Sunday, January 22, 2023

எழில்வனம் பறவைகள் கணக்கெடுப்பு

அனைவருக்கும் வணக்கம். "

"திருப்பெரும்புதூர் அருகில் அரண் தன்னார்வலர்கள் அமைப்பு 'எழில்வனம்' என்கிற குறுங்காடு ஒன்றை வளர்த்து வருகிறது. இதில் பல்வேறு வகையான மரங்ககளை வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருக்கும் உயிர்ச் சூழலை தொடர்ந்து கண்காணித்தும் அவனப்படுத்தியும் வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பறவைகள் கணக்கெடுப்பு 8.01.2023 அன்று நடத்தப்பட்டது. அதன் பொருட்டு எழுதப்பட்ட கட்டுரை.

எழில்வனத்தில் பறவை பார்த்தல் அனுபவம்

வணக்கம். நம் எழில்வனத்தின் உயிர் சூழலை தொடர்ந்து நாம் அவதானித்தும் பதிவும் செய்து வருகிறோம். மரங்கள், ஊர்வனங்கள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள் என அனைத்தும் நம்மால் பதிவுசெய்ய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 08.01.2023 அன்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

நிகழ்வில் பறவைகளின் பங்கு, எழில்வனத்தின் பறவைகள், தன்னார்வல பணிகள் எப்படி உயிர் சூழலை மேம்படுத்துகிறது என்பவை பற்றிய சிறு உரையாடல் நடந்தது.

பிறகு பறவைகள் கணக்கெடுக்கும் நடை சுமார் 7.15 மணியளவில் துவங்கியது. பொதுவான பறவைகளான தவிட்டுக் குருவி (Yellow Billed Barbbler), செம்புழை சின்னான்(Red Vented Bulbul), கரிச்சான் (Black Drango) ஆகியவை உடனடியாக கண்களில் தென்பட்டு கணக்கில் ஏறின. தவிட்டு குருவியை பலமுறை பார்த்திருந்தாலும் அதன் பெயரை இன்று சிலர் அறிந்துகொண்டனர். கண்ணில் பார்க்க முடியவில்லை என்றாலும் பறவைகளின் ஒளி கொண்டு கணக்கில் கொள்வது வழக்கம். அதன்படி நடை ஆரம்பிக்கையிலேயே அக்கா குயில்(Large Hawk Cuckoo), வெண்புருவ சின்னான்(White Browed Bulbul), கதிர் குருவி (Prinia) ஆகியவையின் ஓசைகள் கேட்டன. அவையும் கணக்கில் ஏற்றபப்ட்டது. (இம்மூன்று பறவைகளையும் நிகழ்வு முடியும் முன் பார்த்துவிட்டோம்)

வழக்கமாக மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கையில் பறவைகள் சற்று ஒதுங்கியே இருக்கும். அதானால் சற்றே அறிய வகை பறவைகளை பார்ப்பதற்கான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டே வந்திருந்தோம்.

ஆனால் அதற்கு மாறாக நடை ஆரம்பித்த 5~10 நிமிடங்களிலேயே ஒரு (சற்றே) அறிய வகை பறவையை பார்க்க முடிந்தது. எழில்வனத்தின் பெரிய ஆலமரத்தில் எங்களை பார்த்து உள்ளே ஒதுங்கிய பறவையை குயிலா என்ற சந்தேகத்துடன் அனுகையில் அது நீலமுக பூங்குயில் (Blue Faced Malkoha)என்பது உறுதியாயிற்று. ஏற்கனவே எழில்வனத்தில் பதிவுசெய்யப்பட்டு இருந்தாலும் அடிக்கடி பார்க்க முடியாத அழகான பறவை. எழில்வனத்தில் கூடு கட்டி வாழும் பறவை..

(நீலமுக பூங்குயில் - வேறு இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

பிறகு அடுத்தடுத்தது சிகப்பு மூக்கு ஆள்காட்டி(Red wattled lapwing), கதிர் குருவி, இந்தியாவின் மிகச்சிறிய பறவையான பூங்கொத்தி (Pale Billed Folwerpecker) , புதர் வானம்பாடி (Jerdon Bush lark), பஞ்சுருட்டான்கள் (Green Bee eaters) என பல பறவைகளை பார்க்க முடிந்தது. மடையான்கள்(India Pond Heron), தவிட்டு குருவி, தேன்சிட்டுகள் (Sunbird) போன்ற பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. கண்டங்கள் தாண்டி வந்து நம் புதர்களில் மறைந்திருக்கும் நாணல் கதிர் குருவி(Blyth reed warbler), நீல வால் பஞ்சுருட்டான் (Blue tailed Bee eater) ஆகியவை இன்று நாம் பார்த்த வலசை பறவைகளாகும். (இவை தொலைதூர குளிர் பிரதேசங்களில் இருந்து நம் நிலத்தின் இதமான வெப்பநிலைக்காக வருபவை). இவையெல்லாம் பார்த்தவாறு கிட்ட தட்ட நடையின் இறுதிக்கு வந்திருந்தோம்..

புதிய பறவை ஒன்றையாவது இன்று பதிவு செய்வோம் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்த நடையில் இதுவரை புது பறவைகள் ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. (கடந்த வருடம் இதே நிகழ்வில் large cuckooshrike என்ற அறிய பறவை பதிவு செய்யப்பட்டு இருந்தது) நடையின் இறுதி பகுதியில் இரு ஜோடி தேன்சிட்டுகள் மரம் ஒன்றில் வந்து அமர்ந்தன. வழக்கமான ஊதாதேன்சிட்டாக இருக்கும் எண்ணுகையில் அதன் ஓசைகள் சற்றே வேறுபட, தொலைநோக்கி கொண்டு பார்த்தோம். அது நீளமான அலகு கொண்ட Loten's தேன்சிட்டாக இருக்குமோ சந்தேகம் வர தேவையான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். பிறகு அது Loten's தேன்சிட்டு தான் என உறுதிப்படுத்தப்பட்டது. இவாறாக எழில்வனத்தின் 57 வது பறவை பதிவு செய்யப்பட்டது. புதிய பறவை ஒன்றையாவது இன்று பதிவு செய்வோம் என்ற நம்பிக்கையும் உண்மையானது. பிறகு அனைவரும் ரசிக்கும் வண்ணம் அழகான மாங்குயில் (Indian Golden Oriole) ஒன்று தரிசனம் தந்தது. எழில்வனத்தில் வழக்கமாக பார்க்கக்கூடிய கெளவுதாரிகளை ஏன் இன்று பார்க்க முடியவில்லை என்ற சிந்தனையுடன் நிகழ்வை முடிக்கும் தருவாயில் "நான் இங்கு தான் இருக்கிறேன்" என்று ஓசை எழுப்பி நிகழ்வின் கடைசி பறவையாக தன்னை இணைத்துக்கொண்டது. மொத்தமாக 32 வகை பறவைகளையும் மொத்த எண்ணிக்கையில் 129 பறவைகளையும் பதிவு செய்திருந்தோம்.

எழில்வனத்தில் Loten's தேன்சிட்டுகள்

நிகழ்வின் சில துளிகள்:

1. மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். பலருக்கும் பறவைகள் பற்றிய ஒரு அடிப்படை விழிப்புணர்வை இந்நிகழ்வு தந்திருக்கும் என்று நம்புவோம்.

2. தமிழ் நாட்டின் சமவெளியில் மூன்று வகையான தேன்சிட்டுகள் உள்ளன. அவை மூன்றையும் இன்று பதிவு செய்ய முடிந்தது.

3. எழில்வனத்தின் முக்கிய பறவையான ரப்பாக்கியை (Indian Nightjar) இன்று பதிவு செய்ய முடியவில்லை.

4. ஒப்பீட்டளவில் Urban Birds என்றழைக்கப்படும் புறா, காகம் போன்ற பறவைகள் குறைவாகவே பதிவுசெய்யப்பட்டன. இது எழில்வனம் இன்னும் இயற்கை சூழல் மாறாமல் இருப்பதற்கு ஒரு சான்று.

5. நிகழ்வில் பறவைகளின் தமிழ் பெயர்களே பயன்படுத்தப்பட்டது. இது மாணவர்கள் மனதில் எளிதில் பதிய ஏதுவாக இருக்கும். (தமிழ் தெரியாத ஒரு தன்னார்வலருக்கு மட்டும் விஜய் மொழிபெயர்த்து கூறினார்)

(அரண் அமைப்பானது சூழல் முன்னெடுப்புகள், பழங்குடிகள் கல்வி மற்றும் இதர நலன்கள், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் திருப்பெரும்பதூர் பகுதியில் இயங்கி வருகிறது. ஆர்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம்)

1 comment:

Anonymous said...

Very nice