Friday, January 2, 2026

சிறுபகுதி பறவை நோக்கல் - இருங்காட்டுக்கோட்டை

Patch Birding என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பறவைகளை ஆண்டு முழுவதும்  (குறைந்தபட்சம் ஒரு ஆண்டு) சீரான இடைவெளியில் பதிவு செய்யும் முறையாகும். இதன் மூலம் அப்பகுதி பறவைகளின் வசிப்பிடம், இனப்பெருக்க சுழற்சிகள், வலசை காலங்கள், எண்ணிக்கைகளில் ஏற்ற இறக்கங்கள் ஆகியன பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். 

(Patch Birding என்பதை சிறுபகுதி பறவைகள் நோக்கல் என்று மொழிபெயர்த்துள்ளேன். இன்னும் பொருத்தமான மொழிபெயர்ப்பு இருந்தால் பின்னூட்டமிடவும்)



Patch Birding க்கு சில நுணுக்கமான விதிகள் உண்டு. இதனை பற்றி விரிவாக அறிந்துகொள்ள Bird count of India வலைத்தளத்தை பார்வையிடலாம்.

எனது வீடு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆண்டு முழுவதும் பறவைகளை தொடர்ந்து சீரான இடைவெளியில் பதிவு செய்யும் முயற்சியை 2022 வாக்கில் துவங்கினேன். ஏற்கனவே கூறியது போல Patch Birding க்கு நுணுக்கமான விதிகள் உண்டு. அவற்றை இங்கு என்னால் முழுமையாக பின்பற்ற இயலவில்லை. அதனால் இதனை ஒரு முழுமையான Patch Birding என்று சொல்ல முடியாது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இங்குள்ள பறவைகளை பதிவு செய்ததில் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.

எனது Patch (பறவைகள் பதிவு செய்த இடம்):

திருப்பெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை அருகில் உள்ள இன்னும் வீடுகள் வராத காலி வீட்டு மனைகள் உள்ள ஒரு சதுர கிமீ பகுதியாகும். 20 ~ 30 வருடங்களுக்கு முன் விவசாய நிலமாக இருந்திருக்க கூடும். தற்போது சிறு சிறு தொழிற்சாலைகள் வந்த வண்ணம் உள்ளன.

கோடையில் நிலப்பரப்பு 

தாவர அமைப்பு : பறந்த புல்வெளியில் முட்புதர்களும் ஆங்காங்கே சில மரங்களும் உள்ளன.

ஆக்கிரமிப்பு மரமான சீமைக்கருவேலம் மிகுதியாக உள்ளது. அதற்கு சற்றே குறைவாக வன்னியும் நுணாவும் இயற்கையாக முளைத்து வளர்ந்து வருகின்றன. எல்லைகளில் (குடியிருப்பு பகுதி அருகில்) சூபாபுல் ஆக்கிரமிப்பு தாவரமாக பரவி வருகிறது. குறைந்த எண்ணுகையில் சில வேப்ப மரங்கள், வாகை மரங்கள் உள்ளன. முட் புதர்களில் தொரட்டி, நிலக்குமிழ், வென்புலா போன்ற செடிகள் அதிகமாக உள்ளன.  உண்ணிச்செடி, செடி வகைகளில் உள்ள ஆக்கிரமிப்பு தாவரமாக உள்ளது. இன்று வரை மனிதர்களின் தலையீடு மிகவும் குறைவாக உள்ள பகுதிதான்.  காப்பு காடு அல்லாது 20~30 வருடங்களாக மனிதர்கள் அந்தளவு தலையிடாத ஒரு பகுதியில் பறவைகள் - உயிரினங்கள் எவ்வாறு உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதை பார்க்கலாம்.

பறவைகள் அல்லாத பிற உயிரினங்கள் :

பறவைகள் அல்லாத பிற உயிரினங்கள் முறையாக அவனப்படுத்தப்படவில்லை. இருந்தாலும் அடிக்கடி கண்ணில் தென்பட்ட உயிரினங்கள்.

ஊர்வன வகைகள் - சாரை பாம்பு , பச்சை பாம்பு, தண்ணீர் பாம்பு வகைகள்,  உடும்பு, ஓணான்-பல்லி வகைகள்.

பாலூட்டிகள் - முயல், கீறி, பெருச்சாளி, அணில், எலி , வவ்வால் வகைகள்

பறவைகள் :

இதுவரை 83 வகைப் பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தவிட்டுக்குருவி , கரிச்சான், மைனா, காகம், புறா, செம்புழை சின்னான், தேன் சிட்டு  ஆகியவை தினமும் பார்க்கும் பறவைகள்.

இந்த இடம் தரை வாழ் பறவைகளின் சிறந்த வாழிடமாக உள்ளது. மஞ்சள் மற்றும் சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், வரிமார்பு காடை (Barred buttonquail), கௌதாரி, ராபக்கி(Indian Nightjar) மற்றும் பெருங்கண்ணி (கண் கில்லாடி- Indian Thick Nee)), நெட்டைக்காலிகள் ஆகிய தரை வாழ் பறவைகளை சாதாரணமாய் பார்க்கும் இடமாக இந்த இடம் உள்ளது. (வரிமார்பு காடை மட்டும் காண்பது  சற்றே அரிது)

(இப்பகுதியில் வெகு சாதாரணமாக பார்க்கக் கூடிய தரைவாழ் பறவை மஞ்சள் மூக்கு ஆள்காட்டி)
 
அடுத்ததாக புதர்கள் சார்ந்து வாழும் பறவைகளான வெண்புருவச் சின்னான்
(White browed bulbul), blyth நாணல் குருவி, மூன்று வகையான கதிர் குருவிகளையும் (Plain Prinia, Jungle Prinia, Ashy Prinia) சாதாரணமாகப் பார்க்கலாம். பொதுவாக இந்த இடம் புதர் வாழ் மற்றும் தாரைவாழ் பறவைகளுக்கு சிறந்த ஒரு வாழிடமாக உள்ளது. (ஏற்கனவே கூறியது போல இது ஒரு பழைய ரியல் எஸ்டேட் மனைகள். சிலர் அவ்வப்போது புதிதாக நிலங்கள் வாங்குகையில், நிலத்தை சுத்தப்படுத்துவதாக சொல்லி இந்த புதர்களை அழிக்கும் போது இதன் வாழிடங்கள் பாதிக்கப்படுகின்றன )

மழைக்காலங்களில் அங்கங்கே தேங்கும் தண்ணீர் தேக்கங்களில் சில நீர்ப்பறவைகளையும் பார்க்க முடியும். நத்தை கொத்தி நாரைகள் (Asian Openbill) இங்கு அதிகம் தென்படக்கூடிய ஒரு நீர்ப் பறவை. சிறு மீன் கொத்தி (Common King fisher), நீல தாழைக்கோழி (Grey-headed Swamphen), சிறு கொக்கு ஆகிய பறவைகள் மழை காலங்களில் மட்டும் வருகை புரிய கூடியன.

பறவைகள் வலசைக்  குறிப்புகள் :

blyth நாணல் குருவி, சூரைக்குருவி (Rosy Starlings), நீல வால் பஞ்சுருட்டான் (Blue Tailed bee eater) , தகைவிலான் (Swallows), பழுப்பு கீச்சான்(Brown Shrike) ஆகியவை வெளிநாட்டு வலசைப் பறவைகள். Orange headed Trush, Bay back கீச்சான், Rufus tailed lark, வேதிவால் குருவி,  ஆகியவை உள்ளுர் வலசை பறவைகள் ஆகும். வலசை போகாத  சில பறவைகளும் ஒருவித pattern ஐ பிரதிபலிக்கின்றன. உதாரணம்,  மாங்குயில் Jan to March பதிவுகள் ஏதும் இல்லை. சாம்பல் தகைவிலான் (Ashy wood swallow) , கருப்பு-வெள்ளை சிட்டு (oriental magpie robin), சாம்பல் நாணல் குருவி (Ashy Prinia), தவிட்டுப் புறா (Laughing Dove) இப்பறவைகள் விட்டு விட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. உள்ளூர் இடப்பெயர்வு ஏதும் இருக்கலாம்.

சில முக்கிய குறிப்புகள் :

சீரான கீச்சான்களின் வருகை :  கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் (Bay backed Shrike) இப்பகுதிக்கு வலசை வரும் ஒரு பறவையாகும். வியக்கத்தக்க ஒரு செய்தி என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் அதன் முதல் வருகை மிகச் சரியாக ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில்  இருப்பதாகும்.




வருகை நிறுத்திய சீங்கார பூங்குயில் (Orange Headed Thrush) : நான் பறவைகள் பார்க்க துவங்கிய இரண்டு மூன்று மாதங்களிலேயே இந்த கண்ணைக் கவரும் பறவையை பார்க்க நேரிட்டது ஒரு சிறப்பான அனுபவம். இப்பகுதியில் புதர்கள் மிகுதியாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மரங்கள் நிறைந்து காணப்படும். அங்கு தான இப்பறவையை பார்த்தேன். அப்போது அது என்ன பறவை என்று தெரியாமல் அளவு மற்றும் வண்ணங்கள் கொண்டு புத்தகம் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பறவையின் பெயரை அறிந்து கொண்டது    எனது சிறப்பான நினைவுகள் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து குளிர்காலங்களில்  வலசையாக வரும் இப்பறவை இங்கிருந்த மரங்கள் நிறைந்த wood land வகை வாழிடத்திற்காக  வந்திருக்கும். அந்த சீசனில் 3 ~4  முறை பார்த்திருப்பேன். ஆனால் சில நாட்கள் பிறகு அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினார்கள். எத்தனை ஆண்டுகளாகவோ வந்துகொண்டிருத்த சீங்கார பூங்குயில் அப்பகுதிக்கு கொண்டிருந்த வருகையை நிறுத்தியது.

(புகைப்படம் - இணையம்)

பெருங்கண்ணி :  புதிரான இந்த பறவை இங்கு சாதாரணம். தினமும் காலை 5 மணிக்கு குரல் எழுப்ப துவங்கிவிடும். சில நாட்கள் இரவு நேரம்    முழுவதும் கூட குரல்  எழுப்பிக்கொண்டிருக்கும்.பல நாட்கள் இந்த குரலை அடையாளம் காண முடியாமல் இருந்தது. பிறகு நண்பர்கள் உதவியுடன் இவரின் பெயர் எனக்கு தெரிய  வந்தது. குரல்களை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த எனக்கு இவர்களை நேரில் கண்டு ரசிக்க பல நாட்கள் ஆகியது. இதன் ஓடி ஒளிந்துகொள்ளும் தன்மையும், உருமறைப்பு தன்மையும் எளிதாக காண முடியாததற்கு  காரணம்.

இதன் இன்னொரு சிறப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல் ebird பதிவு இங்குதான் என்பதாகும்.

 

மாங்குயில் : கோடை காலத்தில் அடிக்கடி பார்க்க முடிந்த இந்த பறவையை குளிர்காலங்களில் பார்க்க முடிவதில்லை. உள்ளூர் வலசைக்கு மற்றுமொரு உதாரணம்.

தேன் சிட்டின் அவலம்: கிழிந்த பலூனை பூ என்று எண்ணி அதில் தேன்  (Nectar) உறிஞ்ச முயலும் தேன்சிட்டு. மனிதர்களின் செயல்கள் இதர உயிரினங்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் குழப்பங்களுக்கு மற்றுமொரு உதாரணம்.


இப்படி ஒவ்வொரு பறவை இனத்திற்கும் ஒரு கதையும் உள்ளது. நான்  வேறு ஊருக்கு குடி பெயர்ந்துள்ளதால்  தற்போது இந்த இடத்திற்கு என்னால் போக முடியாது. அனாலும் பசுமையான பறவை நினைவுகளையும், தீவிரமடைந்து வரும் வாழிட ஆபத்துகளை பற்றிய கவலையும் அடிக்கடி மனதில் வந்து போகும்  ஒரு விஷயமாக உள்ளது.

நன்றி. 

செவ்வால் வாணம்பாடி - Rufous tailed Lark

வன்னி மரக்கிளையில் பனங்காடை


Thursday, December 19, 2024

கிடை (கி. ராஜநாராயணன்) - மேய்ச்சலின் கதை

 கிடை – கி. ராஜநாராயணன் 1960 களில் எழுதிய குறு நாவல். 

(கிடை போடுதல் என்பது விளைநிலங்களில் ஆநிரைகளை (கால் நடைகள்) இரவில் அடைத்து வைத்து அவற்றின் கழிவுப்பொருட்களான சாணம் மற்றும் சிறுநீரினை உரங்களாக மாற்றுவது ஆகும். பகலில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வார்கள்.  கீதாரி என்பவர் ஒரு கிடையின் தலைவர்.)

இந்த நாவல் அப்படிப்பட்ட கிடைகள் போட்டு ஆடுகள் வளர்க்கும் ஒரு ஊரில் நடக்கும் கதை. துவக்கத்தில் சில கதை மாந்தர்கள் மற்றும் கதை நடக்கும் களம் பற்றிய ஒரு அறிமுகம் தரும் ஆசிரியர் பிறகு சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலம்  பிறகு கிடை போடுவது பற்றியும் அதில் உள்ள நுணுக்கங்கள் பற்றிய நமக்கு தெரியப்படுத்துகிறார். 

கிடை பற்றிய கி.ரா வின் அறிமுகம்

கிடை மறித்தல்

கிடை மறித்தல் : கிடையின் ஆடுகள் எந்த விளைநிலத்திலாவது மேய்ந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டால் நிலத்துக்கு சொந்தக்காரர் கிடை மேய்ச்சலுக்கு போகையில் மறித்து விடுவர். பிறகு ஊர் கூடி பயிர் சேதத்திற்கு காரணமான கிடையின் சொந்தக்காரர் யார் என்பதையும் தீர்வு என்ன என்பதையும் சொன்ன பிறகு தான் கிடை மேய்ச்சலுக்கு போக முடியும். ஆநிரை சொந்தக்காரர்களுக்கும் உழவர்களுக்கு இப்படி ஒரு புரிதல். 

இப்படிப்பட்ட ஒரு கிடை மறித்தல் கதையில் வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பாக நம்மை இட்டு செல்கிறது. நம்மில் குறுநகை ஏற்படுத்தும் இடங்களும் பல உண்டு. 

இப்படி ஆர்வமாக கதை சென்று கொண்டிருக்கும் போது சட்டென ஒரு அதிர்ச்சியுடன் கதையை முடிக்கிறார். அந்த முடிவு இதுவரை சொல்லப்பட்ட கதையின் வேறு ஒரு பரிணாமத்தை நமக்கு உணர்த்துகிறது. கதையின் கடைசி கட்டமே இக்கதையின் அடிநாதமாக உள்ளது. 

 - இது எனக்கு கிடைத்த வாசிப்பு அனுபவம். உங்களுக்கு சற்றே வேறு அனுபவம் கூட கிடைக்கலாம். 

1960 களில் எழுத்தப்பட்ட இந்த கதை, மற்றும் சமூக பார்வை  இன்றைய கலகட்டத்திற்கும் பொருத்தமாகவே உள்ளது. படிக்கவும்  சுவாரிஸ்யமாகவே உள்ளது. கண்டிப்பாக அனைவரும் படிக்கலாம். இந்த பதிப்பில் உள்ள ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. (ஓவியர் - எம். கணேசன்)

நம்மை கதையுடன் ஒன்ற வைக்கும் ஓவியங்கள்

இக்கதையில் கி. ரா அவர்கள் அந்தக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பொருள்கள் மற்றும் தாவரங்களின் பெயர்கள் பலவற்றை கூறுகிறார். அந்த பொருள்களின் பெயர்கள் நமக்கு புதிதாக இருந்தாலும் சற்றே யோசித்தால் அவற்றின் பயன் மற்றும் உருவகம் நமக்கு புரிந்து விடுகிறது. இதில் சொல்லபட்ட தாவரங்கள் மற்றும் பொருள்கள் பற்றி ஒரு தனி பதிவு எழுதும் அளவிற்கு செய்திகள் உள்ளன. 

Friday, December 15, 2023

திருப்பெரும்புதூர் பறவைகள் (Birds of Sriperumputhur)

பறவைகள் பார்த்தல் : 

சில காலங்கள் வரை அரிதாக ஒரு சிலரின் பொழுதுபோக்காக அறியப்பட்ட பறவை நோக்கல் இன்று அனைத்து தரப்பு மக்களும் பங்குகொள்ளும் ஒரு நிகழ்வாகவும் சூழியல் ஆர்வலர்கள் நாட்டம் கொள்ளும் ஒரு நிகழ்வாகும் மாறி உள்ளது. நம்மை சுற்றி உள்ள இயற்கையின் அங்கங்களை புரிந்து கொள்ள பறவை நோக்கல் ஒரு சிறந்த வழியாக உள்ளது. 

திருப்பெரும்புதூரும் பறவைகளும் :

புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்ககள் எதுவும் திருப்பெரும்புதூர்  சுற்றி இல்லை. ஆனாலும் பல உள்ளூர் நீர்நிலைகள் மற்றும் இங்குள்ள நிலப்பரப்பு  பறவைகளின் புகலிடமாக திகழ்கின்றன. திருப்பெரும்புதூர் அருகில் உள்ள நீர்நிலைகளும் அவற்றில்  பதிவான பறவை வகைகளின் எண்ணிக்கையும் கீழே.(தகவல் மூலம் - மக்கள் அறிவியல் தளமான ebird.org

செம்பரம்பாக்கம் ஏரி - 184

தென்னேரி - 172

நயப்பாக்கம் (வளர்புரம்) - 190

நாவலூர் - 134

திருப்பெரும்புதூர் ஏரி - 87

இந்த எண்ணிக்கை  ஒரு உத்தேசமாக ஒன்றாகும். முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டால் இன்னும் துல்லியமான எண்ணிக்கையை அறியலாம். 

பறவை பார்தலில் ஒவ்வொரு ஊருக்கு என்று சில சிறப்பு பறவைகள் இருக்கும். அவை மற்ற பகுதிகளில் காணப்பட்டாலும் அந்த பகுதியில் அதிகம் / எளிதாக பார்க்கக்கூடியதாகவோ, அல்லது எனக்கு குறிப்பிட்ட  நினைவுகளுடன் தொடர்புடையதாகவோ இருக்கும்  பறவைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

மூவண்ண சில்லைகள் (Try colored Munia) :

திருப்பெரும்புதூர் பகுதியில் பல இடங்களில் பரந்த இடுப்பளவு வளரும்  புல்வெளிகளை பார்க்கலாம் (பெரும்பாலும் நீர் நிலைகள் அருகில்). மரங்களும் இதர செடிகளும் குறைவாக இருக்கும் இப்பகுதிகளில் இந்த அழகான சில்லைகளை பார்க்கலாம். திருப்பெரும்புதூர் ஏரி புறம்போக்கு பகுதிகளில் அரண் நண்பர்கள் கணக்கெடுக்கும் போது  நூற்றுக்கணக்கான  மூவண்ண சில்லை பறவைகளை ஒன்றாக பார்த்தது ஒரு சிறப்பான அனுபவம். இவை இடுப்பு உயர புற்கள் மற்றும் புதர்களில் கூடு கட்டி வாழும்.

இதே குடும்பத்தை சேர்ந்த புள்ளி சில்லைகளை(Scaly Breasted Munia) நம் வீடு அருகில் கூட பார்க்கலாம். இடுப்பு உயர புற்  பரப்புகளில் அரிதாக சிவப்புச்சில்லையும் (வலசை வரும் பறவை) பார்க்கலாம். தண்டலம் ஏரியின் அருகில் இந்த அழகான - துடிப்பான சிவப்பு சில்லைகளை(Red avadavat) வெகு அருகில் பார்தது பசுமையாக நினைவில் உள்ளது. 



 கருப்பு வெள்ளை மைனா (Pied Starling) :

வட மாநிலங்களில் பார்க்கக்கூடிய இந்த மைனா வகை பறவையை தமிழ்நாட்டில் அரிதாக  ஒரு சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும். அந்த ஒரு சில இடங்களில் ஒன்றாக திருப்பெரும்புதூர் உள்ளது. திருப்பெரும்புதூர் ஏரிவளர்புரம் பகுதிகளில் பார்க்கலாம். பெரும் எண்ணிக்கையில் வலசை வரும் சூரைக்குருவிகளுடன்(Rosy Starling) சேர்ந்து சில சமயம் உலா வரும்.


Pic - eBird

இலை கோழிகள் (Jacanas) :

 தாமரை இலை கோழிகளில் இரண்டு வகைகள் நம் பகுதியில் உள்ளன. நீள வால் இலை கோழி(Pheasant Tailed Jacana)கரும் பச்சை இலை கோழிகள்(Bornz winged Jacana). இவை நம் பகுதியின் அனைத்து நீர் நிலைகளும் ஓரளவு  சாதாரணமாக பார்க்கலாம். நம் பகுதியில் சிறிய குளங்களிலும் கூட பார்க்க முடியும்.இப்பறவைகள் கால்கள்  இலைகளின் மேல் நடக்கும் வண்ணம் இருப்பது சிறப்பு. இப்பறவைகளுடன் தாழைக்கோழிகளையும் (Grey headed Swamphen)நாமக்கோழிகளையும்-Common coot (சற்று பெரிய நீர் நிலையாக இருக்கும் பட்சத்தில்) பார்க்கலாம்.  அழகான இப்பறவைகள் எளிதில் காணக்கூடியதாகவும் இருப்பதால் புதிதாக பறவை நோக்கலுள்க்கு வருபவர்கள்சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்த பொருத்தமான பறவைகள் இவை.




சீழ்க்கைச் சிறகிகள் (Whistling  Ducks) : 

வாத்துகளின் இருப்பும் வரவும் ஒரு நீர்நிலை சிறந்த உயிர் சூழலுடன் இருக்கிறது என்று பொருள். (வளர்ப்பு வாத்துகள் அல்ல. காட்டு வாத்துகள்) நம் பகுதிகளில் 8 10 வகையான வாத்துகளை பார்க்கலாம். அதில் மிக அதிக அளவில் காணக்கூடிய வாத்தினமாக இந்த சீழ்க்கைச் சிறகிகள் உள்ளன. இவை கத்தும் பொது விசில் அடிப்பது போல்  இருப்பதால் இந்த பெயர். ஒரே சமயத்தில் 100 க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பார்க்கலாம். கூட்டமாக நீரில் இருந்து எழுவதும்பறப்பதும் மீண்டும் நீரில் அமர்வதும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சிகள். இந்த காட்சிகளை பார்க்க எங்கெங்கோ செல்ல தேவையில்லை.  நாம் நம் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்றால் போதும் என்பது கூடுதல் சிறப்பு. உள்ளூர் பறவைகளான இவற்றுடன்இதே போல தெரியும் பெரிய சீழ்க்கைச் சிறகிகள் கலந்து இருக்கும். பெரிய சீழ்க்கைச் சிறகிகள் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் இனமாகும். ஒரே சமயத்தில் 300 க்கு மேற்பட்ட பறவைகளை இருங்காட்டுகோட்டையில் ஏரியில் பார்ததுள்ளேன். 



இரைக்கொல்லி பறவைகள்:

ஒரு காட்டின் உயிர் பன்மை வளம் (Bio-diversity) அந்த காட்டின் உயிர் கொல்லி விலங்குகளான புலிகள், சிறுத்தைகளின் எண்ணிக்கை கொண்டு அளவிடுவது வழக்கம். அதேபோல ஒரு பகுதியின் உயிர் பன்மை வளம் அப்பகுதியின் இரைக்கொல்லி பறவைகளின் எண்ணிக்கை கொண்டு அளவிடலாம்.   திருப்பெரும்புதூர் பகுதியில் சாதாரணமாக பார்க்கக்கூடிய இறை கொல்லி பறவைகளாக வல்லூறு, கருந்தோள் பருந்து உள்ளன. அதே சமயம்,  திருப்பெரும்புதூர் அருகில் உள்ள தென்னேரியும், நயப்பாக்கம் ஏரியும் பல்வேறு வகையான இரைகொல்லி பறவைகள் பார்க்கும் இடங்களாக உள்ளன. பாம்புண்ணி கழுகுகள், விராலடிப்பான், தேன் பருந்து ஆகியவை அவற்றில் சில. இவ்விடங்கள் பறவைகள் ஆர்வலர்களின் மத்தியில் பிரபலமான இடங்களாகும்.




பொதுவாக...

திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள அனைத்து பறவைகளையும் இக்கட்டுரையில் அடக்கிட முடியாது. நம் பகுதியின் சிறப்பு பறவைகள் என கருதக்கூடிய பறவைகளை மட்டும் இங்கு பார்த்துளோம்.

பொதுவாகவே பறவைகள் பார்ப்பதில் பொறுமை மிக அவசியம். அதிக அளவில் உள்ள பறவைகளை கூட சில முறை நம்மால் பார்க்க முடியாமல் போகலாம். (இதுவே பறவைகள் பார்த்ததில் உள்ள சுவாரிஸ்யமும் ஆகும்). அதிலும் இரைக்கொல்லி பறவைகளை பார்க்க கூடுதல் பொறுமையும், அதிஷ்டமும் வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருக்கும் பறவைகளை பார்த்தல் தான் பறவைகள் பார்த்தல் என்று கொள்ள தேவையில்லை. நம் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அருகிலும் பல்வேறு வகையான பறவைகளை பார்க்கலாம். நம் வீடுகளுக்கு அருகில் தென்படும் பறவைகளை நோக்கும் போது நம் அருகில் இவ்வளவு பறவைகள் உள்ளனவா என்று பலரும் ஆசிரியப்படுவர்.

மேலும் அவற்றின் நடத்தைகளை காண்பதும் ஒரு சுவாரிஸ்யமான விஷயமாக இருக்கும். பெயர் தெரியாத பறவைகளின் அடையாளங்களை குறிப்பெடுத்து இணையம் மற்றும் பறவை கையேடுகளில் தேடி அவற்றின் பெயர்களை அறியலாம். மேலும்  இவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது மிக அவசியம் ஆகும். நம் நாட்டிலேயே இல்லாத Toucan, Hummingbird போன்ற பறவைகளின் பெயரை ஆங்கில பாட நூல் மூலமாக அறிந்திருக்கும் நம் குழந்தைகள் நம் வீட்டிற்க்கு வரும் காக்கை, புறா, கிளிகள் தவிர இதர பறவைகளின் பெயரை அறியாமல் இருப்பது வருத்தமே.

 திருப்பெரும்புதூர் பறவைகளுக்கான சவால்கள் :

எல்லா இடங்கள் போலவே நம் பகுதிகளும் பறவைகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. அதற்கு காரணம் சினிமாக்களில் காட்டுவது போல செல்போன் டவர்கள் அல்ல. வாழிடங்கள் அழிப்பே முதன்மை காரணம் ஆகும். பறவைகள் கூடு கட்டி உணவு தேடி வாழும் இடங்களை அவற்றின் வாழிடங்கள் என்கிறோம். ஒவ்வொரு பறவையும் அதற்கான வாழிடங்களில்  மட்டுமே வாழக்கூடியவை ஆகும்.  மரங்கள் வெட்டுகையில் மரங்கள் சார்ந்த பறவைகளும், நீர்  நிலைகள் சிதைக்கையில் நீர்வாழ் பறவைகளும் பெருமளவில் அழிகின்றன. புற்கள் மற்றும் புத்தர் செடிகள் பட்டுமே இருக்கும் நாம் எதற்கும் உதவாத புறம்போக்கு நிலங்கள் என்று வரையறுக்கும்  நிலப்பகுதிகள் தான் பல்வேறு தரை வாழ், புதர் வாழ் பறவைகளுக்கு வாழிடங்களாக உள்ளன. (ஆள் காட்டி, கெளதாரி,காடைகள், ராபக்கிகள் etc)

கட்டுமானங்கள் பெருகுவதால் இத்தகைய வாழிடங்கள் பெருமளவு சுருங்கி வருகின்றன. இது பறவைகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயிர் சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நீர் நிலைகளை பொறுத்த வரை அசுத்த நீர் கலப்பதும், குப்பைகள் கொட்டுவதும் அங்கு உயிர் சூழல் கெட போதுமானதாக உள்ளது.

இன்றைய பறவைகள் வாழிடம். நாளைய குடியிருப்புகள்

அரண் மற்றும் பறவைகள் :

அரண் அமைப்பு பறவைகள் தொடர்பான பல ஆக்கபூர்வமான செயல்களை செய்து வருகிறது. திருப்பெரும்புதூர் அருகில் உள்ள நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு, பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பறவைகள் பற்றி அறிந்து கொள்ளும் வண்ணம் பறவை நடை நிகழ்வுகள், பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற செயல்கள் செய்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் அரண் வளர்த்து வரும் எழில்வனம், சுந்திரவனம் குறுங்காடுகள் பறவைகள் எந்த தொல்லையும் இல்லாமல் வாழக்கூடிய வாழிடங்களாக விளங்கி வருகின்றன. அங்கிருக்கும் மரங்கள் பெரிதான பின் மரங்களை திருப்பெரும்புதூர்  பகுதிகளில் பரப்பும் பணியை அவை எடுத்துக்கொள்ளும். பறவைகள் உலகு எனும் அற்புத உலகை அறிந்துகொள்ள அரண் அமைப்புடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

(அரண் 2ஆம் ஆண்டு மலரில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்)

Saturday, June 10, 2023

வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail)

பறவைகளை கவனிக்க துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் காடை வகையில் எந்த பறவையையும் பார்க்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வீட்டின் அருகேலேயே புற்கள் மற்றும் புதர்கள் உள்ள ஒரு இடத்தில் காடைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால் அடையாளங்களை கவனிக்கும் வகையில் பார்க்க முடியவில்லை. குறிப்பிட்ட நேரம், இடம் சென்றால் பெரும்பாலும் பார்த்துவிடலாம். ஆனால் அடையாளங்களை உள்வாங்கவோ, புகைப்படம் எடுக்கவோ நேரம் கொடுக்காமல் மறைந்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இவர்கள். கால்களுக்கு மிக அருகில் இருந்து திடீர் என்று பறந்து அதிர்ச்சி தருதல், நம்மை பார்த்த உடன் விறு விறு என அருகில் இருக்கும் புதர்களுக்குள் அடைக்கலம் ஆகுதல் என பல நாட்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. 

ஒருவழியாக சில நாட்கள் முன் அடையாளங்காணும் வகையில் ஒரு புகைப்படம் எடுக்க முடிந்தது. அதைக்கொண்டு என்ன இனம் என்றும் கண்டுபிடித்தாகிவிட்டது. 

 வரிமார்பு கருங்காடை (Barred Buttonquail) தான் அது. 

 Buttonquail இனப்பறவைகள் காடைகள் போலவே தோற்றத்தில் இருந்தாலும், பெயரில் காடை என இருந்தாலும் இன வகைபாட்டில் இவை காடையினத்தில் சேர்க்கப்படுவதில்லை. IUCN தகவல்படி உலகளவில் இப்பறவைகளின் எண்ணிக்கை ஒரளவு உயர்ந்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் எணணிக்கை உயர்கிறதா என்பது தெளிவில்லை. 

 புற்கள் மற்றும் புதர்களை வாழிடங்களாக கொண்டிருக்கும் இப்பறவைகள் காக்கப்பட இதன் வாழிடங்கள் காக்கப்பட வேண்டும். 

 (இந்த பறவைகள் பார்த்த இடம் திருப்பெரும்புதூர் அருகில் பல வருடங்கள் முன் வீட்டு மனைகளாக பிளாட்கள் போடபட்டு அந்தளவு கட்டுமானங்கள் இல்லாத இடம். புற்களும் முட்செடிகளும் அதிகளவில் உள்ளன. ஆனால் தற்போது விருவிருப்பாக கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த இடம் இபபறவைகளின் வாழிடமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும் என்பது கேள்வி)

Wednesday, February 22, 2023

உங்கள் ஊரின் ஈர நிலங்கள்

ஈர நிலம் என்றால் என்ன? 

நீரும் நிலமும் சந்திக்கும் இடமே ஈர நிலமாகும். கடற்கரைகள், ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக்காடுகள் போன்றவை ஈர நிலங்கள் ஆகும். விதைப்புக்கு முந்தைய நெல் வயல், மழை  நீர் தேங்கிய நிலங்கள் ஆகியவையும் குறுகியகால ஈர நிலங்கள் என்று கூறலாம். 

சிவகங்கை அருகில் உள்ள ஒரு நீர்நிலை. கிட்டதட்ட 10 வகை பறவைகள்  இப்புகைப்படத்தில் உள்ளன. 


ஈர நிலங்கள் ஏன் முக்கியமானவை. அவற்றின் பயன்கள் என்ன? 

வளமான நீர் வளத்திற்கு ஈர நிலங்கள் முறையாக இருக்க வேண்டும். சில பத்து ஆண்டுகள் முன் வரை குடிநீராகப் பயன்பட்டு வந்த பல நீர் நிலைகள் பல இன்று கால் வைக்கக் கூட தகுதியற்றதாக உள்ளதைப் பார்க்கிறோம். இது நாம் ஈர நிலங்களை முறையாக பராமரிக்காததால் வந்த விளைவு. நீர் வளம் தவிர மீன் வளம், விவசாய வளம் போன்ற அனைத்திற்கும் ஈர நிலங்கள் பங்களிக்கிறது. இது அல்லாமல் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு பறவைகள், மற்றும் உயிரினங்களின் தாய்வீடாக ஈர நிலங்கள் உள்ளன. ஈர நிலங்கள் போன்ற இயற்கை பில்டர்கள் (filters -  சுத்தகரிப்பன்கள்) ஏதும் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இயற்கையான வகையில் கிடைத்து வந்த குடிநீரைக் காசு போட்டு கேன்களில் மட்டுமே வாங்கும் நிலை வருவதற்கு ஈர நிலங்கள் சரியாக பராமரிக்கப்படாதது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

வளர்புரம் ஏரிக்கரை. இந்த ஏரியில் இதுவரை 116 வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


தமிழர்களும் ஈர நிலங்களும்: 

தமிழர்கள் சங்கிலித்தொடர் ஏரிகளை உருவாக்கி மிகச்சிறப்பாக நீரை மேலாண்மை செய்துள்ளனர் என்பது வரலாறு. ஆற்று நீரை வரிசையாக ஆறு --> ஏரி --> கண்மாய் --> கரனை--> தாங்கல் -->  ஊரணி --> குளம் -->குட்டை வரை செலுத்தி நிலத்தை வளப்படுத்தி உள்ளனர். இதில் பல அமைப்புகள்  இன்றும் பல ஊர்களில் பயன்பாட்டில் உள்ளன. பராமரிப்பு பணிகளையும் முறை வைத்து ஊர்மக்களே சிறப்பாகக் கவனித்து வந்துள்ளனர்.    (தமிழர்களின் நீர் மேலாண்மையின் சிறப்புகளை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள நக்கீரன் அவர்களின் "நீர் எழுத்து " என்று நூலை ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கலாம். ஆனால் இன்று நம் ஈர நிலங்கள் பலவும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளன . இதற்குச் சூழல் மீது அக்கறையின்மை, விவசாயம் குறைந்தது, மக்களிடம் ஒற்றுமையின்மை, நம் நீர் உரிமைகள் மீதான அறியாமை ஆகியவை காரணமாகச் சொல்லலாம்.


ஏரி பொறம்போக்கு:

பல ஏரிகள் ஏரி பொறம்போக்கு என்ற நிலப்பரப்பை கொண்டிருக்கின்றன. இந்த நிலப்பரப்பு மழை காலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலமாகவும் கோடை காலங்களில் வறண்டு புல் மற்றும் சில தாவரங்கள் வளர்ந்த நிலையிலும் இருக்கும். இந்நிலங்கள் மழை காலங்களில் ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுப்பதற்கும் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கவும் பயன்படுகிறது. மேலும் ஏரியை சார்ந்து இருக்கும் பல்வேறு பறவைகள் கூடு கட்டவும் இவ்விடம் பயன்படுகிறது. முயல், கீரி, உடும்பு போன்ற உயிரினங்களும் இந்நிலப்பரப்பில் வசிக்கின்றன.

ஆனால் இந்த நிலப்பகுதியே பல்வேறு ஆக்கரமிப்பிற்கு உள்ளாகிறது. (அரசு அமைப்புகள் உட்பட) ஏரிகள் பாதுகாப்பின் மீது இருக்கும் ஓரளவு விழிப்புணர்வு கூட இந்த ஏரி பொறம்போக்கு நிலங்கள் மேல் இல்லாதது வருத்தமே.

ஏரிப்புறம்போக்கு பகுதியில் மூவண்ண சில்லைகள்

ஏரிப்புறம்போக்கில் மஞ்சள் மூக்கு ஆள்காட்டிகள் (தரையில் முட்டையிடும் பறவை)


உங்கள் ஊரின் ஈர நிலங்கள்: 

நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள ஈரநிலங்களை அறிந்துகொள்வது மிக அவசியம். அங்கு இயற்கையை அவதானிக்கும் செயல்களை செய்யலாம். நான் வசிக்கும் திருப்பெரும்புதூர் பகுதியின் ஈர நிலங்கள் பற்றிய என் புரிதல் கீழே..

திருப்பெரும்புதூர் ஊரானது ஏரிகள் சூழ உள்ள ஒரு ஊராகும். திருப்பெரும்புதூர் ஏரி ஊரின் முக்கிய ஏரியாகும். மேலும்   திருப்பெரும்புதூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பல ஏரிகள் உள்ளன. பென்னலூர் இரண்டு ஏரிகள், பிள்ளைப்பாக்கம் ஏரி, நெமிலி மூன்று ஏரிகள், இருங்காட்டுக்கோட்டை ஏரி, காட்ராம்பாக்கம் ஏரி, நாவலூர் ஏரி, தண்டலம் ஏரி, வளர்புரம் ஏரி ஆகியவை திருப்பெரும்புதூர் சுற்றி உள்ள முக்கிய ஏரிகளில் சில ஆகும். இந்த சங்கிலித்தொடர் ஏரிகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாகவும் இருந்துவந்துள்ளன. இன்றும் இந்த ஏரிகளில் வெளிநாடுகளிலிருந்து வலசை வரும் வகையான உட்பட பல்வேறு வகையான பறவைகளைப் பார்க்கலாம். பல்வேறு ஊர்களிலிருந்து பறவை ஆர்வலர்கள் இப்பகுதிக்குப் பறவைகள் நோக்க வருவது வழக்கம். இத்தகைய சிறப்புகள் உள்ள நம் ஈர நிலங்கள் இன்று மனிதர்களின் செயல்களால் பல்வேறு வகையான சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. அவற்றில் சில....

1. குப்பைகள் கொட்டுதல்

2. கழிவு நீர் கலத்தல்

3. சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை  போன்ற ஆக்கிரமிப்பு தாவரங்கள் மிகுதியாக வளர்தல்

4. ஆக்கிரமிப்பு கட்டடங்கள்

5. நீர் வழிகள் அடைப்பு / ஆக்கிரமிப்பு

6. அளவுக்கு அதிகமான மீன் பிடிப்பு

7. மண் எடுத்தல்

ஏரிக்கரை அருகில் கட்டுமான வேலைகள்


நாம் என்ன செய்ய வேண்டும்? 

நம் நீர் நிலைகள் மற்றும் ஈர நிலங்கள் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகையில் நாம் என்ன செய்யலாம்:

1. குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டக் கூடாது.

2.  கழிவு நீர் கலத்தல், ஆக்கிரமிப்புகள், மண் எடுத்தல் போன்ற செயல்களைத் தனி ஒருவராகத் தடுப்பது கடினம். ஆகையால் குழுவாக உரிய அதிகாரிகளுக்குத் தெரிவித்தல், கிராம சபைக் கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம். 

3. பனை, நீர்மருது போன்ற மரங்களைக் கரை ஓரங்களில் வளர்க்கலாம்.


ராம்சர் சாசனமும் ஈரநிலமும்

ராம்சர் சாசனம் (Ramsar Convention) என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். 1971ல் இவ்வொப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது. இந்த நகரின் பெயரைத் தழுவியே ராம்சர் சாசனம் என்னும் பெயர் ஏற்பட்டது.

ஈரநிலப் பாதுகாப்புக்காக பன்னாட்டுத் தரம் ஒன்றை உருவாக்குவதன் மூலமும், உலகளாவிய ஈரநிலம் தொடர்பான பிரச்சினைகளை அலசுவதற்கு ஒரு களத்தை வழங்கியதன் மூலமும், ஈரநிலங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான வசதியை இச்சாசனம் ஒப்பந்தத் தரப்பினருக்கு வழங்குகிறது. 

(புரிதலுக்காக - மிக முக்கியமான ஈரநிலங்களுக்கு மட்டுமே ராம்சார் அந்தஸ்து வழங்கப்படும். இவை மட்டுமே ஈரநிலங்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது)

தமிழ் நாட்டில் ராமசார் ஈரநிலங்கள்
(Photo Source - www.tnswa.org)


உலக ஈர நில(Wetland) நாள் – பிப்ரவரி 02 

ஈரநிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுப்பு நிலத்தின் முக்கியத்தும் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் ஆண்டு தோறும் பிப்ரவரி 02 தேதி அன்று உலகம் முழுவதும் ஈர நாள் கொண்டாடப்படுகிறது.


இக்கட்டுரை பற்றி..

திருப்பெரும்பூதூரின் சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் வகையில் அரண் அமைப்பானது பல தன்னார்வலர்களை இணைந்து பல்வேறு சூழல் செயல்பாடுகளை செய்து வருகிறது. அரண் அமைப்பிற்காக கடந்த பிப்-2 World's wetland day க்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை சில மாற்றங்களுடன் இங்கு பதிவிடப்படுகிறது..

ஈர நிலங்களை பாதுகாப்போம்! இயற்கையைப் போற்றுவோம்!

-