங்கம்
பதிப்பகம் - தங்கப்பதுமை, தஞ்சாவூர்.

(ராஜராஜன் கால கதை என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்)

இப்புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும்? ? இனிமேல் தான் தேட வேண்டும். கிடைக்குமிடம் தெரிந்தால் நன்பர்கள் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்....