Saturday, December 19, 2009

தாராவும் குகை மனிதர்களும்

வணக்கம் நண்பர்களே,
2009ல் பதிப்பகங்கள் மூலம் வெளியிடப்படும் சித்திரக்கதை இதழ்களில் இராஜகம்பீரம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் மற்றுமொரு சித்திரக்கதை "தாராவும் குகை மனிதர்களும்". சமீபத்தில் வாங்கிய இந்த புத்தகத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த இதழின் ஆசிரியர் இராஜதிலகம் ஆவார். அயல்நாட்டு கதை வரிசை ஒன்றை மொழிபெயர்த்து கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. தாரா என்ற செவிந்திய வீரன் தான் கதையின் நாயகன். செவிந்திய வீரன் என்றவுடன் நமது கெளபாய் கதைகளை நினைத்துகொள்ள வேண்டாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் காலத்து செவிந்திய வீரன் தான் இந்த தாரா. (டைனோசர்கள் காலத்தில் மனிதர்கள்??)


 
கதை என்னவென்று பார்ப்போமா?

செவிந்திய வீரன் தாராவிற்கு நாகரித்தில் இன்னும் பின்தங்கிய குகைவாழ் மனிதர்களின் நட்பு கிடைக்கிறது. தாரா அவர்களுக்கு படகு ஓட்டுவது நெருப்பை பயன்படுத்துவது என புதிய விஷயங்கள் பல கற்றுகொடுத்து உதவி செய்கிறான். அவர்களுக்கு புதிய வாழ்விடத்தை தேடி கொடுக்கிறான். இந்த செயல்களை செய்யும் போது அவனுக்கு நேரிடும் இன்னல்கள் தான் கதை. அப்படியென்ன இன்னல்கள்?? வேறு ஒன்றும் இல்லை. 2 பக்கத்திற்கு ஒருமுறை எதாவது கொடிய விலங்கு தாராவையும் அவன் உடன் இருக்கும் நண்பன் அந்தாரையும் தாக்க வருகிறது. அதையெல்லாம் விதவிதமாக அம்பு விட்டு கொல்கிறார்கள். இப்படியாக கதை போகிறது. இந்த புத்தகத்தில் இரண்டு கதைகள் தொகுக்கப்பட்டிருகிறது.

1. தாராவும் குகை மனிதர்களும்

2. நெருப்பு உண்டக்குவோரின் யுத்தம்



அட்டைபடம் பாத்தவுடன் மனசில் ஒட்டிகொள்கிறது. மொழி நடை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். கதை அப்படி ஒன்றும் சுவாரிஸ்யாமாக இல்லையென்றாலும் சித்திரங்கள் கலக்கலாக இருக்கிறது. விதவிதமான விலங்குகளை தரமான சித்திரங்களில் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது.கதையில் வரும் விதவிதமான விலங்குகள் குழந்தைகளை கவரும். நூலாசிரியர் விலங்குகள் ஆரய்ச்சியாளர் என்பதினால் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் எனபது என் யூகம். எப்படியிருந்தாலும் தமிழில் சித்திரக்கதை வெளியிட்டிருக்கும் இராஜதிலகம் அவர்களுக்கு நன்றிகள்.




ஆசிரியர் குறிப்பில் இவரது சித்திரக்கதைகள் தொடர்ந்து மணிமேகலை பிரசுரத்தில் வெளிவரும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். இனி வரும் இதழ்களில் கதையிலும் மொழிபெயர்ப்பிலும் இன்னும் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்பது என் விருப்பம்.


கதை முடிவில் சம்பந்தமே இல்லாமல் மாயாஜால காமிக்ஸ் என குறிப்பிடுகிறார்கள். அது என்னவென்று தெரியவில்லை.

பதிப்பகம் - மணிமேகலை பிரசுரம்

ஆசிரியர் - இராஜதிலகம்

விலை - ரு. 50

பக்கங்கள் - 72

புத்த்கம் வாங்க - 04424342926, 04424346082

Thursday, December 10, 2009

சித்திரக்கதையில் அப்புசாமி (Appusami in comics)

வணக்கம் நண்பர்களே, தமிழ் இலக்கிய உலகில் சற்று பின்தங்கிய நிலையில் இருப்பது நகைச்சுவை இலக்கியம் தான் என்பது என் கருத்து. (அடுத்ததாக குழந்தைகள் இலக்கியம்) அரிதான நகைச்சுவை கதைகளில் மிகவும் முக்கியமான கதை வரிசை அப்புசாமி - சீதாப்பாட்டி கதை வரிசையாகும். குமுததின் முக்கிய இலக்கியவாதியான பாக்கியம் ராமசாமியால் படைக்கப்பட்ட இப்பாத்திரங்கள் இன்றளவும் தமிழக மக்களால் ரசிக்கப்படுகிறார்கள்.


பெரும்பாலும் சிறுகதை / நாவல் வடிவத்திலேயே எழுதப்பட்ட இக்கதைவரிசை அவப்போது சித்திரக்கதை வடிவிலும் வந்துள்ளது. அதில் என் கைக்கு சிக்கிய ஒரு புத்தகத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

1993 யில் (1997இல் மறுபதிப்பு) மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள 52 பக்கங்கள் கொண்ட "அப்புசாமியின் கலர் டி.வி" சித்திரக்கதை புத்தகத்தின் அட்டைபடம் உங்கள் பார்வைக்கு.


இந்த இதழுக்கு சித்திரங்கள் வரைந்திருப்பது ஓவியர் ஜெயராஜ் ஆகும். இதுவரை வெளிவந்துள்ள அனைத்து அப்புசாமியின் கதைகளுக்கும் சித்திரம் வரந்திருப்பது இவரே. புத்தகதிற்கு லேனா தமிழ்வாணன் எழுதிய முன்னுரையும் இதழின் சில பக்கங்களும் உங்கள் பார்வைக்கு.






கதையில் எம்.ஜி.ஆர் தோற்றம்

அப்புசாமி கலர் டி.வி க்கு ஆசைப்பட்டு அதனால் சீதாப்பாட்டிக்கு வந்திடும் தொல்லைகள் பற்றியே கதை. நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சம் இல்லாது கதை போகிறது. நிறைய இடங்களில் வாய்விட்டு சிரிக்கலாம். சித்திரக்கதையானாலும் பெரியவர்களையும் கவரும் விதமாகவே கதை பின்னப்பட்டுள்ளது. புத்தக வடிவமைப்பை பார்க்கும் போது இந்த கதை ஏற்கனவே வார இதழ் ஏதோ ஒன்றில் வந்த கதை போல் இருக்கிறது. குமுதமாக இருக்க கூடும். ஓவியர் ஜெயராஜ் கவர்ச்சியாக படம் வரைவதில் புகழ்பெற்றவர். அவரின் ரசிகர்களுக்காக ஒரு படம்.

இந்த இதழை பொறுத்த வரை மகிழ்ச்சியான மற்றும் சோகமான செய்தி என்னவென்றால் இன்னும் இப்புத்தகம் பதிப்பகத்தாரிடம் ஸ்டாக் இருப்பதே. இன்றும் இப்புத்தகதை வாங்கலாம் என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் ஒரு சித்திரக்கதை இதழ் 12 வருடங்களாக விற்பனையாகாமல் இருப்பது ஆரோக்யமான செய்தி அல்ல.....

- - - இதழின் விலை ரூ.10 மட்டுமே. இதழை வாங்க 044 - 24342926 க்கு தொடர்பு கொள்ளவும் - --

(இந்த இதழுடன் வேறு சில சித்திரக்கதை புத்தகங்களையும் மணிமேகலை பிரசுரத்தில் வாங்கி உள்ளேன். அவற்றை பின் வரும் பதிவுகளில் எழுதலாம் என்று உள்ளேன்)
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி

அப்புசாமி - சீதா பாட்டி

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேற்கை 1 - ஓவியர் ஜெயராஜ் அவர்கள் அப்புசாமி - சீதாப்பாட்டி கதை வரிசைக்கு ஓவியம் வரைந்ததை மிகவும் பெருமையாக் குறிப்பிடுகிறார். ஓவியர் ஜெயராஜ் அவர்கள் பற்றி தினமலர்-வாரமலர் இதழில் தொடர் கட்டுரை வந்தது. அதில் சீதாப்பாட்டி, அப்புசாமி பற்றி அவர் கொடுத்துள்ள செய்தி மற்றும் பேட்டி.

                        
கேள்வி : சீதாப்பாட்டி, அப்புசாமி தாத்தா என்ற மறக்க முடியாத உருவங்களை, நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்கள் உருவான கதை பற்றி?

பிரபல எழுத்தாளரும், குமுதத்தின் முன்னாள் உதவி ஆசிரியருமான ஜ.ரா.சுந்தரேசன், காலத்தால் அழியாத, மறக்க முடியாத இரு பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.

                  ஓவியர் ஜெயராஜ்
அப்புசாமியை வைத்து முதல் கதை எழுதியபோது, என்னிடம், "நல்ல பழுத்த கிழம், நல்ல புத்தி உள்ள ஒரு கேரக்டரை வைத்து கதை எழுதப் போகிறேன்...' என்றார். கொஞ்சம் யோசித்து தாத்தா உருவத்தை வரைந்தேன். சுந்தரேசன் சாருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. உடனே அந்த டிராயிங்கை ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யிடம் காண்பித்தார்.


அவரும், "ரொம்ப பொருத்தமாக இருக்கு. அப்படியே போடுங்க...' என்று உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஜ.ரா., சொல்லாமலே நானே, அந்த தாத்தாவிற்கு ஒரு ஜோடியாக, வயதான பாட்டியின் படம் வரைந்தேன். அதுவும் அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று.

அப்புசாமி தாத்தாவின் முகத்தையே, சீதாப்பாட்டிக்கும் போட்டேன். அதற்கு மேலே தலைமுடி, மூக்குக் கண்ணாடி, குங்குமம் என்று சில எக்ஸ்ட்ரா விஷயங்களை வரைந்தேன். வாசகர்களுக்கும் இரு உருவ அமைப்புகளும் மிகவும் பிடித்து விட்டன. கிளாமராக நான் வரைந்த இளம் பெண்களின் படங்களை விட, எனக்கு அதிகமான அங்கீகாரம், புகழ்பெற்றுக் கொடுத்தது, அப்புசாமி - சீதாப்பாட்டி என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தமிழ்ப் பத்திரிகை உலகில், சாகாவரம் பெற்ற இரு பாத்திரங்கள். அவர்கள் ஏற்கனவே நல்ல வயதானவர்கள் என்பதால், அவர்களுக்கு இனி வயதாகாது. இவர்களின் உருவங்களைத் தான், நான் என் விசிட்டிங் கார்டில், ஒரு ஓவியன் என்று சட்டென்று விளங்க, உபயோகப்படுத்துகிறேன்.

சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்ற மூன்று வடிவங்களிலும் வந்திருக்கும் ஒரே கதை (நான் அறிந்தவரை) சீதாப்பாட்டி - அப்புசாமி கதை. குமுதம் முன்னாள் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமஸ்வாமி (அவரது பெற்றோர் பெயரில்) என்ற பெயரில் எழுதிய அந்தக் கதைக்கு, ஆரம்பம் முதலே படம் வரையும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பல ஆண்டுகள் குமுதத்திலும், பிறகு விகடன், குங்குமம், கல்கி என்று பல பத்திரிகைகளிலும் அப்புசாமி கதைகள் வந்தன. எந்த பத்திரிகையில் அப்புசாமியின் கதை வந்தாலும், அதற்கு படம் போடும் வாய்ப்பை, தொடர்ந்து எனக்கே கொடுத்தனர். இதுவும் ஒரு வகை சாதனை தான்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேற்கை 2 - அப்புசாமி காமிக்ஸ் பற்றி ஏற்கனவே லக்கிலூக் வலைதளத்தில் விவாதம் நடந்துள்ளது. இங்கு ஒரு அப்புசாமி - சீதாப்பாட்டி சித்திர சிறுகதையும் நீங்கள் படிக்கலாம். அதற்க்கான தொடர்பு


கிழக்கு பதிப்பகத்தினர் அப்புசாமியின் கதைகளை சித்திரக்கதைகளாக வெளியிட போவதாக கூறி இருந்தனர். அதற்க்கான தொடர்பு

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவினை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறிவிடுங்கள்