Showing posts with label ஆனந்தவிகடன். Show all posts
Showing posts with label ஆனந்தவிகடன். Show all posts

Sunday, June 19, 2011

தொந்தி பூதமும் மந்திர நாயும் (Tamil children magazines)

உங்கள் அப்பா சிறுவயதில் படித்திட்ட சிறுவர்கள் இதழ்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். ஆனால் நமது தாத்தா காலத்தில் அதாவது சுதந்திர அடையும் முன்பும் அதன் பிறகு சிறிது காலங்களிலும் சிறுவர் இதழ்கள் எப்படி இருந்தன?? அதை தெரிந்து கொள்ள உங்களுக்கு இந்த பதிவு உதவக்கூடும். இணையத்தில் தமிழம் ம.நடேசன் அவர்கள் ஆவணப்படுத்தி உள்ள தமிழ் பத்திரிக்கைகள் பற்றிய குறிப்புகளில் இருந்து ஒரு சில துளிகள் இங்கே....

தமிழம் ம.நடேசன் - ஒரு அறிமுகம்:


பொள்ளாச்சி நசன் என்று அழைக்கப்படும் திரு ம.நடேசன் அவர்கள் நடத்திடும் தமிழம் எனும் இணையப்பக்கத்தில் வெகு காலத்திற்கு முன்பு வந்த தமிழ் மாத, வார பத்திரிக்கைகள் பற்றிய தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. நம் அப்பா, தாத்தா காலங்களில் பத்திரிக்கை உலகம் எப்படி இருந்ததென்பதை அறிய தமிழம் பக்கத்திற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரவும். இவருடை பத்திரிக்கைகளின் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.  தமிழம் பக்கத்தில் இருக்கும் சில சிறுவர் பத்திரிக்கைகளின் அட்டைபடமும் தகவல்களும் உங்கள் பார்வைக்கு. இதற்கு பிறகு இந்த பதிவில் வரும் தகவல்களும் படங்களும் தமிழம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

சித்திரக்குள்ளன் (1932)


சித்திரக்குள்ளன் : ஆசிரியர் - கேலிச்சித்திரக் கலைஞர் சந்தனு. சிறுவர் இதழ். இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் இது. சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு எழுதிய மலைவீடு தொடர்கதை, காட்டுச் சிறுவன் கண்ணன், வேதாள உலகத்தில் என்கிற கேலிச்சித்திரத் தொடர்கதை, குள்ள மாமாவைக் கேளுங்கள் என்கிற வினாவிடைப் பகுதி, அறிவுப் போட்டிகள் எனச் சிறுவர்கள் வாங்கிப் படித்து மகிழ்வதற்குரியதாக சித்திரக்குள்ளன் சிறுவர் இதழ் வந்துள்ளது. வென்றாலும் தோற்றாலும் பரிசு உண்டு எனச் சிறுவர்களை ஊக்குவித்து எழுதவைத்து, பெயரை அச்சாக்கி மாணவர்களை வளர்த்து வந்தன அன்றைய சிறுவர் இதழ்கள். எழுதிப் பரிசு பெறாதவர்கள் அனைவருக்கும் குத்துச் சண்டை குப்பசாமி சிறுகதை நூல் ஒன்று (விலை 4 அணா) இனாமாக அனுப்பப் படும் என்று குறிப்பிட்டுள்ளது.

பாப்பா :

பாப்பா சிறுவர் இதழ். சூன் 46 ல் சென்னையிலிருந்து வெளியான இந்த இதழ் 4 ஆம் ஆண்டின் 5 ஆவது இதழ். சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது. விளம்பரத்தைக்கூட சுவையான ஈர்ப்புடைய செய்தியாக ஒருபக்க அளவில் வெளியிட்டுள்ளது. ருக்மணி எழுதியுள்ள சவாரி குதிரை மாணவர்களின் நெஞ்சை விட்டகலாதது.

டமாரம்:


1948 இல் சிறுவர் இதழ்கள் தரமாக வெளிவந்தன. பாலர் மலர் ஏழரை ஆண்டுகளும், சஙகு மூன்று ஆண்டுகளும், டமாரம் 5 ஆண்டுகளும் வெளிவந்தன. சங்கு 3 பைசா, டமாரம் 6 பைசா அதாவது அரையணா. இவ்வகை இதழ்கள் சிறுவர்களுக்கு ஆர்வமூட்டி, படிக்கும் பழக்கத்தை வளர்தெடுத்தன. நம் தொகுப்பில் டமாரம் 1- டம் டம் 43 முதல் டமாரம் 2- டம்டம் 20 வரை உள்ளன.
சந்திர ஒளி :

சந்திர ஒளி - சிறுவர் இதழ். ஆசிரியர் : சாமி. 1949 இல் இரண்டணா விலையில் சிறுவர்களுக்காக வெளிவந்த மாதமிருமுறை இதழ். சென்னை 7 லிருந்து தமிழ்நாட்டுத் தம்பி தங்கைகளின் நல்லொழுக்கத்தை வளர்க்கத் திட்டமிட்டு வெளிவந்த இதழ். 20-10-49 இல் வெளிவந்த 8 ஆவது இதழ் இது. சிறுகதை, கவிதை, தொடர்கதை, கேள்வி பதில், குறிப்பு, பொன்மொழிகள், போட்டிகள் என சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வெளியிட்டுள்ளது. கசகசா எழுதிய தங்கச் சுரங்கம் தொடர்கதை வியப்பூட்டும் வகையில் தொடர்ந்துள்ளது.

பாலர் மலர்:

பாலர் மலர் - சிறுவர் இதழ் : ஆசிரியர். வ்.எஸ். நடேசன்., 1949 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த சிறுவர் இதழ். இந்த இதழ் ஆறாவது ஆண்டின் 11ஆவது இதழ். பாலர் மேடை, பேனா நண்பர்கள் சிறுவர்களுக்கான சிறப்பான தொடர். இதழிலுள்ள சிறுகதைகள் சுவையாக உள்ளன.

தம்பீ:

 சிறுவர்களுக்கான வாரஇதழ். 1949 செப்டம்பர் 12 இல் வெளியான இதழ். பதிவு பெற்ற இதழ். விலை ஒரு அணா. மணி ஆசிரியராக இருந்து புதுக்கோட்டையிலிருந்து வெளியிடப்பட்ட இதழ். 16 பக்கங்களில் சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வெளியிட்டுள்ளது. கதைப்போட்டிகள் நடத்தி பரிசளித்துள்ளது. வளரும் கதை என தொடர்கதை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் இவர் யார் என பிரெஞ்சு தேசத்து எஞ்சினியரை அறிமுகப்படுத்தியுள்ளது. செய்துபார் என குண்டூசியைத் தண்ணீரில் மிதக்க வைத்தல் பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளது. பாரதி நாள் பற்றியும், பெரிய மருது சின்ன மருது பற்றியும் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. மாய சைக்கிள் சிறுகதை சுவையுடையதே.

மான் :
 சிறுவர்களுக்கான இதழ். இதழ் பெயர் : மான் 1949 களில் சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்த வார இதழ். சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது. தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என வினா விடை பகுதி, எனத் தரமாக வெளிவந்துள்ளது. போட்டிக்கான பரிசு ரூ 10 அளித்துள்ளது.


பாபுஜி:


சிறுவர்களுக்கான சிறந்த மாதப்பத்திரிகை. இதழ் பெயர் : பாபுஜி ., ஆசிரியர் - சதாசிவம். 1949 களில் சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். தம்பி தங்கைகளே என அழைத்து சிறுவர்களுக்கான பல்வேறு செய்திகளைத் தருகிற இதழ். சிறுவர் நாடகம், இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள், தொடர்கதை, வேடிக்கைக் கணக்குகள், ஈர்ப்புடைய சிறுகதைகள் என வெளியிட்டுள்ளது. பாபுஜி சிறுவர் சங்கம் என விண்ணப்பம் வெளியிட்டு சிறுவர்களை இணைத்து, சங்கத்தின் வழி படைப்பாளர்களை உருவாக்கியுள்ளது.

ஜிங்லி (1951)
ஜிங்லி : சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்த குழந்தைகளுக்கான வார இதழ். தனியிதழ் 2 அணா. இந்த இதழ் 10-1-1951 இல் வெளியான முதலாம் ஆண்டின் 22 ஆவது இதழ். இந்த இதழில் தமிழேந்தி எழுதிய மகுடபதி, சூடாமணி எழுதிய அபாய மனிதன் கதையும் வெளியாகியுள்ளது. கோழை, தூக்க மாத்திரை, பிசாசுப் பெண் சிறுவர் கதையும் வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் போட்டி வைத்து பரிசளித்துள்ளது.

கோமாளி (1952)
 கோமாளி : 1952 ஆம் வருடம் சென்னையிலிருந்து திருநாவுக்கரசு அவர்கள் வெளியிட்ட சிறுவர் இதழ். இதழில் ராஜன் எழுதிய மர்ம மாளிகை என்கிற சிறுவர் தொடர் ஈர்ப்புடையதாக உள்ளது. துணுக்குச் செய்திகள் சுவையூட்டுவதாகவும், அறிவூட்டுவதாகவும் உள்ளன. நாவுக்கரசரைக் கேளுங்கள் என ஆசிரியரின் கேள்வி பதிலும் உள்ளன. சிறுவர்களுக்கான ஒரு பக்கச் சிறுகதைகளும் உள்ளன.


மிட்டாய் (1952)

மிட்டாய் : சிறுவர் இதழ் 1952 இல் திருநாவுக்கரசு அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். இது முதலாண்டின் 12 ஆவது இதழ். விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகளைச் சுடச்சுட எனத் தந்துள்ளது. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது

சாக்லெட் (1952)


அல்வா (1954) 

அல்வா - சிறுவர் இதழ் - வார இதழ் - ஆசிரியர் அருள்வாணன், 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை 1. 1954 மே மாதம் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய்ய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு என சிறுவர்களை ஈர்க்கும் வகையில் இதழ் வெளியாகியுள்ளது.


கரும்பு (1956)

கரும்பு (சிறுவர் இதழ்) - 1956 நவம்பர் திங்களில் வெளிவந்த இந்த இதழ் மூன்றாவது ஆண்டின் 13 ஆவது இதழ். இந்த இதழ் சிறுவருக்காக சென்னையிலிருந்து வெளிவந்த சிறுவர் வார இதழ். ஆசிரியர் சங்கு கணேசன். இந்த இதழில் தஞ்சாவூர் அ.பிச்சை, சென்னை டி.பி.சீத்தராமன் என்கிற இரண்டு குழந்தை எழுத்தாளரின் படங்களைப் பிரசுரித்துள்ளது. புயலின் புன்னகை என்ற கோட்டோவியத் தொடர்கதையை வெளியிட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்குப் பரிசு என்று அழ.வள்ளியப்பா எழுதிய மலரும் உள்ளம் நூலுக்கு மத்திய அரசு ரூபாய் 500 பரிசளித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது. - இந்த நூலில் 2000 பிரதிகளை வாங்கி பள்ளிக்கூட நூலகங்களுக்கு அன்பாளிப்பாகத் தருவார்கள் என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளது.

கண்ணன்

கண்ணன் : ஆசிரியர் - ந.இராமரத்நம். ஒன்பதாவது ஆண்டின் மூன்றாவது இதழ் இது. சென்னை 4, கலைமகள் காரியாலயம் வெளியீடாக வெளிவந்த சிறுவர்களுக்கான மாத இதழ். சிறுகதை, பரிசுபெற்ற தொடர் கதை, மூளைக்கு வேளை, கடற்புலி படத்தொடர்கதை, பேனா நண்பர்கள் பட்டியல் என சிறுவர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கண்ணன் சிறுவர் இதழ் வழியாகக் கிளைக் கழகங்களை ஏற்படுத்தி, உறுப்பினர்களைச் சேர்த்து, ஊக்கப்படுத்தி மாணவர்களின் பல்முனை ஆற்றலை வளர்த்தெடுத்துள்ளது. கண்ணன் வெளியீடுகள் என ராஜி, ஆர்.வி.ஸாமி, ஜி.ஜயராமன், பெ.தூரன், கி.வா.ஜ, தி.ஜ.ர, சோமசன்மா, சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் சிறுவர்களுக்கான கதைகளை நூலாக வெளியிட்டுள்ளது.



கண்ணன். 1960 பிப்ரவரி மாதம் வந்த சிறுவர் இதழ் இது. இந்த இதழ் 11 ஆம் ஆண்டின் 4 ஆவது இதழ். கண்ணன் இதழ் மாதம் இருமுறை இதழாக வெளிவந்துள்ளது. சிறுவர்களுக்கான தரமான இதழாக மலர்ந்துள்ளது. விலை 15 ந.பை. (ஒரு ரூபாய்க்கு 100 பைசா) அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்கிற திருக்குறளைத் தலைப்பில் எழுதியுள்ளது. மயிலிறகு தலையில் உள்ள கண்ணன் வெண்ணைப் பானையில் வெண்ணை எடுப்பது போன்ற படமும் உள்ளது. இதழில் சிறுவர் கதை எழுதுகிற படைப்பாளிகளை அறிமுகம் செய்து வந்துள்ளது. இந்த இதழில் வி.ராஜாமணி, பெங்களூர் அறிமுகமாகியுள்ளார். மருதூர் மாளிகை படக்கதை இதழில் உள்ளது. ஆர்.வி. எழுதியுள்ள புதிய முகம் கதை சிறுவர்களை ஈர்ப்பதே. எ.ந.கணபதியின் லட்சியக்கனவு கவிதை இசைக்கக்கூடியதே. கொதிகலன்கள் பற்றி ரகு எழுதியுள்ள அறிவியல் கட்டுரை சிறப்பாக உள்ளது. மன்னர் மன்னன் நாடகம் சுவையானதே. படமும் செய்தியும் குறிப்பு பின் உள்அட்டையில் உள்ளது. இதழாசிரியர் ஆர்.வெங்கடராமன் சென்னையிலிருந்து இதழை வெளியிட்டுள்ளார்.


ஆராய்ச்சிமணி

சிறுவர்களுககான ஆராய்ச்சி மணி. மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்த குழந்தைகளுக்கான இதழ். இது முதல் இதழ். பதிப்பாசிரியர் மூர்த்தி. வெளியீட்டுத் தேதி குறிப்பிடப்படவில்லை. சிகப்பு பச்சை வண்ணத்தில் 8 பக்கத்தில் வெளியாகியுள்ள இதழ். காட்டில் ஸ்டிரைக், சோகக்குரல் என இரு கதைகளும், காக்கைக்குக் கண்சாய்ந்த வரலாறு, தேயிலை என இரண்டு குறிப்புகளும், வெளியாகியுள்ளன. கலைநேசன் என்கிற மாதமிருமுறை இதழ் பற்றிய குறிப்பும் இந்த இதழில காணப்படுகிறது

அணில் மாமா

அணில் மாமா - 1978 இல் சென்னையிலிருந்து வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் புவிவேந்தன். இதழில் சித்தன் கேலிப்படம் வரைய ஆசிரியரின் கில்லாடி கிரி படக்கதை பின் அட்டையில் சிறப்பாக வந்துள்ளது. நடுப்பக்கத்தில் அணில் அண்ணா எழுதிய மந்திரவாதியும் மூன்று குள்ளர்களும் படக்கதை வெளியாகியுள்ளது. அணில் அண்ணா எழுதியுள்ள தொந்தி பூதமும் மந்திர நாயும் கதை இந்த இதழில் உள்ளது. சிறுவர்களுக்கான தொடர்கதை, ஒரு பக்கக் கதை எனச் சுவையாகத் தந்துள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான பதிலும். குறுக்கெழுத்துப் போட்டியும். ஈர்ப்புடைய குறிப்புகளும் இதழில் வெளியிட்டுள்ளது.

அந்தக்கால சிறுவர் இதழ்களை நன்றாக ரசித்தீர்களா நண்பர்களே...

*அந்த கால அட்டைப்படங்கள் இரு வண்ணங்களில் அருமையாக உள்ளன. 

* சிறுவர்களிடம் தேச பக்தியையும் ஒழுக்கத்தையும் வளர்க்கும் விதமாக பல பத்திரிக்கைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது தெரிகிறது.

*  ஆசிரியர் கூற்றுப் படி 1932ல் வெளிவந்த சித்திரக்குள்ளன் இதழில் சித்திரக்கதைகள் இடம் பெற்று இருந்திருக்கிறது. இது தான் தமிழின் முதல் சித்திரக்கதையாக கூட இருக்கலாம். எப்படி இருப்பினும் விகடனில் 1956ல் வெளிவந்த ஜமீந்தார் மகன் தான் தமிழின் முதல் சித்திரக்கதை என்ற விகடனின் கூற்று தவறு என்பது தெரிகிறது. விஸ்வா கூட இது பற்றி கூறி இருந்ததை நண்பர்கள் நினைவு கொள்ளலாம்.

* கரும்பு இதழில் புயலின் புன்னகை என்ற சித்திர தொடர்கதை இடம்பெற்று உள்ளது.

* கண்ணன் சிறுவர் இதழ்,  தற்போதைய சிறுவர் இதழிகளின் அமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. இரண்டாவது கண்ணனின் அட்டைப்படம் அருமை.

* அணில் அண்ணா, கண்ணன் இதழ்களிலும் சித்திரக்கதைகள் இடம் பெற்றிருந்திருக்கிறது. அணில் அண்ணா அட்டைப்படம் வரைந்தவர் ரமணி.

நண்பர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி - தமிழம் இணையத்தளம்  மற்றும் பொள்ளாச்சி நசன் அவர்கள்

Saturday, March 20, 2010

இன்றைய தமிழ் பத்திரிக்கைகளில் காமிக்ஸ் - ஒரு ரவுண்ட் அப்

சமீப காலங்களில் தமிழ் வெகுஜன பத்திரிக்கைகள் சித்திரக்கதைளுக்கு முக்கியத்துவம் எதும் கொடுப்பது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் தமிழின் முக்கியமான பத்திரிக்கைகளில் காமிக்ஸ்கான இடங்கள் பற்றி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு.

குமுதம்:

தமிழ் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்கள் என்று நம்பப்படும் ஆனந்த விகடன் மற்றும் குமுதம் இதழ்களில் சித்திரக்கதைகளுக்கான இடம் மிகவும் குறுகியது தான். காமிக்ஸ் வடிவம் என்பது நகைச்சுவை துணுக்குகளுடன் நின்றுவிடுகிறது. குமுதத்தில் ஓவியர் பாலாவின் கார்டூன்கள் மிகவும் கலக்கலாக இருக்கிறது. தனி கார்டூன்கள் 'அடடே மதி' மாதிரியான ஸ்டைலில் இருக்கிறது. நமது அரசியல்வாதிகளின் முகங்கள் இவரது தூரிகையில் படாதபாடுகிறது. குறிப்பாக கலைஞர் அவரகளை வரைய ஸ்பெஷல் பயிற்சி எடுத்திருப்பார் போல. பல விதமான முக பாவனைகளில் பிரமாதப்படுத்துகிறார். தலையங்க கார்டூன் இல்லாமல் நான்கு பக்க நய்யாண்டி சித்திரக்கதை ஒன்றும் வாரவாரம் இடம் பெறுகிறது. தற்போது ஒரு சாமியாரும் அவரது சிஷ்யரும் அரசியல் நிகழ்வுகளை கலாய்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை செந்தில்-கவுண்ட்மணி வைத்து இந்த நய்யாண்டி சித்திரக்கதை ஓடும். இங்கும் செந்திலை பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் ஓவியங்கள்தான் ஹை-லைட். ஓவியர் பாலாவின் சித்திரங்கள் காமிக்ஸ் வடிவத்திற்கு நன்கு பொருந்துகிறது. ஏதேனும் முழுநீள சித்திரக்கதைக்கு அவர் ஓவியம் வரைந்தால் நிச்சியம் ஹிட் தான். மற்றபடி குமுததில் சித்திரங்களுக்கான இடம் ரொம்ப குறைந்துவிட்டது.

(இந்த சாக்கில் தமிழ் காமிக்ஸ் வலைபக்கங்களில் முதன்முறையாக சுவாமி நித்தியானந்தா பற்றிய சித்திரக்கதை வெளியிடப்பட்டு உள்ளது.)




ஆனந்த விகடன்:
நகைச்சுவை துணுக்குகளுக்கு புகழ்பெற்ற விகடனில் இன்னமும் நிறைய நகைச்சுவை துணுக்குகள் வெளியிடப்படுகிறது. அதிலும் பொக்கிஷம் பகுதியில் வரும் நகைச்சுவை துணுக்குகள் நன்றாக இருக்கிறது. இங்கு காமிக்ஸ் வடிவில் இருக்கும் ஒரே பகுதி நய்யாண்டி சித்திரக்கதை தான் (ஓவியர் - கண்ணா). இங்கும் இந்த வாரம் சுவாமி நித்தியானந்தா ஸ்பெஷல் தான். மதனின் ஓவியங்கள் ஆங்காங்கே தென்படுகிறது. விகடனில் தொடர்கதை மற்றும் சிறுகதைகளுக்கான சித்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. ஸ்யாம், அரஸ் போன்றவர்களின் கைவண்ணம்


செய்திதாள்கள்

தினத்தந்தி:
தினத்தந்தி - சித்திரக்கதை - சிந்துபாத். இக்கதை பற்றி அய்யபாளைத்தாரின் தளத்தில் முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். தினத்தந்தி இலவச இணைப்பில் சிறுகதை மற்றும் தொடர்கதைகளுக்கு சிறப்பான ஓவியங்கள் தென்படுகின்றன. பொதுவாக தினமணி, தினமலர் மற்றும் தினகரன் ஆகிய பத்திரிக்கைகளின் சிறுகதை மற்றும் தொடர்கதைகளுக்கு ஓவியங்கள் நன்றாக இருக்கிறது. தினத்தந்தி - தங்கமலரரில் மூன்று சித்திரக்கதை தொடர்கள் வெளிவருகிறது. இதில் இரண்டு தொடர்கள் Tinkle தமிழாக்கம் என்று எண்ணுகிறேன்.
 
தங்கமலர் சித்திரக்கதைகள்
 
தினமணி:
தினமணியில் வெளிவரும் அடடே மதி எப்போதும் என் all time favorite ஆகும். தினமணி - சிறுவர் மணி இதழும் சித்திரக்கதைகளுக்கு சிறப்பான பங்களிப்பை செய்து வருக்கிறது. 5 சித்திரக்கதைகளை வெளியிடும் சிறுவர்மணியில் 32 பக்கங்களில் 16 பக்கங்கள் சித்திரக்கதைகளால் நிரம்பி உள்ளது. இதில் அறிவியல் அறிஞர்கள் பற்றிய ஒரு அருமையான சித்திரத்தொடரரும் அடங்கும். (கதை, சித்திரம் - காலெப்). அலிபாபா +40 சித்திரத்தொடரும் சிறப்பான சித்திரம் மற்றும் கதையமைப்புடன் வெளிவருகிறது. (கதை, சித்திரம் - விஷ்னு)



சிறுவர்மணி சித்திரக்கதைகள்


தினமலர் - சிறுவர்மலர்:
இரண்டு சித்திரக்கதை தொடர்கள் இடம் பெற்றுள்ளது. ACK தமிழாக்கம் போல் தெரிகிறது.

 காலைக் கதிர்:
தினமலர் பத்திரிக்கையின் நகல் போல் வெளிவரும் காலைக்கதிர் நாளிதழில் தினசரி காமிக்ஸ் தொடர்கதை வெளியிடப்படுகிறது. தற்போது தெனாலிராமன் பற்றிய காமிக்ஸ் தொடர்கதை வந்து கொண்டு இருக்கிறது. காலைக்கதிரின் சிறுவர் இணைப்பிலும் சில சித்திரக்க்தைகள் வெளிவருகின்றன. இவையும் தினமலர் பாணியிலேயே உள்ளன. (ஸ்கேன்கள் வரைவில்)
ஆன்மீகப்பத்திரிககைகளான சக்தி விகடன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆகிய பத்திரிக்கைகளிலும் சித்திரக்கதை தொடர் வெளிவருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயமில் வரும் சித்திரக்கதைகள் கதைமலரில் வெளிவரும் கதைகளின் மூலம் ஆகும்.
 
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - கதை1

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - கதை2


வாரபத்திரிக்கைகளில் வரும் தொடர்கதை சித்திரங்களில் ஒரு சில உங்கள் பார்வைக்கு.... (வரிசை - 1,2 - விகடன், 3 - குடும்ப மலர், 4 - குங்குமம்)



வயாகரா தாத்தாவிற்காக 'குடும்ப' பத்திரிக்கையான குமுதத்தில் வெளிவந்த ஒரு படம். இதுவும் காமிக்ஸ் வடிவம் தானே.. (இதற்கு வசனம் எழுதிய 'இலக்கியவாதி' யாரென்று தெரியவில்லை)



பல சித்திரக்கதைகளை தமிழ் மொழிக்கு தந்த கல்கி வார இதழில் தற்போது எந்த சித்திரக்கதையும் வருவதில்லை என்பதுதான் சோகம்.

சத்தி விகடனில் வெளிவந்த சித்திரக்கதைகள் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்திருந்தோம். தற்கால கோகுலம், சுட்டி போன்ற சிறுவர் பத்திரிக்கைளில் வரும் காமிக்ஸ் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம் 

உங்களுக்கு தோன்றும் கருத்துகளை தெரிவித்துவிடுங்களேன்..

Saturday, February 13, 2010

ஆனந்த விகடனும் தமிழின் முதல் சித்திரக்கதையும் (Comics in Ananda vikatan)

வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே,


  • 10/15 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் அனைத்து முன்னனி வாரபத்திரிக்கைகளிலும் ஒரு சித்திர தொடர்கதையாவது கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். பழைய கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களை நீங்கள் பார்க்க நேரிட்டால் இதை உணரக்கூடும். இந்த வகையில் கல்கியில் வாண்டுமாமா படைத்த பல சித்திரக்கதைகள் தமிழ் சித்திரக்கதை உலகின் முத்துக்கள். யாருடைய சதி என்று தெரியவில்லை இன்று கண்ணுக்கு எட்டியவரை வாரபத்திரிக்கைகளில் சித்திர தொடர்கதை எதுவும் தென்படவில்லை

  • இந்த பதிவில் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த சில படக்கதைகள் பற்றி பார்ப்போம். இந்த பதிவு ஆனந்த விகடனின் காமிக்ஸ் சேவை பற்றிய முழு வரலாறு கிடையாது என்பதையும் எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.
  • இந்த வார ஆனந்த விகடன் இதழில் தமிழின் முதல் படக்கதை பற்றிய செய்தி துணுக்கு ஒன்று 'பொக்கிஷம்' பகுதியில் வெளியிட்டு உள்ளது.

(தமிழின் முதல் படக்கதை பற்றி ஆ.வி வெளியிட்டிருக்கும் தகவல்கள், தலைப்பு - ஜமீந்தார் மகன், கதை - முத்து, ஓவியம் - மாயா, ஆண்டு - 1956)


  • ஆனந்த விகடன் பெரும்பாலும் பெரியவர்களை கவரும் விதமான சித்திரக்கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் என்பது என் கணிப்பு. ஆனால் கல்கியோ சிறுவர்களை கவரும் சித்திரக்கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.

  • 1970 களில் வெளிவந்த சில சித்திரக்கதை தொடர்களின் ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு. இங்கு இரண்டாவதாக பார்க்கும் 'பொன்மகள் பூமா' தமிழின் முதல் சித்திரக்கதையின் ஓவியர் மாயாவின் கைவண்ணம்.
பொன்னின் நிழல்

பொன்மகள் பூமா
ஸ்வீட் செவண்டீன் (முதல் வாரம் மட்டும் இருவண்ணம்)

  • சராசரியாக ஒரு கதை 20~25 வாரங்களுக்கு வெளிவந்திருக்கிறது. பெரும்பாலான கதைகள் 1960 களின் சினிமாக்களை நியாபகப்படுத்துகிறது. குறை சொல்ல முடியாத சித்திர தரம் மற்றும் எளிமையான கதை அமைப்பும் இக்கதைகளின் சிறப்பு அம்சங்கள்.  
  • 1980களில் வந்த 'தசாவதாரம்' சித்திரக்கதை சமீபத்தில் பொக்கிஷம் பகுதில் மறுபதிப்பு செய்யப்பட்டது. கதை - புகழ்பெற்ற பேய் கதை எழுத்தாளர் பீ.டி சாமி. 
  • ஆனந்த விகடனில் கொஞ்ச நாட்களாக சித்திரக்கதை தொடர் ஏதுவும் வருவதில்லை என்றாலும் நிறைய கார்டூன் துணுக்குகள் வருவது மகிழ்ச்சி. 
  • ஆனால் பக்தி விகடனில் சிறிது காலமாக வாரம் ஒரு சித்திரக்கதை வெளிவந்து கொண்டிருந்தது. (தற்போது வருகிறதா என தெரியவில்லை)







 வாரபத்திரிக்கைகளின் வெளிவந்த காமிக்ஸ் பற்றிய நண்பர் சாத்தானின் பதிவுகளை படிக்க.....
நண்பர் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரனின் 1970களில் வெளிவந்த காமிக்ஸ் பற்றிய பதிவை படிக்க....
அப்புறம் இப்போது வரைக்கும் எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தாலும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.