Sunday, May 2, 2010

சமூக விழிப்புணர்ச்சியில் சித்திரக்கதைகள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். ( குறள் எண் : 435 )
(குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்)

ஏமாறுகிறவன் இருக்கிறவரை ஏமாற்றுபவன் இருப்பான் என்பது பொதுமொழி. ஏமாறாமல் இருக்க எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாம் ஏமாற்று பேர்வளிகளுடன் கூட்டு வைத்துகொள்ள தேவையில்லை. காமிக்ஸ் படித்தாலே போதும். ஆம் மோசடி மன்னர்கள் வாழும் இந்த சமுதாயத்தில் மோசடிகள் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வது விழிப்புணர்ச்சி ஆகும். இந்த விழிப்புண்ர்ச்சியை நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் படித்த காமிக்ஸ்கள் சிறப்பாக செய்திருக்கின்றன என்பது என் கருத்து. எண்ணிலடங்கா காமிக்ஸ்கள் இந்த பணியை செய்திருந்தாலும் ஒரு சில காமிக்ஸ்கள் மனதில் பளிச்சென்று வருகின்றன.


1. பனியில் ஒரு பிணம்:



மனிதர்கள் அனைவருக்கும் வாழ்க்கை துணை என்பது மிகவும் அவசியம் தான். ஆனால் பொருத்தமான துணை அவ்வளவு எளிதாக சிலருக்கு கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக தோற்றகவர்ச்சி குறைவாக இருக்கும் பெண்களுக்கு வாழ்க்கைதுணை அமைவது பெரும் சவாலாகவே அனைத்து நாடுகளிலும் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிராமத்து பெண்களை ஏமாற்றி முடிந்தளவு பணத்தை கறந்துவிட்டு அப்பாவி பெண்களை கொலையும் செய்யும் ஒரு கீழ்தரமானவனின் கதையே பனியில் ஒரு பிணம்.





ராபினின் அறிமுக சாகசமான இந்த கதை காதல் என்ற பெயரில் செய்யப்படும் மோசடிகளை தோலுரித்து காட்டுகிறது. அட்டகாசமான அட்டைபடத்துடன் வெளிவந்த இந்த காமிக்ஸ் எப்போதும் எனக்கு பிடித்த ஒன்றாகும். நம்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் வீட்டைவிட்டு ஓடிபோவது என்பதை மானபிரச்சனையாகவே கருதுகிறார்கள் என்பது ஆச்சரியம்.
 
 விஜயன் சாரின் அற்புதமான தமிழ்நடை இந்த கதைக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது.

2. சிவப்பு தலை சாகஸம்.
எந்த ஊரிலும் ஆதாயம் இல்லாமல் ஓசியில் எதுவுமே தரமாட்டார்கள் என்பது Golden rule. அதை புரிந்து கொள்ளாமல் அற்ப வேலைக்கு அதிக பணம் தருகிறார்கள் என தன் சொந்த கடையை மொள்ளமாரி பயல் ஒருவனின் பொறுப்பில் விட்டு விட்டு 'செம்பட்டை முடியுடையோர்' சங்கத்தில் வேலைக்கு சேர்கிறார் வில்ஸன். இதன் மூலம் ஒரு வங்கி கொள்ளைக்கு தன்னை அறியாமல் துணைபோகிறார். ஷர்லக் ஹோம்ஸின் வித்தியாசமான கதை.


(இங்கு சிவப்பு தலை என்பது தல அஜித்தை குறிக்கவில்லை.)


3. பரலோக பரிசு.
கள்ள நோட்டு பற்றி உஷாராக இருக்கும் நாம் போலி பத்திரங்கள் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதிலும் இந்த கதையில் போலி பத்திரங்களை மக்களிடையே உலாவ விடும் தந்திரம் (பரிசு போட்டி) அபாரம் மற்றும் யாரும் எதிர்பார்க்காதது.  

(ஸ்கேன் உதவி - TCU)


 
4. வேங்கை வேட்டை
இந்திய மன்னன் என்று சொல்லிக்கொண்டு பங்கு வர்த்தகம் நடத்தும் ஏமாற்று பேர்வழியின் பகட்டான தோற்றத்தையும் கவர்ச்சிகரமான திட்டத்தையும் பார்த்து ஏமாறுகிறார்கள் மக்கள். அந்த மோசடி மன்னனின் உண்மை முகத்தை ரிப் வெளிகொண்டுவருகிறார்.


ஏமாறும் மக்கள்

ஏமாறும் பெண்கள்

மன்னனின் உண்மை முகம்
 
5. மேடையில் ஒரு மன்மதன்
கடமை முதலில் களிப்பு பிறகு என்பதை இங்கு சிலர் மறந்து விடுகிறார்கள். நாடகம் என்ற பெயரில் ஊரில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒரே இடத்தில் கூட வைத்து வங்கியை கொள்ளை அடிக்கும் கும்பலின் கதை.



6. நடுநிசி பயங்கரம்
முன்பின் தெரியாவனுடன் பார்ட்டியில் நடனம் ஆடுவதே தவறு. அதுமட்டுமில்லாமல் அவனது இருப்பிடத்திற்கும் சென்று வம்பை விலைக்கு வாங்கும் ஒரு பெண்ணின் கதை.
 
 
7. மாயாஜால மோசடி
வெறும் மனதை வைத்துக்கொண்டு அனைத்தும் அடையலாம் என்று கூறும் ஒருவன் மீது நமது மக்களுக்கு உடனே பக்தி வந்துவிடுகிறது. உழைப்பு இல்லாமல் எதையும் அடைய முடியாது என்ற உண்மையை மறந்து விட்டு நேரத்தையும் செல்வத்தையும் ஏமாற்று பேர்வழிகளிடம் அடகு வைக்கிறார்கள். இந்த கதையை முழுமை உணர்ந்து படித்த எவறும் நித்தியானந்தா போன்றவர்களை கண்டிப்பாக நாடி இருக்க மாட்டார்கள் என்பது என் ஊகம். நகைச்சுவையான ரிப் சாகஸம்

 
8. போலி சாமியார்
போலி சாமியார்களிடம் அப்பாவி மக்கள் மட்டுமெ ஏமாறுவார்கள் என்றில்லை. திருடர்களும் பேராசைபட்டு ஏமாறுகிறார்கள். இந்த கதையிலும் மோசடி ஆள் இந்தியாவின் பெயரையே உபயோகப்படுத்துகிறான். மாடஸ்டியின் சூப்பர் சாகஸம் மொக்கை மொழிபெயர்ப்பில்.
 
 
காமிக்ஸ் படிப்பதால் நிறைய மோசடிகளை பற்றி தெரிந்துகொள்கிறோம். ஆகையால் சிறுவர்களுக்கு காமிக்ஸ் படிப்பதை ஊக்குவிப்போம் நண்பர்களே.

குறிப்பு 1: மேலிருக்கும் கதைகளில் பெரும்பாலான கதைகளில் பெண்களே ஏமாற்றப்படுகிறார்கள். இதிலிருந்து எனக்கு எழும் கேள்வி

"பெண்களை ஏமாற்றுவது சுலபமா அல்லது ஏமாற்றும் ஆசாமிகளை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கிறதா?"
 
இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்போர்க்கு சுவாமி குத்தானந்தாவின் ஆசி பெற்ற ஆயிரம் போலி  பொற்காசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.