Sunday, December 16, 2012

ப்ளாண்டி (Blonde in Tamil)


குமுதத்தில் 1990 களில் வெளிவந்த 'ப்ளாண்டி' என்ற சித்திரக்கதை தொடர் பற்றியும் அதன் ஸ்கேன்கள் சிலவற்றையும் இந்த பதிவில்  பார்ப்போம். எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து குமுதம் வாங்கப்பட்டு வருகிறது. எழுத்து கூட்டி படிக்கும் காலங்களில் வெளிவந்த பிளாஷ் கார்டன் கதைகளும் பிளாண்டியும் தான் எனக்கு முதன் முதல்லில் அறிமுகமான காமிக்ஸ் வடிவ கதைகளாக இருக்க கூடும்.


பரந்து விரிந்த பாலைவனம், வேறுபட்ட ஒரு காலகட்டம் என்று வித்தியாசமான கதைத்தளம் கிடையாது, விதவிதமான கதாப்பாத்திரங்க கிடையாது, பரபரப்பன சம்பவங்கள் கிடையாது. கணவன் - மனைவி, வீடு, அலுவலம் மற்றும் இன்னும் ஐந்து ஆறு கதாப்பாத்திரங்கள் இவற்றை வைத்துக்கொண்டும் இனிமையான பல கதைகளை ஒவ்வொரு வாரமும் ஒன்று என வழங்கி உள்ளார்கள்.  ப்ளாண்டி என்ற அழகான, சுறுசுறுப்பான பெண், மற்றும் அவளின் கணவன் இவர்களே இந்த தொடரின் பிரதான பாத்திரங்கள். இத்தொடர் பற்றிய மேலதிக தகவல்களை விக்கியிலும், ப்ளாண்டி பிரதான வெப் சைட்டிலும் பார்க்கலாம்.

குமுதத்தில் வெளிவந்த சில ப்ளாண்டி பக்கங்களை  காணலாம்.
முழுவதும் படித்தீர்களா நண்பர்களே..  தங்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே. நீங்கள் ஆங்கிலத்தில் இன்னும் நிறைய ப்ளாண்டி கதைகளை படிக்க விரும்பினால் இங்கு உங்கள் வாசிப்பை தொடரலாம் நண்பர்களே. 

Monday, August 27, 2012

குமுதத்தில் படக்கதை

ரொம்ப நாட்களுக்குப் பின் குமுதத்தில் படக்கதை. மாற்றான் படத்தை முன்னிட்டு பழைய கதை ஒன்றை கலரடித்து 22/08/12 இதழில் வெளியிட்டு உள்ளார்கள். இன்னும் நிறைய தகவல்கள் ஸ்கேனில் நீங்கள் பார்க்கலாம். (இவ்வளவு நாளா யாருமே இத பத்தி போஸ்ட் போடலயே.. ஏன்)


Thursday, July 19, 2012

நல்லதங்காள் கதைச்சுருக்கமும் சில சித்திரங்களும்

நல்லதங்காள் கதைச்சுருக்கம்:


நல்லதங்காள் பிறப்பு மற்றும் திருமணம்:
மதுரை பட்டணத்தை ஆட்சி செய்து வந்தார் ராமலிங்கன் எனும் அரசர். அவரின் மனைவி இந்திராணி. அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை நல்லதம்பி. அவனின் தங்கையாக பிறந்தவள் தான் நல்லதங்காள். நல்லதம்பி இளைஞனாக உருவெடுத்தபின் மூளியலங்காரி என்னும் பெண்ணிற்கு மணம் முடித்து வைத்தனர் அவனின் பெற்றோர். மூளியலங்காரிக்கு நல்லதங்காளை அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நல்லதம்பி அளவு கடந்த பாசத்தை தன் தங்கை மீது வைத்துள்ளான். சிறிது காலத்திற்குப்பின் ராமலிங்கன் தான் மூப்படைந்ததால் அரச பொறுப்புகளை தன் மகனிடம் ஒப்ப்டைத்துவிட்டு இயற்கை ஏய்தினார். இந்திராணியும் சிறிது நாட்களில் இயற்கை ஏய்தினார்.
பிறகு நல்லதங்காளுக்கு காசிராஜன் என்னும் அரசனை வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்தான் நல்லதம்பி. நல்லதங்காளும் காசிராஜனும் இனிமையான மண வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆண்டுக்கு ஒன்று வீதமாக ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தாள் நல்லதங்காள்.

காசிமாநகரில் பஞ்சம்:
பிறகு காசிராசனின் நாட்டில் (காசிமாநகர்) கடும் பஞ்சம் வந்தது. காசிராசனின் வீட்டில் இருந்த தானியங்கள் அனைத்தும் தீர்ந்து போனது. கணவனின் பேச்சையும் மீறி தன் சகோதரனின் வீட்டிற்கு ஏழு குழந்தைகளுடன் புறப்படுகிறாள் நல்லதங்காள். தன் தாய் வீட்டிற்கு செல்லும் வழியில் காடு ஒன்றில் வழி தவறுகிறாள். ஆனால் இதை தன் கனவு ஒன்றின் மூலம் ஊகித்த நல்லதம்பி ஏப்படியோ அவளை கண்டுபிடிக்கிறான். கண்டுபிடித்தபின் தன் தங்கையை முதலில் தன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். அவன் சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறுகிறான்.

நல்லதம்பி வீட்டில் நல்லதங்காள்:
தன் தாய்வீட்டை அடைந்த நல்லதங்காளுக்கு அவளின் அண்ணி கதவை திறக்காமல் புறக்கணிக்கிறாள். வேதனையுற்ற நல்லதங்காள் தன் புனிதத்தின் மேல்கொண்ட சாபத்தினால் கதவைத்திறந்து உள்ளே செல்கிறாள். அங்கு குழந்தைகள் அங்கும்மிங்கும் ஓடியாடி அங்கிருந்த பழங்களை உண்ண ஆரம்பித்தனர். இதனை கண்ட நல்லதங்காள் அண்ணி அக்குழந்தைகளை அடித்து துன்புறுத்த ஆரம்பித்துவிட்டாள். மனம் நொந்த நல்லதங்காள் தன் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டிலிருந்து அண்ணனின் வருகைக்கும் காத்திறாமல் வெளியேருகிறாள்.

நல்லதங்காள் முடிவு:
வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று அங்கு மாடு மேய்ப்பவர்களிடம் இங்கு பாழுங்கிணறு எங்குள்ளது எனக் கேட்டு ஒரு பாழுங்கிணறு சென்றடைகிறாள். பஞ்சம், அண்ணியின் புறக்கணிப்பு, குழந்தைகளின் பசி ஆகியவற்றால் வேதனை அடைந்து அக்கிணற்றிலே குழந்தைகளை போட்டு தானும் குதித்து விடுகிறாள்.
இதனை அறிந்த நல்லதம்பி கடும் வேதனையும் தன் மனைவி மீது கோபமும் அடைகிறான். மூளியலங்காரியை கொன்றுவிட்டு தானும் மரணத்தை அடைகிறான். இதனிடையில் காசிநாட்டில் பஞ்சம் நீங்கி காசிராஜன் நல்லதங்காளை தேடி வருகிறான். ஆனால் அவன் கேள்விப்பட்ட செய்திகளின் துயரம் தாங்காமல் அவனும் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அப்போது இவர்களின் நல்ல உள்ளம் அறிந்த சிவபெருமான் அனைவருக்கும் மீண்டும் உயிரூட்டுகிறார்.

நல்லதங்காள் சில சித்திரங்கள்:
இங்கிருக்கும்  ஓவியங்கள் http://www.tamilheritage.org/ எனும் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் புகழேந்தி புலவரால் இயற்றப்பட்டுள்ளது. உரைநடைக்கும் செயுள்நடைக்கும் இடைப்பட்ட ஒரு நடையில் ஒரு நடையில் இந்த புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. புத்தகம் வெளிவந்த ஆண்டு தெரியவில்லை. கோவில்களில் வரையப்படும் ஓவியங்கள் பாணியில் சித்திரங்கள் உள்ளன. மிகவும் நுணுக்கமான மற்றும் நேர்த்தியான சித்திரங்கள்.  சித்திரக்கதைகளுக்கு பொருத்தமான பாணி என்று எண்ணுகிறேன். ஓவியர் பெயர் இல்லை.

புத்தகத்தின் முதல் பக்கம்

நல்லதங்காளுக்கும் காசிராஜனுக்கும் வெகுவிமர்சையாக திருமணம் நடக்கும் காட்சிகள்


காசிநாட்டில் பஞ்சம்

கணவன் சொல்லை மீறி ஏழு குழந்தைகளுடன் தன் அண்ணன் வீட்டிற்கு புறப்படும் நல்லதங்காள். அப்போது தோன்றிய கெட்ட சகுனங்களும் பட்டத்தில் காட்டப்பட்டிருக்கிறது

தன் அண்ணன் வீட்டு வாசலில் நல்லதங்காளும் அவள் குழந்தைகளும். உள்ளிருக்கும் காவலாளியிடம் அண்ணியிடன் தான் வந்திருப்பதாக எடுத்துக்கூற சொல்லி வேண்டுகோள் விடுக்கும் காட்சி

அண்ணன் வீட்டில் நல்லதங்காளின் குழந்தைகள் அவள் அண்ணியினால் துன்புறுத்தப்படும் காட்சி

அண்ணன் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பாழுங்கிணறு எங்குள்ளது என்று மாடு மேய்க்கும் ஆட்களிடம் நல்லதங்காள் கேட்கும் காட்சி.
(பிறகு இவர்களிடம் விசாரிப்பதன் மூலமாகத்தான் நல்லதம்பி நல்லதங்காள் கிணற்றில் இறங்கிய இடத்தை கண்டுபிடிக்கிறான்)

குழந்தைகள் ஒவ்வொன்றையும் கிணற்றில் போடும் காட்சி. ஒரு பையன் மட்டும் தனக்கு சாக பிடிக்கவில்லை என்று விலகி ஓடுகிறான். (அவனையும் விரட்டிப்பிடித்து கிணற்றில் போடுவதாக செல்கிறது கதை)

நல்லதம்பி தன் தங்கை மற்றும் தங்கை குழந்தைகளின் சடலங்களை கிணற்றில் இருந்து மீட்டு எரிக்கும் காட்சி

தன் மனையிடம் கடுங்கோபத்துடன் தங்கை பற்றி விசாரிக்கும் நல்லதம்பி

நல்லதம்பியும் காசிராஜனும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி.
(இருவரின் கையிலும் கத்தி இருப்பதை கவனிக்க)


நல்லதங்காள் கதையானது நாட்டாரியல் கதை என்று வகைப்படுத்தப்படுகிறது. இன்றும் சில கிராமங்களில் வாய்வழியாக இந்த கதை சொல்லப்பட்டு வருகிறது. நான் படித்த மணிமேகலை பிரசுரத்தின் புத்தகத்தில் இது ஒரு அரச குடும்ப கதையாக சொல்லப்படுகிறது. இணையத்தின் சில இடங்களில் சாதாரண குடும்ப கதையாகவும் சொல்லப்படுகிறது.கதை இணையத்தில் படிக்க... இணைப்பு1இணைப்பு2.
tamil heritage தளத்தில் படிக்க 
மணிமேகலை பிரசுரத்தில் புத்தகமாக வாங்கிப்படிக்க

Thursday, July 12, 2012

முத்து காமிக்ஸ் - சில தகவல்கள்

வணக்கம், சமீபத்தில் முதலை பட்டாளம் முத்து காமிக்ஸின் முழு  நீள பட்டியலை வெளியிட்டு இருந்தார். அவரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பதிவு. அதிக முறை தலைகாட்டிய ஹீரோ யார் என்பதை தெரிந்துகொள்ள செய்த வேலைகள் அப்படியே இந்த பதிவில் கொண்டு விட்டு உள்ளன. முத்து காமிக்ஸ் பற்றிய சில நுண் தகவல்களை பார்ப்போம். 


எதிர்பார்த்த படியே மாயாவிதான் முத்துவின் நெ. 1. அவருக்கு அடுத்த இடத்தில் லாரன்ஸும் மூன்றாம் இடத்தில் ஜானி நீரோவும் உள்ளனர்.
இன்றைய தலைமுறை நாயகர்களில் டைகர் மட்டுமே டாப்-10ல் இடம் பெறுகிறார்.
இந்த அட்டவனையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதல் 5 இடங்களை பிடித்த நாயகர்கள் பட்டியலிடப்பட்டு உள்ளார்கள்.
எந்த ஒரு ஹீரோவும் அனைத்து மூன்று காலகட்ட டாப்-5 யில் இடம் பெற முடியவில்லை. முதல் 200 இதழ்கள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த மாயாவி அதன் பின் காணாமல் போகிறார்.

கதைகளின் தாயகத்தைப் பொறுத்தவரை அமெரிக்க காமிக்ஸ்களும் இங்கிலாந்து காமிக்ஸ்களும் கிட்டதட்ட சம அளவில் வெளிவந்துள்ளன. 200 இதழ்களுக்க பிறகுதான் ஐரோப்பிய கதைகளின் ஆதிக்கம் துவங்குகிறது. இன்றைய நிலையில் கிட்டதட்ட அனைத்து அமெரிக்க-இங்கிலாந்து நாயகர்களும் கைவிடப்பட்ட நிலையில் ஐரோப்ப காமிக்ஸ்களின் ஆதிக்கம் இன்னும் விரிவடையும் என் நம்பலாம்.


கதைகளை துள்ளியமாக வகைப்படுத்துவது என்பது இயலாத காரியம். எனக்கு  ஆக்சன் ஆகத் தோன்றும் கதை உங்களுக்கு துப்பறியும் கதையாகவோ சில பேர்க்கு thriller ஆகவோ தோன்றலாம். என்னை பொருத்த வரை மாயாவி, வேதாளர், மாண்டிரெக், மார்ட்டின் ஆகியோர் fantasy வகையில் வருகிறார்கள்.
மேலும் சில தகவல்கள்:

1. முத்து காமிக்ஸில் தொடர்ச்சியாக அதிக முறை இடம் பிடித்த ஹீரோக்கள் மாயாவி மற்றும் டைகர். மாயாவி முத்துவின் முதல் நான்கு இதழ்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று உள்ளார். டைகர் 294ல் இருந்து 297 வரை தொடர்ச்சியாக நான்கு இதழ்களில் இடம் பெற்று உள்ளார்.

2. அதிக விலை (ரூ 100) கொண்ட இதழ் 'என் பெயர் லார்கோ'  (வெ.எண் 314).  அதே சமயம் இந்த இதழ்தான் அனைத்து (லயன்+முத்து) 100 ரூபாய் இதழ்களிலேயே குறைந்த பக்கங்களை கொண்ட இதழ்.

3. ஜப்பான் நாட்டை மூலமாக கொண்டு 'நாடோடி ரெமி' என்ற கதை முழு வண்ணத்தில் பெரிய சைஸில் இதழ் எண்.135ல் வெளிவந்துள்ளது.

4. விங் கமெண்டர் ஜார்ஜின் கதைகள் அனைத்து காலகட்டங்களிலும் பரவலாக காண்ப்படுகிறது.

இறுதியாக ....:  ரொம்ப நாட்களாக excel மற்றும் power pointல் தமிழில் வேலை செய்ய வேண்டும் என்ற என் ஆசை இந்த பதிவு மூலம் சற்று நிறைவேறி உள்ளது. இந்த பதிவின் முதுகெலும்பு முதலைப்பட்டாளம் என்றே கூற வேண்டும். ஏற்கனவே கூறிய படி அவரின் லிஸ்டில் இருந்துதான் இந்த முழு பதிவும் தயார் செய்யப்பட்டது.
* இங்கு மறுபதிப்பு இதழ்கள் தனியாக பிரிக்கப்படவில்லை.
* ஒரே இதழில் ஒன்றுக்கு மேறபட்ட நாயகர்களின் கதைகள் இடம் பெறும் பட்சத்தில் முதன்மையான் ஹீரோவின் கதை மட்டுமே  கணக்கில் கொள்ளப் படும். (முதலை நண்பர் தனது பதிவில் அப்படித்தான் போட்டு உள்ளார்).
முடிந்த வரை தவறுகள் இல்லாமல் ரெடி செய்துள்ளேன். தவறுகள் இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டவும்.

Wednesday, April 25, 2012

STR சசித்திர கதைகள்

வணக்கம் நண்பர்களே,


பழைய இதழ்களை புரட்டிக் கொண்டு இருக்கையில் கண்ணில் பட்ட ஒரு வித்தியாசமான சித்திரக்கதை இதழ் பற்றி இந்த பதிவு. STR சசித்திர கதைகள் - இப்படி ஒரு சித்திரக்கதை இதழ் கேரளத் திருநாட்டின் கொச்சின் நகரில் இருந்து 1986 களில் வெளிவந்து இருக்கிறது. சித்திரக்கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் சரித்திரக்கதைகள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது என்ன சசித்திர கதைகள்?. சத்தியமாக எனக்கு தெரியாது. இப்படி ஒரு தமிழ் வார்த்தை உள்ளதா என்ன?

STR publications நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த இதழின் 9வது இதழின் அட்டைப்படம் மற்றும் சில ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு. இதழ்களை பார்க்கையில் அமர் சித்திரக்கதா இதழ் வடிவில் வெளியிட முயற்சி செய்து இருப்பார்கள் போல. சித்திரங்களும் கதையும் சுமார் ரகம் மட்டுமே. STR சசித்திர கதைகள் இதழ் ஆங்கிலம், இந்தி, மலையாளம், பெங்காலி மொழிகளில் வெளிவருவதாக கூறுகிறார்கள்.

                                                              அட்டைப்படம்:

                                                      கதை முதல் பக்கம்
 

                                                           ஆசிரியர் பகுதிசம்ஹாரம் கதைச்சுருக்கம் - நான்கு ஆண்களுக்குப் பிறகு பெண் குழந்தையான பவானி ஒரு தீவிர தேவி பக்தை. பவானியின் நான்கு அண்ணிகளுக்கும் பவானியை பிடிக்கவில்லை. சதி மேல் சதிகள் பல செய்து அவர்கள் பாவானியின் அண்ணன்கள் மூலமாகவே அவளை கொன்று விடுகிறார்கள். ஆனால் தேவியின் அருள் மூலமாக பவானி உயிர்த்தெழுகிறாள். சதிகார அண்ணிகள் தண்டிக்கப்படுகிறார்கள். பவானி வெட்டப்பட்டு உயிர்த்தெழுந்த இடம் மக்களால் பவானியம்மா கோவில் என்ற பெயரில் வழிபாட்டு தளமாக இன்றும் விளங்குவதாக முடிக்கிறார்கள்.

                                                    எதோ ஒரு தொடர்கதை

அடுத்த இதழ் பற்றிய விளம்பரம்: இந்த விளம்பரத்தைக் கொண்டு இவ்விதழ் பக்தி கதைகளை மட்டும் வெளியிடவில்லை எனத்தெரிகிறது. (விடுதலைப்புலி என்ற தலைப்பில் வேறு எதாவது கதை படித்துள்ளீர்களா?)

இந்த வித்தியாசமான சித்திரக்கதை இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

(update: நண்பர் விஸ்வா அளித்த தகவல் படி STR சசித்திரக்கதைகள் மொத்தம் 27 இதழ்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது)
Friday, March 23, 2012

தமிழ்ச் சித்திரக்கதைகள் ஒரு அறிமுகம்


மொழிமாற்றம் இல்லாமல் தமிழ் மொழியிலேயே உருவாக்கப்படும் சித்திரக்கதைகளைத் தமிழ்ச் சித்திரக்கதைகள் எனக் கொள்ளலாம். முதல் தமிழ்ச் சித்திரக்கதை எது என்ற குழப்பம் காமிக்ஸ் குறித்து ஆய்வு செய்யும் அனைவரிடமும் காணப்படு கிறது. இது குறித்து சில கூற்றுகள்:


1. ஆனந்த விகடன் (17-02-2010) இதழின் பொக்கிஷம் பகுதியில் தமிழின் முதல் சித்திரக்கதை பற்றிய குறிப்பில் இவ்வாறு கூறப்படுகிறது. “தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன் முறையாகப் படக்கதை இந்த ஆண்டு (1956) முதல் விகடனில் வெளியாகியுள்ளது. “ஜமீன்தார் மகன்” என்னும் அக்கதைக்குப் படங்கள் வரைந்தவர் மாயா”.

2. தமிழம் ம.நடேசன் (பொள்ளாச்சி நசன்) அவர்கள் தமிழின் சிறுபத்திரிகைகள், மாத, வார இதழ்களைத் தமிழம் என்னும் இணையப் பக்கத்தில் ஆவணப்படுத்தி வருகிறார். அதில் 1950இல் வெளியான ‘சித்திரக்குள்ளன்’ என்னும் சிறுவர் இதழ் பற்றி இவ்வாறு கூறுகிறார். கேலிச்சித்திரக் கலைஞர் சந்தனு நடத்திய இந்த இதழில் “வேதாள உலகத்தில்” என்ற கேலிச்சித்திரத் தொடர்கதை இடம்பெற்றுள்ளது. 1948இல் வெளிவந்த ‘டமாரம்’ இதழின் முதல் பக்கமே சித்திரக்கதை ஒன்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. எனவே ஆனந்தவிகடனின் கூற்று தவறு என்பதையும், அதற்கு முன்பே தமிழில் சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. எனினும் முதல் சித்திரக்கதை எது என்பதில் சிக்கல் நிலவுவதையும் அறியலாம்.

தமிழ்ச் சித்திரக்கதைகள் ஒரு பகுப்பு

தமிழ்ச் சித்திரக்கதைகளை வெளியீட்டின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

1. மாத, வார இதழ்களின் தொடர்கதைகளாக இடம் பெற்றவை.

2. தனிச்சித்திரக்கதை இதழ்களில் இடம்பெற்றவை.

3. சிறுவர் இதழ்களில் இடம்பெறும் கதைகள்.

4. பதிப்பகங்களிலிருந்து புத்தகங்களாக வெளிவந்தவை.

மாத, வார இதழ்களில் தொடர்கதைகளாக இடம்பெற்றவை

ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, குங்குமம் ஆகிய பத்திரி கைகளின் பழைய இதழ்களில் தொடர்ச்சியாகச் சித்திரக்கதை கள் வெளியிடப்பட்டன. பெரியவர்களும் சிறியவர்களும் படிக்க ஏதுவான கதை அம்சங் களையே இக்கதைகள் கொண் டிருந்தன. வாண்டுமாமாவின் பல படைப்புகள் இவ்விதம் உருவாக்கப் பட்டவையே. இவற்றில் வெளியான பெரும் பாலான கதைகள் 20-30 வாரங்களில் முடியக்கூடியவை. இவற்றில் வெறும் துப்பறியும் கதைகள்- சிறுவர் கதைகள் மட்டுமில்லாது, காதல் கதைகள், குடும்பப் பிரச்சனைகள், அறிவியல் புனைவுகள் எனப் பலவித ரசனைகளில் சித்திரக் கதைகள் வெளிவந்தன. அந்த காலகட்டத்தின் சுவடுகள், உடையலங்காரங்கள், பேச்சு வழக்கு, அக்கால சமூகப் பிரச்சனைகள் என அனைத்தையும் பிரதிபலிக்கும் கதைகளாக இவை விளங்குகின்றன. பெரும்பாலும் சித்திரக் கதைகள் இதழ்களில் வரும்போது அதன் படைப்பாளி பற்றிய குறிப்புகள் அதில் இடம்பெறுவதில்லை (உ.ம்: குமுதம்). எனினும் சில இதழ்கள் அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத் துள்ளன (உ.ம்: கல்கி). தமிழின் பல தரமான சித்திரக்கதைகள் இந்தப் பகுப்பிலேயே அடங்கும்.

தொடர்கதைகளாக வெற்றிபெற்ற பல கதைகள் முழுநீள சித்திரக்கதைகளாகவும், பதிப்பக வெளியீடுகளாகவும் வந்துள் ளன. இத்தகைய கதைகளை முக்கிய அங்கமாகக் கொண்ட இதழ்களில் ‘பார்வதி சித்திரக்கதைகள்’ முக்கியமான இதழாகும். “ஓநாய்க் கோட்டை”, “கனவா நிஜமா”, “அவள் எங்கே?”, “டயல் 100” போன்ற கதைகள் சித்திரத் தொடர்கதை களாக வந்தபோதும், பிற்காலத்தில் பார்வதி சித்திரக்கதை களில் முழுநீள கதைகளாக வந்தபோதும் மாபெரும் வெற்றி பெற்றன. கல்கியில் அக்கதைகளைச் சிறுவர்களாகப் படித்த வாசகர்கள் பிற்காலத்தில் பார்வதி சித்திரக்கதையில் பெரியவர்களாகிப் படித்து தங்களது சிறுவயது நினைவுகளுக்குச் சென்றனர்.

தமிழ்நாட்டில் பொதுவாகச் சித்திரக்கதைகள் மீதான பார்வை அவை குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை மற்றும் குழந்தைகளால் மட்டுமே விரும்பிப் படிக்கப் படுகின்றன என்பதாகும். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் 1960-1980 வரை வெளியான சித்தரக்கதைகளை அவர்கள் படிப்பார்களேயானால் இந்தப் பார்வையைக் கண் டிப்பாக மாற்றிக்கொள்வார்கள். பல குடும்பக் கதைகளையும், காதல் கதைகளையும், சமூகக் கதைகளையும் இந்தவரிசையில் பார்க்கலாம். அவள் எங்கே (கௌசிகன்), சந்திரனே சாட்சி (கௌசிகன்), ‘கண்ணாடி மாளிகை’ ராஜயோகம் போன்ற கதைகள்; சித்திரக்கதைகள் சிறுவர்களுக்கானது என்ற கூற்றை தவறானது என்று நினைக்க வைக்கின்றன. இவற்றில் பெரும் பாலன கதைகள் நடுத்தர மக்களின் வாழ்வியலோடு தொடர்பு டையதாகவும், சரித்திரக்கதைகளாகவும், அறிவியல் புனைவுகளாகவும் வெளிவந்துள்ளன.


தமிழ் சித்திரக்கதை இதழ்கள்

தமிழ்ச் சித்திரக்கதைகளில் பெரும்பாலானவை முழுநீள சித்திரக்கதை இதழ்களில் இடம்பெற்றவையாகும். வாண்டுமாமா, முல்லை தங்கராசன், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். இவ்வகை இதழ்கள் பல வெளிவந்தபோதிலும் அவற்றில் வெற்றிபெற்றவை மிகச் சில மட்டுமே. பார்வதி சித்திரக்கதைகள் (வாண்டுமாமா), மதி காமிக்ஸ் (முல்லைத் தங்கராசன்), பொன்னி காமிக்ஸ் (ஸ்ரீகாந்த், விவேகா) ஆகிய காமிக்ஸ்கள் ஓரளவு வெற்றிபெற்றன. ஆனால் மொழிபெயர்ப்புச் சித்திரக் கதை இதழ்களான ராணிகாமிக்ஸ், முத்து, லயன் ஆகியவற்றின் வர்த்தக வெற்றியுடன் ஒப்பிடுகையில் தமிழ்ச் சித்திரக்கதை களின் வெற்றி மிகச்சிறியது ஆகும்.

தரமில்லாத கதைகள் சுமாரான சித்திரங்கள், மோசமான விநியோக முறை ஆகியவையே இவ்விதழ்களின் தோல்விகளுக்குக் காரணம். இக்கதைகள் தமிழில் உருவாக்கப்பட்டாலும் ஆங்கிலத் துப்பறியும் சித்திரக் கதைகளின் சாயலிலேயே படைக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணம். வெகுசில கதைகளே இந்திய-தமிழகப் பின்னணி யில் நடைபெறுவதாகப் படைக்கப்பட்டிருந்தது. வாண்டுமாமா கதைகள் அனைத்தும் நம்நாட்டு கலாச்சாரத்தை அடிப் படை யாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய கால கட்டத்தில் இவ்வகை இதழ்கள் எதுவுமே வருவதில்லை. இறுதி யாக வந்த இதழ் ‘தேசமலர் காமிக்ஸ்’ (2008) ஆகும். அதற்கு முன் ‘தினபூமி காமிக்ஸ்’ 2004 வரை தொடர்ச்சி யாக வந்து பிறகு நின்றுபோனது. பூவிழி காமிக்ஸ், தேசமலர் காமிக்ஸ் போன்ற இதழ்கள் கோடை விடுமுறையின்போது மட்டுமே வெளிவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தன.


சிறுவர் பத்திரிகைகளின் சித்திரக்கதைகள்

சித்திரக்கதைகள் சிறுவர்களுக்கானவை என்ற எண்ணம் இங்கு மேலோங்கி இருப்பதால் சிறுவர் பத்திரிகைகளில் சித்திரக்கதைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இங்கும் நம் நினைவிற்கு முதலில் வருவது வாண்டுமாமாவின் படைப்புகளே ஆகும். சமத்துச்சாரு, குஷிவாலி ஹரிஷ், பலே பாலு போன்ற பாத்திரங்கள் முதன்முதலில் இடம்பெற்றது கோகுலத்தில் தான். 1948இல் வெளிவந்த டமாரம் என்ற சிறுவர் இதழின் அட்டைப்படத்தை அலங்கரிப்பதே ஒரு சித்திரக்கதைதான். அதுபோல் 1950இல் வெளிவந்த சித்திரக் குள்ளன் இதழில் ஓவியர் சந்தனுவின் காட்டுச்சிறுவன் கண்ணன் என்னும் சித்திரத் தொடர்கதையும், வேதாள உலகத்தில் விச்சு என்னும் சித்திரச் சிறுகதையும் இடம்பெற்றுள்ளன. கண்ணன், அணில்மாமா, ரத்தினபாலா, கோகுலம், பூந்தளிர், தினமலர்-சிறுவர்மலர், தினத்தந்தி-தங்கமலர், தினபூமி-சிறுவர்பூமி, தினமணி-சிறுவர்மணி, பூந்தளிர், சுட்டிவிகடன், பாலமித்ரா, பாப்பாமலர் ஆகியவற்றைத் தமிழில் வெளிவந்த முக்கிய சிறுவர் பத்திரிகைகளே எனக் கூறலாம். இவற்றோடு சம்பக், அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்கள் மொழிபெயர்ப்பு பத்திரிகைகளாக இன்னும் வெளிவருகின்றன.

மேற்கூறிய சிறுவர் பத்திரிகைகளில் பல காலங்களில் பல வடிவங்களில் பல தரங்களில், பல படைப்பாளிகளினால் பல சித்திரக்கதைகள் வந்திருக்கின்றன. தொடர் சித்திரக்கதைகள், 4 பக்கக் கதைகள், ஒரு பக்கக் கதைகள், 16 பக்கக் குறுங்கதைகள் எனப் பல வடிவிலான சித்திரக்கதைகளை இந்தச் சிறுவர் பத்திரிகைகளில் பார்க்கலாம். கோகுலத்தில் வாண்டுமாமா வின் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. 1985-90களில் கோகுலத்தில் கல்கி அவர்களின் புதல்வியான ஆனந்தி அவர் களின் கைவண்ணத்தில் ஒவ்வொரு இதழிலும் 16 பக்க சித்திரக் கதை ஒன்று வெளிவரும். ஒவ்வொரு கதையும் புராண, சரித்திர பின்னணி கொண்டதாக இருக்கும். அக்கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர் வினு.

பூந்தளிர், தினத்தந்தி-தங்கமலர், தினமலர்-சிறுவர்மலர் ஆகிய இதழ்களில் நேரடி தமிழ்ச் சித்திரக்கதைகளைவிட வடநாட்டில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சித்திரக்கதை கள் அதிகம் வெளிவந்தன. மற்ற வகைச் சித்திரக்கதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தச் சிறுவர் சித்திரக்கதைகளுக்கு உண்டு. ஆம் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்வழி சித்திரக்கதைகள் இவை மட்டும்தான்.


பதிப்பக தமிழ்ச் சித்திரக்கதைகள்

வார, மாத இதழ்களாக அல்லாமல் பதிப்பகங்கள் மூலமாக வெளியிடப்படும் சில சித்திரக்கதைப் புத்தகங்களும் உண்டு. வானதி பதிப்பகம், மணிமேகலை பிரசுரம் ஆகிய பதிப்பகங் கள் சில சித்திரக்கதைகளை வெளியிட்டுள்ளன. பதிப்பகங்க ளால் வெளியிடப்படும் சித்திரக்கதைகளில் பல ஏற்கனவே ஏதாவது வார, மாத இதழ்களில் வந்தவையாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஓவியர் தங்கம் அவர்களின் “இராஜகம்பீரன்”, சந்திரோதயம் அவர்களின் “மர்மவீரன் ராஜராஜசோழன்” அமுத நிலையத்தின் ‘புராண சித்திரக்கதை கள்’ போன்றவை இதில் அடங்கும்.

தமிழ்ச் சித்திரக்கதைகளை வெளியிட்ட தமிழ்க்காமிக்ஸ் சிலவற்றையும், அவற்றில் பங்குகொண்ட படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளும் கீழே தரப்பட்டுள்ளன. (இங்கு குறிப்பிட்டுள்ள படைப்பாளிகள் தவிர வேறுசில படைப்பாளிகளின் பங்கும் அந்தச் சித்திரக்கதைகளில் இருக்கும்)

மதி காமிக்ஸ் - முல்லை தங்கராசு, செல்லம், பார்வதி சித்திரக்கதை - வாண்டுமாமா, செல்லம், ரமணி, பாப்பா காமிக்ஸ் - வாண்டுமாமா, பொன்னி காமிக்ஸ் - ஸ்ரீகாந்த், விவேகா, பாலமோஹன், மலர் காமிக்ஸ் - ஸ்ரீகாந், பூவிழி காமிக்ஸ் - ஐஸ்வர்யா, ஸ்ரீகாந்த், பிரைட் மூன் காமிக்ஸ் - ஐஸ்வர்யா, ஸ்ரீகாந்த், தேசமலர் காமிக்ஸ் - ஐஸ்வர்யா, ஸ்ரீகாந்த், தினபூமி காமிக்ஸ் - ஸ்ரீகாந்த், அமித் காமிக்ஸ் (சங்கர்லால்) - தமிழ்வாணன், புஜ்ஜாய், ராமு, மாயாவி காமிக்ஸ் - முல்லை தங்கராசன், செல்லம், சக்தி காமிக்ஸ் - முல்லை தங்கராசன், மங்க்கி காமிக்ஸ் - ராஜ்பிரசாத், புஜ்ஜாய், மாருதி, மலர்மணி காமிக்ஸ் - பொன்னி காமிக்ஸ் குழுமம், சித்தன் காமிக்ஸ் - மாசிலா, ரேகா காமிக்ஸ் - மனோகரன், ஜெயராஜ், சூர்யா காமிக்ஸ், வாசு காமிக்ஸ், ராஜா காமிக்ஸ்.
மாற்றுவெளி ஆய்விதழ் சித்திரக்கதை சிறப்பிதழில் இடம் பெற்ற கட்டுரை. இதர கட்டுரைகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

நன்றி - இணைய நண்பர்கள், மாற்றுவெளி ஆய்விதழ், சு.பிரபாவதி, கண்ணன்.எம், கீற்று இணையதளம்.

Saturday, January 21, 2012

புத்தக கண்காட்சி இரண்டாவது சுற்று - 2012

புத்தக கண்காட்சியின் இறுதி நாளன்று சேகரித்த புத்தகங்கள். இதில் நேரடி காமிக்ஸ் என்று பார்த்தால் காமிக்ஸ் கிளாஸிக் மட்டுமே.


மாற்றுவெளி - சித்திரக்கதை சிறப்பிதழ்:


நண்பர்கள் தமிழ் காமிக்ஸ் பற்றி ஆய்விதழான இவ்வெளியீடைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்க கூடும். விஜயன், மருது, ஜெ, மணியம் செல்வன் என்று பல காமிக்ஸ் ஆர்வலர்களின் பேட்டியும் பல இணைய நண்பர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ள இந்த இதழ் ஒவ்வொரு காமிக்ஸ் ஆர்வலரின் கைகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகமாகும். விஜயன் சாரின் மிக விரிவான நேர்காணல் இவ்விதழின் மிக முக்கியமான அங்கம். நிறைய தகவல்கள் புதைந்துள்ள இந்த நேர்காணலை யாரும் மிஸ் செய்திட வேண்டாம்.கண்காட்சியில் இதழை மிஸ் செய்தோர்க்காக.....  

வானதி பதிப்பகம்:


சென்றமுறை வானதியில் மிஸ் செய்திட்ட 'எதிர்நீச்சல்' இதழை இந்த முறை வாங்கியாகிவிட்டது. விசாகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைப்பெயர் என்ற விஸ்வாவின் தகவல் மூலம் இன்னும் இரண்டு புத்தகங்கள் என் வாண்டுமாமா சேகரிப்பில் சேர்ந்து கொண்டன. வாண்டுமாமா தனது மனைவி பெயரில் (அல்லது அவரது மனைவியே) எழுதிய வயலின் வசந்தாவும் வாண்டுமாமா சேகரிப்பில் சேர்ந்து கொண்டது.
வயலின் வசந்தா

மாஜிக் மாலினி

மாயாவி இளவரசன்

உலகம் சுற்றும் குழந்தைகள்

எதிர்நீச்சல்
 
திராவிட நாட்டுக் கதைகள்:


பிரேமா பிரசுரத்தின் 'விக்கிரமாதித்தன் கதைகள்' இதழை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் புரட்டி பார்த்த பாதிப்பில் வாங்கிய புத்தகம் இது. இவ்விதழும் 500 பக்கங்களுக்கு மேல். ஆனால் விலை ரு100/- மட்டும் தான்.
 
 
 
 இறுதியாக....
- நன்றி-