Sunday, May 2, 2010

சமூக விழிப்புணர்ச்சியில் சித்திரக்கதைகள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். ( குறள் எண் : 435 )
(குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்)

ஏமாறுகிறவன் இருக்கிறவரை ஏமாற்றுபவன் இருப்பான் என்பது பொதுமொழி. ஏமாறாமல் இருக்க எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நாம் ஏமாற்று பேர்வளிகளுடன் கூட்டு வைத்துகொள்ள தேவையில்லை. காமிக்ஸ் படித்தாலே போதும். ஆம் மோசடி மன்னர்கள் வாழும் இந்த சமுதாயத்தில் மோசடிகள் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வது விழிப்புணர்ச்சி ஆகும். இந்த விழிப்புண்ர்ச்சியை நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் படித்த காமிக்ஸ்கள் சிறப்பாக செய்திருக்கின்றன என்பது என் கருத்து. எண்ணிலடங்கா காமிக்ஸ்கள் இந்த பணியை செய்திருந்தாலும் ஒரு சில காமிக்ஸ்கள் மனதில் பளிச்சென்று வருகின்றன.


1. பனியில் ஒரு பிணம்:மனிதர்கள் அனைவருக்கும் வாழ்க்கை துணை என்பது மிகவும் அவசியம் தான். ஆனால் பொருத்தமான துணை அவ்வளவு எளிதாக சிலருக்கு கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக தோற்றகவர்ச்சி குறைவாக இருக்கும் பெண்களுக்கு வாழ்க்கைதுணை அமைவது பெரும் சவாலாகவே அனைத்து நாடுகளிலும் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிராமத்து பெண்களை ஏமாற்றி முடிந்தளவு பணத்தை கறந்துவிட்டு அப்பாவி பெண்களை கொலையும் செய்யும் ஒரு கீழ்தரமானவனின் கதையே பனியில் ஒரு பிணம்.

ராபினின் அறிமுக சாகசமான இந்த கதை காதல் என்ற பெயரில் செய்யப்படும் மோசடிகளை தோலுரித்து காட்டுகிறது. அட்டகாசமான அட்டைபடத்துடன் வெளிவந்த இந்த காமிக்ஸ் எப்போதும் எனக்கு பிடித்த ஒன்றாகும். நம்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் வீட்டைவிட்டு ஓடிபோவது என்பதை மானபிரச்சனையாகவே கருதுகிறார்கள் என்பது ஆச்சரியம்.
 
 விஜயன் சாரின் அற்புதமான தமிழ்நடை இந்த கதைக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது.

2. சிவப்பு தலை சாகஸம்.
எந்த ஊரிலும் ஆதாயம் இல்லாமல் ஓசியில் எதுவுமே தரமாட்டார்கள் என்பது Golden rule. அதை புரிந்து கொள்ளாமல் அற்ப வேலைக்கு அதிக பணம் தருகிறார்கள் என தன் சொந்த கடையை மொள்ளமாரி பயல் ஒருவனின் பொறுப்பில் விட்டு விட்டு 'செம்பட்டை முடியுடையோர்' சங்கத்தில் வேலைக்கு சேர்கிறார் வில்ஸன். இதன் மூலம் ஒரு வங்கி கொள்ளைக்கு தன்னை அறியாமல் துணைபோகிறார். ஷர்லக் ஹோம்ஸின் வித்தியாசமான கதை.


(இங்கு சிவப்பு தலை என்பது தல அஜித்தை குறிக்கவில்லை.)


3. பரலோக பரிசு.
கள்ள நோட்டு பற்றி உஷாராக இருக்கும் நாம் போலி பத்திரங்கள் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதிலும் இந்த கதையில் போலி பத்திரங்களை மக்களிடையே உலாவ விடும் தந்திரம் (பரிசு போட்டி) அபாரம் மற்றும் யாரும் எதிர்பார்க்காதது.  

(ஸ்கேன் உதவி - TCU)


 
4. வேங்கை வேட்டை
இந்திய மன்னன் என்று சொல்லிக்கொண்டு பங்கு வர்த்தகம் நடத்தும் ஏமாற்று பேர்வழியின் பகட்டான தோற்றத்தையும் கவர்ச்சிகரமான திட்டத்தையும் பார்த்து ஏமாறுகிறார்கள் மக்கள். அந்த மோசடி மன்னனின் உண்மை முகத்தை ரிப் வெளிகொண்டுவருகிறார்.


ஏமாறும் மக்கள்

ஏமாறும் பெண்கள்

மன்னனின் உண்மை முகம்
 
5. மேடையில் ஒரு மன்மதன்
கடமை முதலில் களிப்பு பிறகு என்பதை இங்கு சிலர் மறந்து விடுகிறார்கள். நாடகம் என்ற பெயரில் ஊரில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒரே இடத்தில் கூட வைத்து வங்கியை கொள்ளை அடிக்கும் கும்பலின் கதை.6. நடுநிசி பயங்கரம்
முன்பின் தெரியாவனுடன் பார்ட்டியில் நடனம் ஆடுவதே தவறு. அதுமட்டுமில்லாமல் அவனது இருப்பிடத்திற்கும் சென்று வம்பை விலைக்கு வாங்கும் ஒரு பெண்ணின் கதை.
 
 
7. மாயாஜால மோசடி
வெறும் மனதை வைத்துக்கொண்டு அனைத்தும் அடையலாம் என்று கூறும் ஒருவன் மீது நமது மக்களுக்கு உடனே பக்தி வந்துவிடுகிறது. உழைப்பு இல்லாமல் எதையும் அடைய முடியாது என்ற உண்மையை மறந்து விட்டு நேரத்தையும் செல்வத்தையும் ஏமாற்று பேர்வழிகளிடம் அடகு வைக்கிறார்கள். இந்த கதையை முழுமை உணர்ந்து படித்த எவறும் நித்தியானந்தா போன்றவர்களை கண்டிப்பாக நாடி இருக்க மாட்டார்கள் என்பது என் ஊகம். நகைச்சுவையான ரிப் சாகஸம்

 
8. போலி சாமியார்
போலி சாமியார்களிடம் அப்பாவி மக்கள் மட்டுமெ ஏமாறுவார்கள் என்றில்லை. திருடர்களும் பேராசைபட்டு ஏமாறுகிறார்கள். இந்த கதையிலும் மோசடி ஆள் இந்தியாவின் பெயரையே உபயோகப்படுத்துகிறான். மாடஸ்டியின் சூப்பர் சாகஸம் மொக்கை மொழிபெயர்ப்பில்.
 
 
காமிக்ஸ் படிப்பதால் நிறைய மோசடிகளை பற்றி தெரிந்துகொள்கிறோம். ஆகையால் சிறுவர்களுக்கு காமிக்ஸ் படிப்பதை ஊக்குவிப்போம் நண்பர்களே.

குறிப்பு 1: மேலிருக்கும் கதைகளில் பெரும்பாலான கதைகளில் பெண்களே ஏமாற்றப்படுகிறார்கள். இதிலிருந்து எனக்கு எழும் கேள்வி

"பெண்களை ஏமாற்றுவது சுலபமா அல்லது ஏமாற்றும் ஆசாமிகளை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கிறதா?"
 
இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்போர்க்கு சுவாமி குத்தானந்தாவின் ஆசி பெற்ற ஆயிரம் போலி  பொற்காசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

33 comments:

King Viswa said...

மீ த ஃபஸ்ட்டு.

King Viswa said...

//இங்கு சிவப்பு தலை என்பது தல அஜித்தை குறிக்கவில்லை//

ரெட் படத்தில் தல நடித்ததை மறந்து விட்டீர்களோ?

SIV said...

பதிவு நேரம் - 1.31
comment நேரம் - 1.34. கலக்குங்க விஸ்வா.

\\ரெட் படத்தில் தல நடித்ததை மறந்து விட்டீர்களோ? \\

இந்த கதையில் சிவப்புதலை கொண்டவரின் ரோல் அவ்வளவு 'கெத்' தாக இல்லை என்பதினால் அஜித்தை இங்கு சிவப்பு தலை என குறிப்பிடவில்லை.

King Viswa said...

//"பெண்களை ஏமாற்றுவது சுலபமா அல்லது ஏமாற்றும் ஆசாமிகளை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கிறதா?"//

ஏமாற்ற்பவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என்று பேதமில்லை. ஆனால் அவர்கள் தேர்ந்தேடுப்பதேன்னவோ பெண்களைத்தான். ஆண்கள் என்றால் அடிதடி என்று கூட வரும். பெண்கள் என்றால் அப்படி இல்லை அல்லவா? அதனால்தான்.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

தோழர் ஷிவ்,

நல்லதொரு பதிவு. இன்பெக்ட், நான் கூட வருகிற மே மாதத்தில் ஒரு பெண்கள் சிறப்பு பதிவிட உத்தேசித்து உள்ளேன்.

ராணி காமிக்ஸ் இதழில் முகமூடி வீரர் பில்லி அறிமுகமாகும் மர்ம வீரன் கதையில் கூட மார்த்தா என்ற பெண்மணியை ஏமாற்றி தங்கப்புதையல் இருக்குமிடத்தை வில்லன்கள் தெரிந்துகொள்வார்கள்.

நேற்று கம்மென்ட் மூலம் உரையாடியது போல நானும் ஒரு சாமியார் பதிவினை தயார் செய்து வைத்திருக்கிறேன். விரைவில் இடுகிறேன்.

ஏற்கனவே சொன்னது போல லே அவுட் சூப்பர்.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

//இந்த கதையிலும் மோசடி ஆள் இந்தியாவின் பெயரையே உபயோகப்படுத்துகிறான்//

ராணி காமிக்ஸில் இப்படி ஒரு யுத்தி செய்து நம்மை ஏமாற்றுவார்கள்.

ராமஜெயம் சார் இருக்கும்போதே கூட அவர் முடிந்த அளவுக்கு இந்தியாவை கொணர முயல்வார். பர்மாவில் பாட்சா என்றெல்லாம் கூட தலைப்பு வைப்பார்.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

//வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். ( குறள் எண் : 435 )
(குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்)//

உடனடியாக நம்ம ஷிவ்வுக்கு ஒரு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அற்புதமான வலைப்பூ மாற்றங்கள். அதுவும் திருக்குறள் வரிகளுடன். குருஜி குத்தானந்தாவின் குடில்களில் ஒன்றிற்குள் நுழைந்து விட்டேனோ என்ற ஒரு பரவச உணர்வு. செம்மொழி மாநாட்டிற்கு டிக்கட் மட்டுமல்ல மேடையில் நண்பர் சிவ்விற்கு ஒரு சீட் போடுங்கள் :)

பெண்களிடம் ஏமாறும் ஆண்கள், ஆண்களிடம் ஏமாறும் பெண்கள். மனிதர்களிடம் ஏமாறும் மனிதர்கள். அம்போ ஸ்பெஷலை எதிர்பார்த்து ஏமாறிக் கொண்டிருக்கும் மக்குலேன் ரசிகர்கள். உலகமே இதுதானே.

அருமையான ஸ்கேன்கள். ரிப் கிர்பி கலக்கலாக இருக்கிறார். சிறப்பான பார்வையில் நல்லதொரு பதிவு. எத்தனை போலி நாணயங்கள் தேவையென்றாலும் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள் :)

ஸ்வாமி குத்தானந்தா said...

உண்மை என்பதே உண்மையல்ல என்ற உண்மை உங்களில் எத்துனை பேருக்கு தெரியும்?

தெரியாத விடயங்களை நாம் அனைவரும் பயத்துடன் ஒதுக்கி அதனை செய்வது தவறு என்று பட்டியலிடுவதில் மனித குளம் தவறுவதே இல்லை. ஆகையால் உங்களை நான் குற்றம் கூறவில்லை. என் செய்வீர்? உங்களில் எத்துனை பேருக்கு கூடு விட்டு கூடு பாயத்தேரியும்?

ஸ்வாமி குத்தானந்தா said...

//இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்போர்க்கு சுவாமி குத்தானந்தாவின் ஆசி பெற்ற ஆயிரம் போலி பொற்காசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்//

ஆசிரமத்தின் பேரைக் கெடுக்க உமக்கு எத்துனை துணிச்சல்? தயவு செய்து தவறான பிரசாரத்திற்கு பலியாகாதீர்கள்.

ஸ்வாமி குத்தானந்தா said...

//"பெண்களை ஏமாற்றுவது சுலபமா அல்லது ஏமாற்றும் ஆசாமிகளை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கிறதா?" //

கேள்வியே தவறு. ஆன்மாவில் பெண் ஆன்மா, ஆண் ஆன்மா என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அதுபோல தான் இந்த கேள்வியும்.

அனைத்து காரியங்களையும் செய்ய தூண்டுபவன் ஒருவன். அந்த ஒருவனே அனைத்திற்கும் காரணம்.

SIV said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரசிகரே,
\\நானும் ஒரு சாமியார் பதிவினை தயார் செய்து வைத்திருக்கிறேன். விரைவில் இடுகிறேன்\\
காத்துகொண்டிருக்கிறேன்.

\\ராணி காமிக்ஸில் இப்படி ஒரு யுத்தி செய்து நம்மை ஏமாற்றுவார்கள்\\
உண்மையே. ஆனால் இந்த கதையில் சாமியாரின் மனைவி சேலை கட்டிகொண்டிருக்கிறாரே, அதுமில்லாமல் ஒரு காட்சியில் மாடஸ்டிக்கு புடவை கட்டும் முயற்சியும் வருகிறது.

\\உடனடியாக நம்ம ஷிவ்வுக்கு ஒரு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா\\
நான் மட்டும் தனியாக எதற்கு? வாருங்கள் எல்லாரும் போலாம்

SIV said...

கருத்துகளுக்கு நன்றி கனவுகளின் காதலரே,

\\அம்போ ஸ்பெஷலை எதிர்பார்த்து ஏமாறிக் கொண்டிருக்கும் மக்குலேன் ரசிகர்கள்\\
இதை விட்டு விட்டேனே......

SIV said...

ஸ்வாமி குத்தானந்தாவின் வருகையால் நமது வலைதளம் பெருமையடைகிறது.

தாங்கள் பெண்ணா ஆணா என்று பெங்களூர் போலீஸ் சோதனை நடத்தியதே, ரிசல்ட் என்ன ஆச்சு சுவாமி?

ஸ்வாமி குத்தானந்தா said...

//தாங்கள் பெண்ணா ஆணா என்று பெங்களூர் போலீஸ் சோதனை நடத்தியதே, ரிசல்ட் என்ன ஆச்சு சுவாமி?//

மானிடர்கள் வைக்கும் இந்த சோதனையை பற்றி எனக்கென்ன கவலை? நான் தெயவீகப்பிரவியல்லவா?

ஸ்வாமி குத்தானந்தா said...

இவர்கள் செய்த சொதனையைப்பற்றியே பேசுகிறீர்களே?

நானும் சில ஆன்மீக சோதனைகளை மேற்கொண்டேன். ஆனால் இந்த முட்டாள்கள் அதனை புரிந்து கொள்ளாமல் என்னை தடுத்து விட்டார்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னையா நடக்குது இங்கே? யாருப்பா அந்த சாமியார உள்ள விட்டது?

இதெல்லாத்தையும் பாத்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாது, நான் வேண்ணா மதம் மாறி கன்வர்ட் ஆகிடட்டுமா?

கவுண்டமணி said...

என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.

சம்திங் பன்டமென்டல்லி ராங்.

SIV said...

கவுண்டரே,

ஸ்வாமி குத்தானந்தா போன்ற ஆசாமிகளை கவனிக்க உங்கள் மாதிரியான ஆட்கள் தான் தேவை.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

ஷிவ்!

காமிக்ஸ்கள் போலிகளை வேடதாரிகளின் முகமூடிகளை கிழிக்கின்றன. ஆனால் நமது செந்தமிழ் நாட்டின் சில பகுதிகளில் சில பல கேபிள் டிவிக்கள் அனைத்து வியாதிகளையும் போக்கும் போலி சித்த மருத்துவர்களையும், ஆளையே மாற்றும் போலி ஜோதிடர்களையும், அனைவரையும் பணக்காராக்கும் ரியல் எஸ்டேட் அய்யாக்களையும், ஆறே நாளில் அனைத்து பாவங்களையும் இரத்தத்தால் கழுவி 'அற்புத எழுச்சி'யை உண்டாக்கும் மதவியாபாரிகளையும் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த போலிகளின் வெளிச்சத்தில் மக்கள் விட்டில் பூச்சிகளாக வீழ்ந்து கிடப்பது செந்தமிழ் நாட்டின் சோகம்!

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

//உடனடியாக நம்ம ஷிவ்வுக்கு ஒரு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா//

ஏன் இந்த கொல வெறி! ஷிவ் -விற்கு மூன்று வேளையும் வீட்டில் சாப்பாடு கிடைக்கவில்லையா என்ன?

பதிவிற்கு ஒரு திருக்குறள் - நல்ல முயற்சி! அதற்காக ஷிவ் அவர்களை பாராட்ட வேண்டுமே தவிர இப்படி செந்தமிழ் மாநாட்டிற்கு எல்லாம் அனுப்பி பழிவாங்கக் கூடாது.

Rafiq Raja said...

சிவ், வித்தியாசமான அணுகுமுறையில் ஒரு பதிவு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தானே இருப்பார்கள், இது உலக நியதி. அறியாமைக்கு கிடைக்கும் பரிசு. சில படித்தவர்களும், உண்மை நிலையை அறிய மனதை பக்குவபடுத்தி கொள்ளாமல், அறியாமை மாயையில் தாங்கள் தொலைத்த சந்தோஷத்தை தேடிக்கொள்ளுவது இன்னும் கொடுமை.

காமிக்ஸ்களில் பெரும்பாலும் கதாநயாகர்கள் சத்தியத்தின் வழி நடப்பதால், இப்படிபட்ட கதை சூழல்கள் அவர்களுக்கு பழக்கபட்ட ஒன்றாகி விடுகிறது. 80களுக்கு முற்பட்ட காமிக்ஸ்களில் இது அப்பட்டமான கதைகளம். நீங்கள் மேற்கோள் காட்டிய கதைகள் அக்காலகட்டத்தை நினைவுகூற வைக்கிறது.

ஒவ்வொரு கதைக்கும் அறிமுகத்தில் தங்கள் மொழி நடை பிய்த்து உதறுகிறதே... புதிய வலைப்பூ வடிவமைப்பு... மெருகேறும் கதை சொல்லும் நடை... கலக்குறீங்க சிவ்... தொடருங்கள்.

ILLUMINATI said...

நண்பர் சிவ்....
உங்கள் வலைப்பதிவில் உள்ள மாற்றங்கள் நன்றாக இருக்கின்றன.பதிவு மிக அருமை.பனியில் ஒரு பிணம் எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.ராபின் கதைகளில் ஓவியம் சாதரணமாக இருந்தாலும்,கதை அதற்கெல்லாம் சேர்த்து அருமையாக இருக்கும்(வீடியோவில் ஒரு வெடிகுண்டு,சிலந்தியோடு சதுரங்கம்,நரகத்தின் நடுவில்...)
குறிப்பாக பனியில் ஒரு பிணம்,சாதாரண மனிதர்களைக் கொண்ட ஒரு அசாதரணமான த்ரில்லர்.

SIV said...

தங்களுடைய கருத்திற்கு நன்றி அய்யம்பாளையம் நண்பரே. தனியார் தொலைக்காட்சிகள் மீதான உங்கள் குற்றசாட்டு முற்றிலும் உண்மை. மூடநம்பிக்கைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் திராவிட கட்சிகள் சார்பான தொலைக்காட்சிகளும் சிறப்பான பங்கு வகிப்பது வேதனை.

குமுதம் போன்ற பத்திரிக்கைகளிலும் வாஸ்த்து, ஜோதிடம் போன்ற விஷயங்கள் நிறையவே வருகின்றன.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் காமிக்ஸ்கள் எவ்வளவோ சிறப்பானவை.

SIV said...

//80களுக்கு முற்பட்ட காமிக்ஸ்களில் இது அப்பட்டமான கதைகளம்//
ஆமாம் ரபிஃக். பெரும்பாலான ரிப் கெர்பி, சார்லி கதைகளில் மோசடி மன்னர்களே வில்லன்கள்.

//ஒவ்வொரு கதைக்கும் அறிமுகத்தில் தங்கள் மொழி நடை பிய்த்து உதறுகிறதே... புதிய வலைப்பூ வடிவமைப்பு... மெருகேறும் கதை சொல்லும் நடை... கலக்குறீங்க சிவ்... தொடருங்கள்.//

நன்றி நன்றி...

SIV said...

தங்களுடைய கருத்திற்கு நன்றி ILLUMINATI. என்னை பொருத்த வரை முத்து காமிக்ஸில் டைகர்க்கு அடுத்த இடம் ராபின் தான். விஜயன் சார் இன்னும் அதிக ராபின் சாகசங்களை வெளியிட வேண்டும் என்பது என் ஆவல்.

Cibiசிபி said...

காமிக்ஸ் செலக்சன் மிக அருமை
Keep it up Mr. Siv

SIV said...

நன்றி சிபி அவர்களே

karthik said...

//பெண்களை ஏமாற்றுவது சுலபமா அல்லது ஏமாற்றும் ஆசாமிகளை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கிறதா//

both are true.

ILLUMINATI said...

//விஜயன் சார் இன்னும் அதிக ராபின் சாகசங்களை வெளியிட வேண்டும் என்பது என் ஆவல். //

அதே ஆசை எனக்கும் உண்டு.ஆனா,தமிழ்ல ராபின் புக்ஸ் அவ்ளோ நல்லா போகாதுன்னு கேள்விப்பட்டேன்.எவ்ளோ உண்மையோ?அப்புறம்,நானும் காமிக்ஸ் பத்தி எழுதுறேன் பேர்வழின்னு மொக்க போட்டு வச்சுருக்கேன்.முடிஞ்சா வந்து பாத்துபுட்டு போங்க.....

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நல்லதொரு பதிவு.

நன்றி.

மூன்று தடியர்களை பார்க்க ஆவல்.

Rebel Ravi said...

From The Desk Of Rebel Ravi:

siv,

new design is very good. waiting for the next post from you.

this post was different from your regular post.

Rebel Ravi,
Change is the Only constant thing in this world.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

நண்பரே,

வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

http://007intamil.blogspot.com/2010/06/x.html