Showing posts with label ஓவியர் ராமு. Show all posts
Showing posts with label ஓவியர் ராமு. Show all posts

Friday, February 18, 2011

சிதம்பர ரகசியம் - நகைச்சுவை சித்திரக்கதை

தமிழ் காமிக்ஸ் உலகில் கல்கி இதழில் வெளிவந்த தொடர் சித்திரக்கதைகள் மிகவும் முக்கியமான இடத்தை பெறுகின்றன. வாண்டுமாமா, செல்லம், ரமணி, வினு போன்ற ஒப்பற்ற கலைஞர்களின் திறமைகளுக்கு கல்கி இதழ் ஒரு சிறந்த வடிகாலாக விளங்கியது என்றால் அது மிகை அல்ல. இதில் வாண்டுமாமாவின் பல கதைகள் பார்வதி சித்திரக்கதைகள் இதழ் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றதை நாம் அறிவோம். இதோ இங்கு நாம் பார்க்கும் சித்திரக்கதை தொடர் ஒரு வித்தியாசமான கதை மற்றும் சித்திர அமைப்பு உடைய ஒரு  சித்திரக்கதையாகும்.


தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் நகைச்சுவை கதைகளின் பங்கு சற்று குறைவு போல எனக்கு ஒரு தோற்றம் தெரிகிறது. அதிலும் வெளிவந்த நகைச்சுவை கதைகளின் சித்திரங்கள் சாதாரண சித்திரங்களிலேயே இருக்கும். (உ-ம் பலே பாலு, நந்து சிந்து மந்து). லக்கிலூக், சிக்பில் போன்று கார்டூன் வகை சித்திரங்களுடன் தமிழ் காமிக்ஸை பார்ப்பது மிகவும் அறிது. இன்றை தினத்தந்தி - தங்க மலர், சிறுவர் மணி போன்ற இதழ்களில் கார்டூன் வகை சித்திரங்களை அவ்வப்போது பார்க்க முடிகிறது. ஆனால் இக்கதைகள் யாவும் சிறிய வயது குழ்ந்தைகளுக்கானதே. தரமும் குறைவு.

சிதம்பர ரகசியம்:

இந்த பதிவில் நாம் பார்க்கும் சித்திரக்கதை 1970 ல் துவங்கி கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த ஒன்று. கோமதி சுவாமிநாதன் என்பவரின் கதைக்கு ஓவியர் ராமு சித்திரங்கள் வரைந்திருக்கிறார். கோமதி சுவாமிநாதனை பற்றி googling செய்த போது இவர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் என்பது தெரிகிறது.
 

சிதம்பர ரகசியத்தின் கதை இது தான். சிதம்பரம் பர்மாவில் இருந்து திரும்பவிருக்கும் ஒரு பெரிய பணக்காரர். அவரின் சொத்துக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது உறவினர்கள் யாரையும் பார்த்திராத இவர் எப்படியோ தனது உறவினர்களை கண்டறிந்து தந்து மாளிகைக்கு வர அழைக்கிறார். சிதம்பரம் ஊரில் இல்லாத போது அவரின் சொந்தக்காரர்கள் அவரின் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு மாளிகையின் விசுவாசமான வேலைகாரனும் புதிதாக சேர்ந்த சமையல்காரனும் இருக்கிறார்கள். எவ்வித சந்தேகமும் இல்லாமல் உறவினர்களிடையே சொத்துக்காக போட்டி நிலவுகிறது. ஆக இந்த ஆறு ஏழு கதாபாத்திரங்கள் மாளிகையில் அடிக்கும் கூத்துகளே கதை. கடைசி சில பக்கங்களில் சிதம்பரம் வருகிறார். அவர் யாருக்கு சொத்துகளை கொடுத்தார் என்பது முடிவு. ஒரு முழுநீள நகைச்சுவைக கதைக்கான அனைத்து அம்சங்களுடன் கதை விளங்குகிறது.


கதையின் முதல் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு......




கதை முழுவது விழுந்து விழுந்து சிரிக்கவில்லை எனினும் பல இடங்களில் புன்னகையையும் சில இட்ங்களில் சிரிப்பையும் கொடுக்கிறது இந்த கதை. சித்திரங்களின் தரம் அருமை. ராமுவின் கைவண்ணம் பற்றி ஏற்கனவே தமிழ்வாணன் கதைகளுக்கு வரைந்திட்ட ஓவியங்கள் மூலம் ஒரு சிறப்பான அபிப்பிராயம் இருந்தது. இந்த சித்திரக்கதையை படித்த பின் அந்த அபிப்பிராயம் இன்னும் கூடுகிறது. அவரின் திறமையை தமிழ் பத்திரிக்கைகள் சரியாக பயன்படுத்தி கொண்டார்களா என கூட சந்தேகம் வருகிறது.


கோமதி சுவாமிநாதன
(புகைப்படம் உபயம் - அப்புசாமி இணையதளம்)
அந்தகால பேச்சுவழக்கு, சினிமா மோகம், நாடக மோகம், உடைகள், ஏழை பணக்காரர்கள் உறவு, வாகனங்கள், அரசியல் கமெண்டுகள் என நமது அப்பா, தாத்தாக்கள் காலத்திற்கு ஒரு பயணம் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த கதை. நான் படித்தது தொடர்கதை பைண்டிங் இதழ் என்பதால் அந்த கால விளம்பரங்களையும் மற்றும் சில கட்டுரைகளையும் போனஸாக படிக்க முடிந்தது. இந்த தொடர்கதை கல்கியின் அட்டைபடத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இது அந்த கால கல்கி நிறுவனம் சித்திரக்கதைகளுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது. கோமதி சுவாமிநாதன் - ராமு கூட்டணியில் எத்தனை சித்திரக்கதைகள் வந்துள்ளன எந்த்தெரியவில்லை என்றாலும் தமிழில் ஒரு சிறந்த சித்திரக்கதையை கொடுத்த பெருமையை பெறுகிறது இந்த கூட்டணி.
பதிவை படித்த நண்பர்களே, தவறாமல் உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குறிப்பு : மங்க்கி காமிக்ஸ் பற்றிய பதிவு கூடுதல் ஸ்கேன்களுடன் update செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு

(எவ்வித லாப நோக்கமும் இன்றி சித்திரக்கதையின் சில பக்கங்கள் இங்கே வழங்கப்பட்டு இருக்கின்றன. உர்மையாளர் ஆட்சேபித்தால் இவை நீக்கப்படும்)

Thursday, July 22, 2010

தமிழ்வாணன் - சில சித்திர துளிகள் (Tamilvannan and comics)

வணக்கம் நண்பர்களே,

வீடு மாற்றம், கால்பந்து மற்றும் BSNL லின் "அற்புத" சேவை ஆகிய காரணங்களால் சிறிது நாட்களாக பதிவிட முடியவில்லை. தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்வாணன் அவர்கள் மிக முக்கியமானவர். மிக வித்தியாசமானவர் கூட. தமிழில் துப்பறியும் நாவல்களை பிரபலப்படுத்தியவர் இவர்தான் என கூறலாம். நாவல் உலகின் நட்சத்திரமாக விளங்கிய தமிழ்வாணன் ஒருசில சித்திரக்கதைகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இவருடைய சித்திரக்கதைகளுக்கும் சரி நாவல்களிலும் சரி ஓவியர் ராமுவின் கைவண்ணமே அதிகம் தென்படுகிறது. இதோ என் கையில் கிடைத்த தமிழ்வாணனின் சித்திரக்கதை இதழின் சில பக்கங்கள்....

 

சென்னையில் படித்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் தொழிலதிபரின் மகன் துரைவேல் கப்பல் ஒன்று மூலமாக ஊருக்கு திரும்புகிறார். கப்பல் போய்கொண்டிருக்கும் போது சிறிய புயல் ஒன்று கப்பலை தாக்குகிறது. ஆனாலும் கப்பல் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்புகிறது. ஆனால் புயல் ஓய்ந்தபின் துரைவேலை காணவில்லை. துரைவேல் இல்லாமலே கப்பல் சிங்கப்பூர் அடைகிறது. துரைவேல் என்ன ஆனார்?? உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை சுவையாக சொல்லி இருக்கிறார் தமிழ்வாணன். ராமுவின் அற்புதமான சித்திரங்களில் இந்த கதை ஒரு சிறந்த தமிழ் சித்திரக்கதையாக விளங்குகிறது. கதையில் எதிர்பாராத திருப்பங்களுக்கு பஞ்சம் இல்லை. ஒரு குரங்கானது முக்கிய பாத்திரத்தில் வருகிறது. அதன் தியாக உள்ளம் மற்றும் உதவும் குணம் நெஞ்சை தொடுவதாக இருக்கிறது. தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் முக்கிய இடம் "திரும்பி வரவில்லை" க்கு கண்டிபாக உண்டு. இந்த இதழின் அட்டைபடமும் அட்டகாசமான ஒன்று. இவ்விதழின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...




 
தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள்:


'மனசில என்ன துப்பறியும் புலி சங்கர்லால் என நினைப்போ' என்று பேச்சு வழக்கில் வரும் அளவிற்கு சங்கர்லால் புகழ் பெற்ற ஒரு துப்பறியும் கதாநாயகனாக விளங்கினார்.பழைய கல்கண்டு இதழ்களில் சங்கர்லால் எனும் பாத்திரம் உயிருடன் உலாவது போன்றே தகவல்கள் வருமாம். முதலில் சங்கர்லால் துப்பறியும் நாவல்களை எழுதிய தமிழ்வாணண் பிறகு அவரது நாவல்களில் தானே நாயகன் ஆகிகொண்டார். (தற்போதைய தமிழ் இயக்குனர்கள் போல). தனித்தனி புத்தகங்களாக வெளிவந்த சங்கர்லால் புத்தகங்கள் தற்போது மூன்று தொகுதிகளாக அட்டகாசமான வடிவமைப்பில் விற்பனைக்கு கிடைக்கிறது. பழைய சில புத்தகங்களில் சில இன்னும் தனி நாவலாக கிடைக்கிறது. அவற்றில் சிலவற்றின் அட்டைபடங்கள்..

 
தமிழ்வாணன் எழுதிய பல நாவல்கள் கல்கண்டு புத்தகத்தில் தொடராக வந்தவையே.. அத்தகைய தொடர்களில் ஓவியர் ராமுவின் கைவண்ணங்கள்...

 






கனவுகளின் காதலர் சீறிபாயும் கார்கள் பற்றி கூறியிருந்தார். பழைய கல்கண்டு புத்தகங்களை புரட்டி பார்த்ததில் ஓவியர் ராமுவின் கைவன்ணத்தில்  நிறையவே கார்கள் சீறுகின்றன. சில படங்கள்..

AMIT என்ற காமிக்ஸ் இதழில் சங்கர்லால் கதைகள் சித்திரக்கதைகளாக மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இங்கே இருக்கும் இதழ்கள் தவிற வேறு சில சங்கர்லால் சித்திரக்கதைகளும் வெளியிடப்படிருப்பதாக நண்பர் விஸ்வா ஒருமுறை கூறினார்.


பின்குறிப்பு : இது திரு தமிழ்வாணன் பற்றிய முழு தகவல் களஞ்சியம் அல்ல. என்னிடம் இருக்கும் தமிழ்வாண்னின் படைப்புகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே. தமிழ்வாணனின் சித்திரக்கதை முயற்சிகள் பற்றி வேறு தகவல்கள் இருப்பின் பின்னூட்டம் மூலம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.