Saturday, June 10, 2023

வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail)

பறவைகளை கவனிக்க துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் காடை வகையில் எந்த பறவையையும் பார்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வீட்டின் அருகேலேயே புற்கள் மற்றும் புதர்கள் உள்ள ஒரு இடத்தில் காடைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால் அடையாளங்களை கவனிக்கும் வகையில் பார்க்க முடியவில்லை. குறிப்பிட்ட நேரம், இடம் சென்றால் பெரும்பாலும் பார்த்துவிடலாம். ஆனால் அடையாளங்களை உள்வாங்கவோ, புகைப்படம் எடுக்கவோ நேரம் கொடுக்காமல் மறைந்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இவர்கள். கால்களுக்கு மிக அருகில் இருந்து திடீர் என்று பறந்து அதிர்ச்சி தருதல், நம்மை பார்த்த உடன் விறு விறு என அருகில் இருக்கும் புதர்களுக்குள் அடைக்கலம் ஆகுதல் என பல நாட்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. 

ஒருவழியாக சில நாட்கள் முன் அடையாளங்காணும் வகையில் ஒரு புகைப்படம் எடுக்க முடிந்தது. அதைக்கொண்டு என்ன இனம் என்றும் கண்டுபிடித்தாகிவிட்டது. 

 வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail) தான் அது. 

 Buttonquail இனப்பறவைகள் காடைகள் போலவே தோற்றத்தில் இருந்தாலும், பெயரில் காடை என இருந்தாலும் இன வகைபாட்டில் இவை காடையினத்தில் சேர்க்கப்படுவதில்லை. IUCN தகவல்படி உலகளவில் இப்பறவைகளின் எண்ணிக்கை ஒரளவு உயர்ந்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் எணணிக்கை உயர்கிறதா என்பது தெளிவில்லை. 

 புற்கள் மற்றும் புதர்களை வாழிடங்களாக கொண்டிருக்கும் இப்பறவைகள் காக்கப்பட இதன் வாழிடங்கள் காக்கப்பட வேண்டும். 

 (இந்த பறவைகள் பார்த்த இடம் திருப்பெரும்புதூர் அருகில் பல வருடங்கள் முன் வீட்டு மனைகளாக பிளாட்கள் போடபட்டு அந்தளவு கட்டுமானங்கள் இல்லாத இடம். புற்களும் முட்செடிகளும் அதிகளவில் உள்ளன. ஆனால் தற்போது விருவிருப்பாக கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த இடம் இபபறவைகளின் வாழிடமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும் என்பது கேள்வி)