Saturday, June 10, 2023

வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail)

பறவைகளை கவனிக்க துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் காடை வகையில் எந்த பறவையையும் பார்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வீட்டின் அருகேலேயே புற்கள் மற்றும் புதர்கள் உள்ள ஒரு இடத்தில் காடைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால் அடையாளங்களை கவனிக்கும் வகையில் பார்க்க முடியவில்லை. குறிப்பிட்ட நேரம், இடம் சென்றால் பெரும்பாலும் பார்த்துவிடலாம். ஆனால் அடையாளங்களை உள்வாங்கவோ, புகைப்படம் எடுக்கவோ நேரம் கொடுக்காமல் மறைந்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இவர்கள். கால்களுக்கு மிக அருகில் இருந்து திடீர் என்று பறந்து அதிர்ச்சி தருதல், நம்மை பார்த்த உடன் விறு விறு என அருகில் இருக்கும் புதர்களுக்குள் அடைக்கலம் ஆகுதல் என பல நாட்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. 

ஒருவழியாக சில நாட்கள் முன் அடையாளங்காணும் வகையில் ஒரு புகைப்படம் எடுக்க முடிந்தது. அதைக்கொண்டு என்ன இனம் என்றும் கண்டுபிடித்தாகிவிட்டது. 

 வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail) தான் அது. 

 Buttonquail இனப்பறவைகள் காடைகள் போலவே தோற்றத்தில் இருந்தாலும், பெயரில் காடை என இருந்தாலும் இன வகைபாட்டில் இவை காடையினத்தில் சேர்க்கப்படுவதில்லை. IUCN தகவல்படி உலகளவில் இப்பறவைகளின் எண்ணிக்கை ஒரளவு உயர்ந்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் எணணிக்கை உயர்கிறதா என்பது தெளிவில்லை. 

 புற்கள் மற்றும் புதர்களை வாழிடங்களாக கொண்டிருக்கும் இப்பறவைகள் காக்கப்பட இதன் வாழிடங்கள் காக்கப்பட வேண்டும். 

 (இந்த பறவைகள் பார்த்த இடம் திருப்பெரும்புதூர் அருகில் பல வருடங்கள் முன் வீட்டு மனைகளாக பிளாட்கள் போடபட்டு அந்தளவு கட்டுமானங்கள் இல்லாத இடம். புற்களும் முட்செடிகளும் அதிகளவில் உள்ளன. ஆனால் தற்போது விருவிருப்பாக கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த இடம் இபபறவைகளின் வாழிடமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும் என்பது கேள்வி)

Wednesday, February 22, 2023

உங்கள் ஊரின் ஈர நிலங்கள்

ஈர நிலம் என்றால் என்ன? 

நீரும் நிலமும் சந்திக்கும் இடமே ஈர நிலமாகும். கடற்கரைகள், ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக்காடுகள் போன்றவை ஈர நிலங்கள் ஆகும். விதைப்புக்கு முந்தைய நெல் வயல், மழை  நீர் தேங்கிய நிலங்கள் ஆகியவையும் குறுகியகால ஈர நிலங்கள் என்று கூறலாம். 

சிவகங்கை அருகில் உள்ள ஒரு நீர்நிலை. கிட்டதட்ட 10 வகை பறவைகள்  இப்புகைப்படத்தில் உள்ளன. 


ஈர நிலங்கள் ஏன் முக்கியமானவை. அவற்றின் பயன்கள் என்ன? 

வளமான நீர் வளத்திற்கு ஈர நிலங்கள் முறையாக இருக்க வேண்டும். சில பத்து ஆண்டுகள் முன் வரை குடிநீராகப் பயன்பட்டு வந்த பல நீர் நிலைகள் பல இன்று கால் வைக்கக் கூட தகுதியற்றதாக உள்ளதைப் பார்க்கிறோம். இது நாம் ஈர நிலங்களை முறையாக பராமரிக்காததால் வந்த விளைவு. நீர் வளம் தவிர மீன் வளம், விவசாய வளம் போன்ற அனைத்திற்கும் ஈர நிலங்கள் பங்களிக்கிறது. இது அல்லாமல் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு பறவைகள், மற்றும் உயிரினங்களின் தாய்வீடாக ஈர நிலங்கள் உள்ளன. ஈர நிலங்கள் போன்ற இயற்கை பில்டர்கள் (filters -  சுத்தகரிப்பன்கள்) ஏதும் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இயற்கையான வகையில் கிடைத்து வந்த குடிநீரைக் காசு போட்டு கேன்களில் மட்டுமே வாங்கும் நிலை வருவதற்கு ஈர நிலங்கள் சரியாக பராமரிக்கப்படாதது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

வளர்புரம் ஏரிக்கரை. இந்த ஏரியில் இதுவரை 116 வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


தமிழர்களும் ஈர நிலங்களும்: 

தமிழர்கள் சங்கிலித்தொடர் ஏரிகளை உருவாக்கி மிகச்சிறப்பாக நீரை மேலாண்மை செய்துள்ளனர் என்பது வரலாறு. ஆற்று நீரை வரிசையாக ஆறு --> ஏரி --> கண்மாய் --> கரனை--> தாங்கல் -->  ஊரணி --> குளம் -->குட்டை வரை செலுத்தி நிலத்தை வளப்படுத்தி உள்ளனர். இதில் பல அமைப்புகள்  இன்றும் பல ஊர்களில் பயன்பாட்டில் உள்ளன. பராமரிப்பு பணிகளையும் முறை வைத்து ஊர்மக்களே சிறப்பாகக் கவனித்து வந்துள்ளனர்.    (தமிழர்களின் நீர் மேலாண்மையின் சிறப்புகளை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள நக்கீரன் அவர்களின் "நீர் எழுத்து " என்று நூலை ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கலாம். ஆனால் இன்று நம் ஈர நிலங்கள் பலவும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளன . இதற்குச் சூழல் மீது அக்கறையின்மை, விவசாயம் குறைந்தது, மக்களிடம் ஒற்றுமையின்மை, நம் நீர் உரிமைகள் மீதான அறியாமை ஆகியவை காரணமாகச் சொல்லலாம்.


ஏரி பொறம்போக்கு:

பல ஏரிகள் ஏரி பொறம்போக்கு என்ற நிலப்பரப்பை கொண்டிருக்கின்றன. இந்த நிலப்பரப்பு மழை காலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலமாகவும் கோடை காலங்களில் வறண்டு புல் மற்றும் சில தாவரங்கள் வளர்ந்த நிலையிலும் இருக்கும். இந்நிலங்கள் மழை காலங்களில் ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுப்பதற்கும் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கவும் பயன்படுகிறது. மேலும் ஏரியை சார்ந்து இருக்கும் பல்வேறு பறவைகள் கூடு கட்டவும் இவ்விடம் பயன்படுகிறது. முயல், கீரி, உடும்பு போன்ற உயிரினங்களும் இந்நிலப்பரப்பில் வசிக்கின்றன.

ஆனால் இந்த நிலப்பகுதியே பல்வேறு ஆக்கரமிப்பிற்கு உள்ளாகிறது. (அரசு அமைப்புகள் உட்பட) ஏரிகள் பாதுகாப்பின் மீது இருக்கும் ஓரளவு விழிப்புணர்வு கூட இந்த ஏரி பொறம்போக்கு நிலங்கள் மேல் இல்லாதது வருத்தமே.

ஏரிப்புறம்போக்கு பகுதியில் மூவண்ண சில்லைகள்

ஏரிப்புறம்போக்கில் மஞ்சள் மூக்கு ஆள்காட்டிகள் (தரையில் முட்டையிடும் பறவை)


உங்கள் ஊரின் ஈர நிலங்கள்: 

நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள ஈரநிலங்களை அறிந்துகொள்வது மிக அவசியம். அங்கு இயற்கையை அவதானிக்கும் செயல்களை செய்யலாம். நான் வசிக்கும் திருப்பெரும்புதூர் பகுதியின் ஈர நிலங்கள் பற்றிய என் புரிதல் கீழே..

திருப்பெரும்புதூர் ஊரானது ஏரிகள் சூழ உள்ள ஒரு ஊராகும். திருப்பெரும்புதூர் ஏரி ஊரின் முக்கிய ஏரியாகும். மேலும்   திருப்பெரும்புதூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பல ஏரிகள் உள்ளன. பென்னலூர் இரண்டு ஏரிகள், பிள்ளைப்பாக்கம் ஏரி, நெமிலி மூன்று ஏரிகள், இருங்காட்டுக்கோட்டை ஏரி, காட்ராம்பாக்கம் ஏரி, நாவலூர் ஏரி, தண்டலம் ஏரி, வளர்புரம் ஏரி ஆகியவை திருப்பெரும்புதூர் சுற்றி உள்ள முக்கிய ஏரிகளில் சில ஆகும். இந்த சங்கிலித்தொடர் ஏரிகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாகவும் இருந்துவந்துள்ளன. இன்றும் இந்த ஏரிகளில் வெளிநாடுகளிலிருந்து வலசை வரும் வகையான உட்பட பல்வேறு வகையான பறவைகளைப் பார்க்கலாம். பல்வேறு ஊர்களிலிருந்து பறவை ஆர்வலர்கள் இப்பகுதிக்குப் பறவைகள் நோக்க வருவது வழக்கம். இத்தகைய சிறப்புகள் உள்ள நம் ஈர நிலங்கள் இன்று மனிதர்களின் செயல்களால் பல்வேறு வகையான சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. அவற்றில் சில....

1. குப்பைகள் கொட்டுதல்

2. கழிவு நீர் கலத்தல்

3. சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை  போன்ற ஆக்கிரமிப்பு தாவரங்கள் மிகுதியாக வளர்தல்

4. ஆக்கிரமிப்பு கட்டடங்கள்

5. நீர் வழிகள் அடைப்பு / ஆக்கிரமிப்பு

6. அளவுக்கு அதிகமான மீன் பிடிப்பு

7. மண் எடுத்தல்

ஏரிக்கரை அருகில் கட்டுமான வேலைகள்


நாம் என்ன செய்ய வேண்டும்? 

நம் நீர் நிலைகள் மற்றும் ஈர நிலங்கள் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகையில் நாம் என்ன செய்யலாம்:

1. குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டக் கூடாது.

2.  கழிவு நீர் கலத்தல், ஆக்கிரமிப்புகள், மண் எடுத்தல் போன்ற செயல்களைத் தனி ஒருவராகத் தடுப்பது கடினம். ஆகையால் குழுவாக உரிய அதிகாரிகளுக்குத் தெரிவித்தல், கிராம சபைக் கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம். 

3. பனை, நீர்மருது போன்ற மரங்களைக் கரை ஓரங்களில் வளர்க்கலாம்.


ராம்சர் சாசனமும் ஈரநிலமும்

ராம்சர் சாசனம் (Ramsar Convention) என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். 1971ல் இவ்வொப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது. இந்த நகரின் பெயரைத் தழுவியே ராம்சர் சாசனம் என்னும் பெயர் ஏற்பட்டது.

ஈரநிலப் பாதுகாப்புக்காக பன்னாட்டுத் தரம் ஒன்றை உருவாக்குவதன் மூலமும், உலகளாவிய ஈரநிலம் தொடர்பான பிரச்சினைகளை அலசுவதற்கு ஒரு களத்தை வழங்கியதன் மூலமும், ஈரநிலங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான வசதியை இச்சாசனம் ஒப்பந்தத் தரப்பினருக்கு வழங்குகிறது. 

(புரிதலுக்காக - மிக முக்கியமான ஈரநிலங்களுக்கு மட்டுமே ராம்சார் அந்தஸ்து வழங்கப்படும். இவை மட்டுமே ஈரநிலங்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது)

தமிழ் நாட்டில் ராமசார் ஈரநிலங்கள்
(Photo Source - www.tnswa.org)


உலக ஈர நில(Wetland) நாள் – பிப்ரவரி 02 

ஈரநிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுப்பு நிலத்தின் முக்கியத்தும் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் ஆண்டு தோறும் பிப்ரவரி 02 தேதி அன்று உலகம் முழுவதும் ஈர நாள் கொண்டாடப்படுகிறது.


இக்கட்டுரை பற்றி..

திருப்பெரும்பூதூரின் சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் வகையில் அரண் அமைப்பானது பல தன்னார்வலர்களை இணைந்து பல்வேறு சூழல் செயல்பாடுகளை செய்து வருகிறது. அரண் அமைப்பிற்காக கடந்த பிப்-2 World's wetland day க்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை சில மாற்றங்களுடன் இங்கு பதிவிடப்படுகிறது..

ஈர நிலங்களை பாதுகாப்போம்! இயற்கையைப் போற்றுவோம்!

-