Sunday, November 28, 2010

மர்ம வீரன் ராஜராஜ சோழன் (Marma veeran Rajaraja cholan)

வணக்கம் நண்பர்களே. விஜயன் சாரின் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும்  புத்துணரச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது. இந்த மகிழ்ச்சியான தருனத்தில் தஞ்சை நகரில் இருந்து வெளிவந்த ஒரு காமிக்ஸ் முயற்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரிய பெரிய வரலாற்று புத்தகங்களை புரட்டி தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இன்று உள்ளது. பள்ளிகளில் புகட்டப்படும் கல்வில் நம் சொந்த இன வரலாறு பற்றி அதிகம் கற்பிக்கப்படுவதில்லை. நெப்போலியன், அசோகா, ஷாஜகான் போன்ற மன்னர்களை விட ராஜராஜ சோழன் மற்றும் கரிகால சோழன் பற்றி நம் மாணவர்கள் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலக போர் பற்றி நமக்கு தெரிந்ததை விட இந்திய - சீன போர் பற்றி குறைவாகவே நமக்கு தெரியும். அவள்ளவு ஏன்? தீரன் சின்ன மலை என்ற தமிழ் வீரன் ஆங்கிலேயர்களை இரண்டு போர்களில் வீழ்த்தி உள்ளான். அவனை பற்றி எந்த பாடபுத்தகத்திலும் சரி எந்த வெகுஜன பத்திரிக்கையிலும் சரி நான் படித்தது கிடையாது (சிறிது காலம் முன் வரை). உங்களுக்கு தெரிந்த சில மாணவர்களிடம் மேற்கண்ட தகவல்கள் பற்றி சில கேள்விகள் கேட்டு பாருங்கள். நாம் நம்முடைய சொந்த கலாச்சாரம் பற்றியும் நம் தமிழ் வரலாறு பற்றியும் எந்த அளவு தெரிந்து வைத்துள்ளோம் என தெரியும். நம்முடைய வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டால் இந்த குறை ஓரளவு தீரும்.

அட்டைபடம்

முகப்பு பக்கம்

 அதே சமயம் நமது ஊடகங்களிலும் தமிழ் மன்னர்கள் பற்றிய கதை, கட்டுரை மற்றும் தகவல்கள் நிறைய வரவேண்டும். தமிழ் மன்னர்கள் பற்றி கொண்டு சேர்க்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்திடவே செய்கின்றன. கல்கியின் படைப்புகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தமிழ்நாட்டின் மன்னர்கள் கால வாழ்க்கை முறை பற்றி பாடப்புத்தகங்களின் மூலம் தெரிந்து கொண்டதை விட கல்கியின் நூல்கள் மூலமே நான் அதிகம் அறிந்து கொண்டேன் என்பதுதான் உண்மை. இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் நூலானது தமிழ் மன்னன் ராஜராஜ சோழனின் பெருமைகளை சிறுவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகும்.
கன்னிதீவு, தங்க கண்ணாடி, ராஜகம்பீரன் போன்ற சித்திரக்கதைகளை வழங்கிய ஓவியர் தங்கம் அவர்களின் துனைவியார் ஓவியர் சந்திரோதயம் அவர்களின் கைவண்ணத்தில் 'மர்ம வீரன் ராஜராஜ சோழன்' உருவாகி உள்ளது. தரமான காகிதத்தில் அற்புதமான அட்டைபடத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2005 லேயெ வந்துவிட்ட இந்த இதழ் இப்போதுதான் கையில் கிடைத்தது. விலை ரு.60
புத்தக விபரங்கள்
முன்னுரை


அணிந்துரை


சோழ அரசு வளமுடனும், பாண்டிய அரசு வீழ்ச்சி அடைந்த நிலையில் இருந்த காலகட்டத்தில் இந்த கதை துவங்குகிறது. சோழ இளவரசி குந்தவைக்கு குறி வைத்து பாண்டியர்கள் தீட்டும் சதி திட்டத்துடன் கதை ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் நாகையில் சோழ இளவரசர் அருள்மொழி ஒரு முக்கியமான கடற்பயணம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் ஆழ்ந்துள்ளார். கடற்கொள்ளையர்களை ஒழித்து தமிழக வாணிபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே அவரது கடற்பயனத்தின் நோக்கம். இந்நிலையில் அவர் பெருமதிப்பு வைத்திருக்கும் புத்த பிட்சுகள் புத்த சிலையை சாவகம், காம்போஜம் போன்ற தீவுகளுக்கு கொண்டு சேர்க்கு புனித பணியையும் இளவரசரிடம் கொடுக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் தன் அக்காவிற்கு ஆபத்து இருப்பதை சோழ நாட்டு ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொள்கிறார். இளவரசர் மாறுவேடத்தில் பழையாறுக்கு பயணமாகிறார். அங்கு தன் சகோதரிக்கு நிகழவிருந்த ஆபத்துகளை களைகிறார். பாண்டிய எதிரிகளை அழிக்கிறார். இது தான் கதை.

கதாபாத்திரங்கள் அறிமுகம்

கதையின் ஆரம்பம் (பாண்டிய ஒற்றர்களின் திட்டம்)
குந்தவை - அருள்மொழி சந்திப்பு

சிறுவர்களை குறி வைத்து கதை புனையப்பட்டிருப்பதால் 'தீவிர' இலக்கிய தாகத்துடன் படிப்பவர்களுக்கு ஏற்ற இதழ் இதுவல்ல. சிறுவர்களுக்கான படைப்பு என்ற வகையில் இது ஒரு மிகச்சிறந்த படைப்பு. சித்திரங்கள் நன்றாக உள்ளன. எடிட்டிங்கில் மட்டும் சிறிது அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது ஒரு சிறிய குறை. ஆசிரியர் கல்கியில் கதாபாத்திரங்களை கொண்டே இந்த கதையில் பாத்திரங்களை படைத்திருக்கிறார். கதை நடைபெறும் காலகட்டமும் பொன்னியின் செல்வன் காலகட்டமே. ஓவியர் மணியம் கொடுத்த உருவங்களிலே கதாபாத்திரங்களை உலாவிடுகிறார் ஆசிரியர் சந்திரோதயம். இந்த புத்தகத்தில் சித்திரக்கதை தவிர 'சித்திரமும் மொழியும்' எனற கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இதில் பழைய சித்திர எழுத்து முறை பற்றியும் இன்ன பிற தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழின் முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகத்தை பற்றியும் கூறுகிறார்கள். பயனுள்ள தகவல்கள். ஆசிரியர் சந்திரோதயம் அவர்கள் ஒரு ஓவிய ஆசிரியர் என்பது இங்கு ஒரு கூடுதல் தகவல். ஆசிரியர்க்கு ஓவியத்திலும் வரலாற்றிலும் ஒரு சேர ஆர்வம் இருப்பது புத்தகத்தில் தெளிவாய் தெரிகிறது. ஆர்வம் மட்டுமே முதலாய் கொண்டு இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளனர் தங்கம்-சந்திரோதயம் தம்பதியினர். அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.

சித்திர எழுத்துக்கள் பற்றிய கட்டுரை

ஆசிரியர் பற்றி

இந்த புத்தகம் இன்னும் ஆசிரியரிடம் இருப்பு உள்ளது. கீழ்கண்ட முகவரிக்கு M.O அனுப்பி இந்த புத்தகத்தை வாங்கி விடலாம். நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால் 'ராஜகம்பீரன்' சித்திரக்கதை புத்தகத்துடன் இதனுடன் வாங்கிட மறந்திட வேண்டாம். M.O அனுப்பி பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் புத்தகம் வாங்குவது தொடர்பான தகவல்களை அவர்களே தெரிவித்து விடுவர். நண்பர்களை இப்போதும் புத்தகம் வாங்கி படித்த பிறகும் நங்களுடைய கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.தினத்தந்தியில் ராஜகம்பீரன் பற்றிய மதிப்புரை படிக்க
ராஜகம்பீரன் சித்திரக்க்தை பற்றிய முழுமையான பதிவை படிக்க
தினமணியில் தங்கம் தம்பதி பற்றிய கட்டுரை படிக்க


Sunday, November 14, 2010

ரஷ்ய சித்திரக்கதைகள் (Russian comics)

சிறிது நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலை தளத்தில் புத்தக வாசிப்பு பற்றிய ஒரு கட்டுரையில் தன் சிறு வயதில் படித்த படக்கதை ஒன்று பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அந்த பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்
\\\சிறுவயதில் படித்த படக்கதை ஒன்று.

ஒரு பூனை ஒன்று நூல்கண்டை உருட்டிக் கொண்டிருக்கிறது. நூல் உருண்டு உருண்டு போகிறது. பூனை நூலின் பின்னாலே விரட்டி போகிறது. முடிவில் நூல் முடிந்துவிடுகிறது. பூனை நூல் எங்கே போனது என்று புரியாமல் திகைத்து போய் நிற்கிறது. அந்த திகைப்பு அற்புதமானது.இந்த சித்திரக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. எட்டே வண்ணச்சித்திரங்கள். வெறுமையை புரிந்து கொள்ள முடியாத பூனை தான் வாசகனின் மனது.\\\
இதை படித்த உடன் என் மனதில் அட இது போன்ற ஒரு கதையை நாம் எங்கயோ படித்திருக்கிறோமே என்று பட்டது. அப்போதே அடுத்த முறை ஊருக்கு போகும் போது பழைய புத்தகங்களை புரட்டி போட்டாவது இந்த சித்திரக்கதை எதில் வந்தது என பார்த்து அந்த இதழை எடுத்திட வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். அவ்வாறே திபாவளி விடுமுறையில் ஊருக்கு சென்ற போது சில மணி நேர தேடல்களின் முடிவில் அவ்விதழினை கையகப்படுத்தினேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடும் அந்த சித்திரக்கதை மற்றும் அவ்விதழின் அட்டைபடம் இதோ....

அட்டைப்படம்

பூனையும் நூல்கண்டும்

அனேகமாக இந்த புத்தகம் தான் எனக்கு முதன்முதலில் வாங்கி கொடுக்கபட்ட புத்தகம் என எண்ணுகிறேன். இந்த இதழ் ரஷ்யாவின் ராதுகோ பதிப்பகம் இந்தியாவின் நியு சென்சுரி புக் ஹவுஸ் மூலமாக 19வெளியிட்டு இருக்கிறது. அட்டகாசமான அச்சுத்தரம், சிறப்பான சித்திரங்கள், வேடிக்கையான கதைகள் என ஒரு சிறந்த குழந்தைகள் புத்தகமாக திகழ்கிறது.  Off course இன்று இந்த புத்தகங்கள் கிடைப்பதில்லை.
இதே இதழில் இடம்பெறும் வேறு சில சித்திரக்கதைகள். சித்திரக்கதைகளுக்கான தலைப்புகள் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

தவளைகளின் அட்டகாசம்


எங்கே என் தொப்பி

வால் இழுக்கும் போட்டி


இந்த எளிய சித்திரக்கதைகள் எப்படி இருக்கின்றன?? படித்துவிட்டு பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.
அப்புறம் சொல்ல மறந்து விட்டேன்.  இரத்தப்படலம் கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னை போன்ற கிடைக்காதோர்க்கு சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்

Update on 09/01/12 :

Reprint of the above book is available in NCBH. With different coverpage. Price-Rs 60/-. For more details see here.


Monday, September 27, 2010

ராஜராஜன் சோழன் சித்திரக்கதை பற்றி தினமணி

இந்த வார தினமணி - கொண்டாட்டம் இணைப்பு ராஜராஜன் சோழன் சிறப்பு இதழாக மலர்ந்து இருந்தது. அதில் "இராஜ கம்பீரன்" சித்திரக்கதை படைத்த ஓவியர் தங்கம் அவர்களின் பேட்டி வெளிவந்திருகிறது. அதன் ஸ்கேன் வடிவம் இதோ ....
சித்திரக்கதை எழுத்தாளர் ஒருவரின் பேட்டியை தினமணி வெளியிடுவது ஆரோக்கியமான  சங்கதி.
ஓவியர் தங்கம் பேட்டி

தினமணி கொண்டாட்டம் முகப்பு பக்கம்

ஓவியர் தங்கம் அவர்களின் துணைவி சந்திரோதயம்  அவர்களும்  "மர்ம வீரன் ராஜராஜ சோழன்" என்ற சித்திரக்கதையை வழங்கி உள்ளதாக தெரிகிறது.
"இராஜ கம்பீரன்" சித்திரக்கதை பற்றிய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்.

Thursday, September 23, 2010

மங்க்கி காமிக்ஸ் (Monkey comics)

வணக்கம் நண்பர்களே... ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு. சமீப காலமாகவே காமிக்ஸ் பதிவுலகில் பதிவுகள் குறைந்துவிட்டது  போல் தெரிகிறது. கனவுகளின் காதலர் மட்டும் பின்னிஎடுக்கிறார். (ஆனால் காமிக்ஸ் பற்றிய பதிவுகள்தான் குறைவு). அதே போல் லயன் காமிக்ஸ் அலுவலகத்திலிருந்து  எந்த நற்செய்தியும் வராமலிருப்பது சோர்வளிக்கிறது. கூடிய விரைவில் நற்செய்தி எதாவது வந்தால் நன்றாக  இருக்கும்.

இனி பதிவிற்கு செல்வோம்...
மங்க்கி  காமிக்ஸ் (இப்படியும்  ஒரு பெயர்) - 1995~1999 களில் வெளிவந்த தமிழ் சித்திரக்கதை இதழ்.  மொத்தம் 8 ~ 10 இதழ்கள் வந்திருக்கும் என் எண்ணுகிறேன். என்னிடம் நான்கு இதழ்கள் உள்ளன.

நட்சத்திர யுத்தம்

முதல் இதழான நட்சத்திர யுத்தம் 1995 ல் வெளிவந்து இருக்கிறது. ஆசிரியரின் குறிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


கழுகு மலை புதையல்
இது ஒரு இ.கோ.மு.சிங்கம் போல் இந்திய கெளபாய் கதையாகும். ராஜ்பிரசாத் என்பவர் கதை மற்றும் ஓவியங்கள் வரைந்துள்ளார். ஓவியர் மாருதியின் அட்டகாச அட்டைபடம் இதழுக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ன்ட். காமிக்ஸ் உலகில் மாருதியின் படைப்புகள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. அட்டைப்படத்தில் இருக்கும் தரத்தை உள்ளேயும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மற்றபடி புத்தகத்தின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு.
(அட்டைபடம், ஆசிரியர் பக்கம், வாசகர் கடிதம், வள்ளியண்ணா சிறுகதை மற்றும் தொடர்கதை....)

 மங்க்கி  காமிக்ஸ் ஸ்பெஷல் :
கோடை காலத்தில் மங்க்கி காமிக்ஸில் இருந்து வெளிவந்த ஒரு ஸ்பெசல் புத்தகத்தின் சில பக்கங்கள்....இங்கு மாருதியின் அட்டைபடம் மிஸ்ஸிங்.
ஜட்ஜ் dredd - அட்டைபடத்தில் மட்டும்.

(போலிஸ் அக்காவின் தாடிக்காக மாஸ்டர் சிவ் வை மன்னித்துவிடுங்கள்.)
இந்த இதழின் கதைகளின் முதல் பக்கங்கள் ....இந்த ஸ்பெஷல் இதல் ஏற்கனவே வந்திருந்த கதைகளின் மறு பதிப்பே.

பதிவை பொறுமையாக படித்தற்கு நன்றி.  தங்கள் கருத்துகளையும் தகவல்களையும்  நண்பர்கள் இங்கே  பகிர்ந்து கொள்ளவும்.

Monday, August 9, 2010

வாதாபி கலை மடல்

ஓவியர் மணியம் அவர்கள் ஒரு முறை கன்னட நாட்டிலுள்ள பாதாமி என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்த சிற்பங்களை ரசித்து வியந்து ஊள்ளார். மன்னர்கள் காலத்தில் இச்சிற்பங்கள் எப்படி வடிக்கப்பட்டு இருந்திருக்கும் என்ற கற்பனையை ஓவியமாக தீட்டி அன்றைய கல்கி இதழில் வெளியிட்டுள்ளார். இவ்வோவியங்களுக்கு அவர் வைத்திட்ட பெயர் 'வாதாபி மடல்'

இதே ஓவியங்களின் மறுபதிப்பை ஒரு பழைய மாத இதழில் (ஓம் சக்தி) பார்க்க நேரிட்டது. அவற்றின் ஸ்கேன்கள் அப்படியே இங்கே....Thursday, July 22, 2010

தமிழ்வாணன் - சில சித்திர துளிகள் (Tamilvannan and comics)

வணக்கம் நண்பர்களே,

வீடு மாற்றம், கால்பந்து மற்றும் BSNL லின் "அற்புத" சேவை ஆகிய காரணங்களால் சிறிது நாட்களாக பதிவிட முடியவில்லை. தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்வாணன் அவர்கள் மிக முக்கியமானவர். மிக வித்தியாசமானவர் கூட. தமிழில் துப்பறியும் நாவல்களை பிரபலப்படுத்தியவர் இவர்தான் என கூறலாம். நாவல் உலகின் நட்சத்திரமாக விளங்கிய தமிழ்வாணன் ஒருசில சித்திரக்கதைகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இவருடைய சித்திரக்கதைகளுக்கும் சரி நாவல்களிலும் சரி ஓவியர் ராமுவின் கைவண்ணமே அதிகம் தென்படுகிறது. இதோ என் கையில் கிடைத்த தமிழ்வாணனின் சித்திரக்கதை இதழின் சில பக்கங்கள்....

 

சென்னையில் படித்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் தொழிலதிபரின் மகன் துரைவேல் கப்பல் ஒன்று மூலமாக ஊருக்கு திரும்புகிறார். கப்பல் போய்கொண்டிருக்கும் போது சிறிய புயல் ஒன்று கப்பலை தாக்குகிறது. ஆனாலும் கப்பல் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்புகிறது. ஆனால் புயல் ஓய்ந்தபின் துரைவேலை காணவில்லை. துரைவேல் இல்லாமலே கப்பல் சிங்கப்பூர் அடைகிறது. துரைவேல் என்ன ஆனார்?? உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை சுவையாக சொல்லி இருக்கிறார் தமிழ்வாணன். ராமுவின் அற்புதமான சித்திரங்களில் இந்த கதை ஒரு சிறந்த தமிழ் சித்திரக்கதையாக விளங்குகிறது. கதையில் எதிர்பாராத திருப்பங்களுக்கு பஞ்சம் இல்லை. ஒரு குரங்கானது முக்கிய பாத்திரத்தில் வருகிறது. அதன் தியாக உள்ளம் மற்றும் உதவும் குணம் நெஞ்சை தொடுவதாக இருக்கிறது. தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் முக்கிய இடம் "திரும்பி வரவில்லை" க்கு கண்டிபாக உண்டு. இந்த இதழின் அட்டைபடமும் அட்டகாசமான ஒன்று. இவ்விதழின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு...
 
தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள்:


'மனசில என்ன துப்பறியும் புலி சங்கர்லால் என நினைப்போ' என்று பேச்சு வழக்கில் வரும் அளவிற்கு சங்கர்லால் புகழ் பெற்ற ஒரு துப்பறியும் கதாநாயகனாக விளங்கினார்.பழைய கல்கண்டு இதழ்களில் சங்கர்லால் எனும் பாத்திரம் உயிருடன் உலாவது போன்றே தகவல்கள் வருமாம். முதலில் சங்கர்லால் துப்பறியும் நாவல்களை எழுதிய தமிழ்வாணண் பிறகு அவரது நாவல்களில் தானே நாயகன் ஆகிகொண்டார். (தற்போதைய தமிழ் இயக்குனர்கள் போல). தனித்தனி புத்தகங்களாக வெளிவந்த சங்கர்லால் புத்தகங்கள் தற்போது மூன்று தொகுதிகளாக அட்டகாசமான வடிவமைப்பில் விற்பனைக்கு கிடைக்கிறது. பழைய சில புத்தகங்களில் சில இன்னும் தனி நாவலாக கிடைக்கிறது. அவற்றில் சிலவற்றின் அட்டைபடங்கள்..

 
தமிழ்வாணன் எழுதிய பல நாவல்கள் கல்கண்டு புத்தகத்தில் தொடராக வந்தவையே.. அத்தகைய தொடர்களில் ஓவியர் ராமுவின் கைவண்ணங்கள்...

 


கனவுகளின் காதலர் சீறிபாயும் கார்கள் பற்றி கூறியிருந்தார். பழைய கல்கண்டு புத்தகங்களை புரட்டி பார்த்ததில் ஓவியர் ராமுவின் கைவன்ணத்தில்  நிறையவே கார்கள் சீறுகின்றன. சில படங்கள்..

AMIT என்ற காமிக்ஸ் இதழில் சங்கர்லால் கதைகள் சித்திரக்கதைகளாக மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இங்கே இருக்கும் இதழ்கள் தவிற வேறு சில சங்கர்லால் சித்திரக்கதைகளும் வெளியிடப்படிருப்பதாக நண்பர் விஸ்வா ஒருமுறை கூறினார்.


பின்குறிப்பு : இது திரு தமிழ்வாணன் பற்றிய முழு தகவல் களஞ்சியம் அல்ல. என்னிடம் இருக்கும் தமிழ்வாண்னின் படைப்புகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே. தமிழ்வாணனின் சித்திரக்கதை முயற்சிகள் பற்றி வேறு தகவல்கள் இருப்பின் பின்னூட்டம் மூலம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.