Saturday, November 21, 2009

இன்ஸ்பெக்டர் கருடா (Inspector eagle)

வணக்கம் நண்பர்களே,

ஐந்து தமிழ் காமிக்ஸ் பத்திரிக்கைகளில் இடம்பெற்ற ஒரு இந்திய படைப்பு பற்றி இந்த பதிவு

தமிழ் காமிக்ஸ் உலகில் அனைத்து வகைகளிலும் சூப்பர் ஸ்டாராக திகழ்வது லயன் - முத்து காமிக்ஸ். இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லாத அளவு விதவிதமான கதைகளை அறிமுகபடுத்திய பெருமை லயன் - முத்து காமிக்ஸ்க்கு உண்டு. ஆங்கிலத்தில் வெளிவராத சில அயல் நாட்டு கதைகளை கூட தமிழ் மொழி வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அத்தகைய லயன் - முத்துவில் இந்திய படைப்புகள் இடம் பெறுவது என்பது மிக அறிது. இந்த 'எப்பொழுதாவது வரும்' இந்திய கதைகளில் குறிப்பிட தகுந்த கதை வரிசை இன்ஸ்பெக்டர் கருடா (அல்லது இன்ஸ்பெக்டர் ஈகிள்). கபீஷ், அதிமேதை அப்பு போன்ற படைப்புகளும் லயன்/முத்து வில் இடம்பெறும் இந்திய கதைகளில் குறிப்பிடதக்கவை.

இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகள் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள் மற்றும் விமல் காமிக்ஸ் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது.

பெரும்பாலும் 20 பக்கங்களில் அடக்கிவிடகூடிய கதைகளே நமது காமிக்ஸ்களில் இடம்பெற்றுள்ளது.
அனைத்து கருடாவின் கதைகளும் " ஒரு குற்றம் - கருடா மற்றும் பல்பீரின் விசாரணை - கொலையாளி பற்றிய குழப்பம் - கருடாவின் துப்பறியும் திறன் மூலம் கொலையாளி சிக்குதல் - சிறிய ஆக் ஷன் - முடிவு " என ஒரே ஃபார்முலாவில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஆனால் அனைத்து கதைகளும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

என்னுடைய கணிப்பு படி லயன்/முத்து இதழ்களில் மொத்தமாக 10 இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகள் இடம்பெற்றிருக்கலாம். அவற்றில் சில கதைகளின் முதல் பக்கம் உங்கள் பார்வைக்கு...

பாங்க் கொள்ளை - லயன் காமிக்ஸ் வெளியீட்டு எண் - 72 (மீண்டும் ஸ்பைடர்)


 
காணாமல் போன சிப்பாய் - முத்து காமிக்ஸ் வெளியீட்டு எண் - 172 (சைத்தான் சிறுவர்கள்)
(இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் ஈகிள், பல்பீரின் பெயர் - ஹவில்தார் நாயக்)


 

விபரீத விருந்து - முத்து காமிக்ஸ் வெளியீட்டு எண் - 278 (மரண மண்)



இவற்றில் விபரீத விருந்து தமிழில் கடைசியாக வெளிவந்த இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதையாகும்.
 
இது தவிர ராணி காமிக்ஸில் வெளிவந்த இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதையின் முதல் பக்கம்
(புத்தாண்டு விருந்து - ராணி காமிக்ஸ் வெளியீட்டு எண் - 86**)
(இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் சம்பத், பல்பீர் செவன் நாட் திரீ என அழைக்கப்படுகிறார்)





 இது தவிர விமல் காமிக்ஸ் எனும் காமிக்ஸ் இதழிலும் இவர் கதையை பார்க்க முடிகிறது. அட்டைபடத்தில்*** கருடா இடம்பெற்றிருப்பதும் இருவண்ணத்தில் தாயாரிக்கப்பட்டிருப்பதும் இவிதழின் சிறப்புகள்.




நான்காவதாக பார்வதி சித்திரக்கதையிலும் தலை காட்டி உள்ளார் கருடா. இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் இந்த்ரஜித் ஆகும். 

இன்ஸ்பெக்டர் கருடாவின் படைப்பாளிகள் பற்றிய தெளிவான விபரங்கள் கிடைக்காத நிலையில் நண்பர் ரஃபிக் கொடுத்துள்ள தகவல்கள்படி கதை - ஜகஜிட் உப்பால்(Jagjit Uppal) ஓவியங்கள் - பிரதீப் சட்டே (Pradeep Sathe). வெளிவந்த பத்திரிக்கை Sapthaik Hindustan & Satyakatha *

லயன்/முத்து ஆசிரியர் விஜயன் அவர்கள் இன்ஸ்பெக்டர் கருடாவை பக்க நிரப்பியாகவே உபயோகித்து வந்துள்ளார் என்பது என் என்ணம். ஆனால் 8~9 வருடங்களுக்கு முன் முத்து காமிக்ஸில்(வெ.எண் - 171) வந்திட்ட முத்து மினி காமிக்ஸ் விளம்பரம் இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் அந்த முயற்சி விளம்பரத்தோடு நின்று விட்டது தான் பரிதாபம்.



--- நன்றி ---

Update at 13/03/10 : மேற்கண்ட இதழ்கள் அல்லாமல் பார்வதி சித்திரக்கதை மற்றும் பூந்தளிரிலும் தலை காட்டி உள்ளார் கருடா. இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் இந்த்ரஜித் ஆகும். பூந்தளிரில் வெளியான கருடா சாகஸம்.  (விரைவில் பார்வதி சித்திரக்கதை ஸ்கேனும் இடம்பெறும்)


Update at 25/09/2015:  இந்தியில் வெளிவந்த மனோஜ் காமிக்ஸ் தான் கருடாவின் மூலம் என்று தெரிகிறது. அங்கு அவர் பெயர் இன்ஸ்பெக்டர் மனோஜ். (Inspector Manoj - Manoj comics)


 

* தகவல்கள் உபயம் - ரஃபிக்
** அட்டைபடம் உபயம் - டாக்டரின் அ.கொ.தீ.க வலைதளம்
*** scan உபயம் - R T முருகன்

3 comments:

Rafiq Raja said...

நண்பர் சிவ்,

இன்ஸ்பெக்டர் கருடா பற்றிய அருமையான ஒரு அறிமுக பதிவு. சிறுவயதில் முத்து காமிக்ஸ் இதழ்களில் பக்க நிரப்பிகளாக இதை படித்த நியாபகம் இருக்கிறது. பிரதீப் சாத்தேவின் அப்பழுக்கு இல்லாத ஓவிய பாணி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அக்காலத்தில் மிகவும் பிரபலமான ஜீப் வகை வாகனங்களை வரைய நான் கற்றுகொண்டதே இந்த கதை தொடரை வைத்து தான்.

கூடவே கருடா எப்போதும் பல்பீரை, பீர்பால், என்று மாற்றி மாற்றி கூறி வெறுப்பேற்றுவது போல ஒரு காமடி பீஸ் கூட இருக்கும்.

விமல் காமிக்ஸ் பற்றி அறிந்தது, எனக்கு புதிதே. ராணி காமிக்ஸில் ஏன் பெயரை மாற்றினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை முத்துவில் வந்த கதைதொடர் தான் என்று பெயர் வர கூடாதென்ற தந்திரமாக இருக்கலாம்.

பழைய நினைவுகளை தட்டி எழுப்ப உதவியதற்கு நன்றிகள் பல. தொடருங்கள் உங்கள் வித்தியாசமான பதிவுகளை.

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கருடாவை நினைவூட்டுயதிற்கு நன்றி. சிறப்பான ஒர் பதிவு.

SIV said...

நன்றி கனவுகளின் காதலன் மற்றும் ரஃபிக், ராணி காமிக்ஸில் கருடா பல்பீரை மிகவும் மரியாதை குறைவாகவே நடத்துவதாக வரும். (தமிழ் சினிமா போலீஸ் காட்சிகளின் பாதிப்பாக இருக்கலாம்) கருடா - பல்பீர் உறவை நன்றாக டேமேஜ் செய்து விட்டார்கள். மொழிபெயற்பில் ராணி காமிக்ஸை விட விமல் காமிக்ஸ் எவ்வளவோ பரவாயில்லை என்பது என் கருத்து.