Patch Birding என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பறவைகளை ஆண்டு முழுவதும் (குறைந்தபட்சம் ஒரு ஆண்டு) சீரான இடைவெளியில் பதிவு செய்யும் முறையாகும். இதன் மூலம் அப்பகுதி பறவைகளின் வசிப்பிடம், இனப்பெருக்க சுழற்சிகள், வலசை காலங்கள், எண்ணிக்கைகளில் ஏற்ற இறக்கங்கள் ஆகியன பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
(Patch Birding என்பதை சிறுபகுதி பறவைகள் நோக்கல் என்று மொழிபெயர்த்துள்ளேன். இன்னும் பொருத்தமான மொழிபெயர்ப்பு இருந்தால் பின்னூட்டமிடவும்)
Patch Birding க்கு சில நுணுக்கமான விதிகள் உண்டு. இதனை பற்றி விரிவாக அறிந்துகொள்ள Bird count of India வலைத்தளத்தை பார்வையிடலாம்.
எனது வீடு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆண்டு முழுவதும் பறவைகளை தொடர்ந்து சீரான இடைவெளியில் பதிவு செய்யும் முயற்சியை 2022 வாக்கில் துவங்கினேன். ஏற்கனவே கூறியது போல Patch Birding க்கு நுணுக்கமான விதிகள் உண்டு. அவற்றை இங்கு என்னால் முழுமையாக பின்பற்ற இயலவில்லை. அதனால் இதனை ஒரு முழுமையான Patch Birding என்று சொல்ல முடியாது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இங்குள்ள பறவைகளை பதிவு செய்ததில் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.
எனது Patch (பறவைகள் பதிவு செய்த இடம்):
திருப்பெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை அருகில் உள்ள இன்னும் வீடுகள் வராத காலி வீட்டு மனைகள் உள்ள ஒரு சதுர கிமீ பகுதியாகும். 20 ~ 30 வருடங்களுக்கு முன் விவசாய நிலமாக இருந்திருக்க கூடும். தற்போது சிறு சிறு தொழிற்சாலைகள் வந்த வண்ணம் உள்ளன.
தாவர அமைப்பு : பறந்த புல்வெளியில் முட்புதர்களும் ஆங்காங்கே சில மரங்களும் உள்ளன.
ஆக்கிரமிப்பு மரமான சீமைக்கருவேலம் மிகுதியாக உள்ளது. அதற்கு சற்றே குறைவாக வன்னியும் நுணாவும் இயற்கையாக முளைத்து வளர்ந்து வருகின்றன. எல்லைகளில் (குடியிருப்பு பகுதி அருகில்) சூபாபுல் ஆக்கிரமிப்பு தாவரமாக பரவி வருகிறது. குறைந்த எண்ணுகையில் சில வேப்ப மரங்கள், வாகை மரங்கள் உள்ளன. முட் புதர்களில் தொரட்டி, நிலக்குமிழ், வென்புலா போன்ற செடிகள் அதிகமாக உள்ளன. உண்ணிச்செடி, செடி வகைகளில் உள்ள ஆக்கிரமிப்பு தாவரமாக உள்ளது. இன்று வரை மனிதர்களின் தலையீடு மிகவும் குறைவாக உள்ள பகுதிதான். காப்பு காடு அல்லாது 20~30 வருடங்களாக மனிதர்கள் அந்தளவு தலையிடாத ஒரு பகுதியில் பறவைகள் - உயிரினங்கள் எவ்வாறு உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதை பார்க்கலாம்.
பறவைகள் அல்லாத பிற உயிரினங்கள் :
பறவைகள் அல்லாத பிற உயிரினங்கள் முறையாக அவனப்படுத்தப்படவில்லை. இருந்தாலும் அடிக்கடி கண்ணில் தென்பட்ட உயிரினங்கள்.
ஊர்வன வகைகள் - சாரை பாம்பு , பச்சை பாம்பு, தண்ணீர் பாம்பு வகைகள், உடும்பு, ஓணான்-பல்லி வகைகள்.
பாலூட்டிகள் - முயல், கீறி, பெருச்சாளி, அணில், எலி , வவ்வால் வகைகள்
பறவைகள் :
இதுவரை 83 வகைப் பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தவிட்டுக்குருவி , கரிச்சான், மைனா, காகம், புறா, செம்புழை சின்னான், தேன் சிட்டு ஆகியவை தினமும் பார்க்கும் பறவைகள்.
இந்த இடம் தரை வாழ் பறவைகளின் சிறந்த வாழிடமாக உள்ளது. மஞ்சள் மற்றும் சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், வரிமார்பு காடை (Barred buttonquail), கௌதாரி, ராபக்கி(Indian Nightjar) மற்றும் பெருங்கண்ணி (கண் கில்லாடி- Indian Thick Nee)), நெட்டைக்காலிகள் ஆகிய தரை வாழ் பறவைகளை சாதாரணமாய் பார்க்கும் இடமாக இந்த இடம் உள்ளது. (வரிமார்பு காடை மட்டும் காண்பது சற்றே அரிது)
மழைக்காலங்களில் அங்கங்கே தேங்கும் தண்ணீர் தேக்கங்களில் சில நீர்ப்பறவைகளையும் பார்க்க முடியும். நத்தை கொத்தி நாரைகள் (Asian Openbill) இங்கு அதிகம் தென்படக்கூடிய ஒரு நீர்ப் பறவை. சிறு மீன் கொத்தி (Common King fisher), நீல தாழைக்கோழி (Grey-headed Swamphen), சிறு கொக்கு ஆகிய பறவைகள் மழை காலங்களில் மட்டும் வருகை புரிய கூடியன.
பறவைகள் வலசைக் குறிப்புகள் :
blyth நாணல் குருவி, சூரைக்குருவி (Rosy Starlings), நீல வால் பஞ்சுருட்டான் (Blue Tailed bee eater) , தகைவிலான் (Swallows), பழுப்பு கீச்சான்(Brown Shrike) ஆகியவை வெளிநாட்டு வலசைப் பறவைகள். Orange headed Trush, Bay back கீச்சான், Rufus tailed lark, வேதிவால் குருவி, ஆகியவை உள்ளுர் வலசை பறவைகள் ஆகும். வலசை போகாத சில பறவைகளும் ஒருவித pattern ஐ பிரதிபலிக்கின்றன. உதாரணம், மாங்குயில் Jan to March பதிவுகள் ஏதும் இல்லை. சாம்பல் தகைவிலான் (Ashy wood swallow) , கருப்பு-வெள்ளை சிட்டு (oriental magpie robin), சாம்பல் நாணல் குருவி (Ashy Prinia), தவிட்டுப் புறா (Laughing Dove) இப்பறவைகள் விட்டு விட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. உள்ளூர் இடப்பெயர்வு ஏதும் இருக்கலாம்.
சில முக்கிய குறிப்புகள் :
சீரான கீச்சான்களின் வருகை : கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் (Bay backed Shrike) இப்பகுதிக்கு வலசை வரும் ஒரு பறவையாகும். வியக்கத்தக்க ஒரு செய்தி என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் அதன் முதல் வருகை மிகச் சரியாக ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் இருப்பதாகும்.
வருகை நிறுத்திய சீங்கார பூங்குயில் (Orange Headed Thrush) : நான் பறவைகள் பார்க்க துவங்கிய இரண்டு மூன்று மாதங்களிலேயே இந்த கண்ணைக் கவரும் பறவையை பார்க்க நேரிட்டது ஒரு சிறப்பான அனுபவம். இப்பகுதியில் புதர்கள் மிகுதியாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மரங்கள் நிறைந்து காணப்படும். அங்கு தான இப்பறவையை பார்த்தேன். அப்போது அது என்ன பறவை என்று தெரியாமல் அளவு மற்றும் வண்ணங்கள் கொண்டு புத்தகம் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பறவையின் பெயரை அறிந்து கொண்டது எனது சிறப்பான நினைவுகள் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து குளிர்காலங்களில் வலசையாக வரும் இப்பறவை இங்கிருந்த மரங்கள் நிறைந்த wood land வகை வாழிடத்திற்காக வந்திருக்கும். அந்த சீசனில் 3 ~4 முறை பார்த்திருப்பேன். ஆனால் சில நாட்கள் பிறகு அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினார்கள். எத்தனை ஆண்டுகளாகவோ வந்துகொண்டிருத்த சீங்கார பூங்குயில் அப்பகுதிக்கு கொண்டிருந்த வருகையை நிறுத்தியது.
பெருங்கண்ணி : புதிரான இந்த பறவை இங்கு சாதாரணம். தினமும் காலை 5 மணிக்கு குரல் எழுப்ப துவங்கிவிடும். சில நாட்கள் இரவு நேரம் முழுவதும் கூட குரல் எழுப்பிக்கொண்டிருக்கும்.பல நாட்கள் இந்த குரலை அடையாளம் காண முடியாமல் இருந்தது. பிறகு நண்பர்கள் உதவியுடன் இவரின் பெயர் எனக்கு தெரிய வந்தது. குரல்களை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த எனக்கு இவர்களை நேரில் கண்டு ரசிக்க பல நாட்கள் ஆகியது. இதன் ஓடி ஒளிந்துகொள்ளும் தன்மையும், உருமறைப்பு தன்மையும் எளிதாக காண முடியாததற்கு காரணம்.
இதன் இன்னொரு சிறப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல் ebird பதிவு இங்குதான் என்பதாகும்.
மாங்குயில் :
கோடை காலத்தில் அடிக்கடி பார்க்க முடிந்த இந்த பறவையை குளிர்காலங்களில் பார்க்க
முடிவதில்லை. உள்ளூர் வலசைக்கு மற்றுமொரு உதாரணம்.
தேன் சிட்டின் அவலம்: கிழிந்த பலூனை பூ
என்று எண்ணி அதில் தேன் (Nectar) உறிஞ்ச முயலும் தேன்சிட்டு. மனிதர்களின் செயல்கள் இதர
உயிரினங்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் குழப்பங்களுக்கு மற்றுமொரு உதாரணம்.
இப்படி ஒவ்வொரு பறவை இனத்திற்கும் ஒரு கதையும் உள்ளது. நான் வேறு ஊருக்கு குடி பெயர்ந்துள்ளதால் தற்போது இந்த இடத்திற்கு என்னால் போக முடியாது. அனாலும் பசுமையான பறவை நினைவுகளையும், தீவிரமடைந்து வரும் வாழிட ஆபத்துகளை பற்றிய கவலையும் அடிக்கடி மனதில் வந்து போகும் ஒரு விஷயமாக உள்ளது.
நன்றி.



No comments:
Post a Comment