Friday, October 9, 2009

தமிழர் புகழ் போற்றும் இராஜ கம்பீரன் (Rajakambeeran)

வணக்கம்,
தமிழகத்திற்க்கு சற்று தொலைவில் உள்ள ஒரு தீவில் தமிழர்கள் பலர், தமிழர்களை வெறுக்கும் ஒரு கொடூரனால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். . அவர்களை மீட்க புலி கொடி பறக்கும் கப்பலில் தனது வீரர்களுடன் வருகிறார் தமிழினம் காக்கும் தலைவர். தமிழ்பற்றுள்ள வீரர்கள் அவர்களை மீட்பார்களா இல்லையா?

என்ன நண்பர்களே தமிழர்களை வருத்தும் ஈழ பிரச்சனை பற்றி கூறுவது போல இருக்கிறதா... இல்லை இது ஓவியர் ப.தங்கம் அவர்கள் படைத்துள்ள "இராஜகம்பீரன்" சித்திர கதையின் சாரம் தான்.தமிழில் உருவாக்கப்படும் சித்திர கதைகள் அறவே நின்று விட்ட இன்றைய காலகட்டதில் வெளியிடப்பட்டு இருக்கும் முழுமையான தமிழ் சித்திர கதை தான் இராஜகம்பீரன். கிரவுன் சைஸ் அளவில் 214 பக்கங்களுடன்ம் அருமையான் சித்திரங்களுடனும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓவியர் ப. தங்கம் அவர்கள் கதையெழுதி சித்திரம் வரைந்து இந்த இதழை படைத்திருக்கிறார். 70 வயது ஆகி இருந்தாலும் தமிழ் - தமிழர் வரலாறு - சித்திரகதை ஆகியவை மேலுள்ள பற்றால் அருமையான இந்த இதழை வெளியிட்டு இருக்கிறார். இவரிடம் இருந்து இன்னும் பல வரலாறு கூறும் சித்திர கதைகளை எதிர் பார்க்கலாம் என் நினைக்கிறேன். தினதந்தி நாளிதழில் பணியாற்றி இருக்கும் தங்கம் அவர்கள், கருப்பு கண்ணாடி என்ற சித்திர கதையை உருவாக்கி உள்ளார். இந்த கதை 1960களில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. (எனது தந்தை கூட தனது சிறு வயதில் இந்த கதை படித்துள்ளதாக கூறுவார்). கன்னிதீவு கதையின் ஆரம்ப காலங்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழர் வரலாறின் மீது தீராத பற்று வைத்து இருப்பது அவர் எழுத்தில் நன்றாக தெரிகிறது.900 ஆண்டுக்கு முன் வாழ்ந்து சரித்திரதில் முக்கிய இடம் பெற்றுள்ள இராஜராஜ சோழன் காலத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கடல் வாணிபர்கள் கடற்கொள்ளையன் ஒருவனால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க செல்லும் சோழ நாட்டு வீரர் குழு கடற்கொள்ளையர்களை வீழ்த்துகிறார்களா என்பதே கதை சுருக்கம்.

சோழர் காலத்து வரலாற்று கதையினை சித்திர கதை வடிவில் படிப்பதே மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது. கதையின் பல இடங்களில் தமிழர்களின் பழம்பெருமைகள் நன்றாகவே உணரமுடிகிறது. இராஜராஜ சோழன் தவிர கவிஞர் ஒட்டக்கூத்தர், குலோத்துங்கசோழன் ஆகியோரும் இந்த கதையில் இடம் பெற்றுள்ளனர். கூடவே ஒரு புத்தபிட்சு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். பண்டைய தமிழகத்தில் புத்த மதத்தினர் தமிழ்ர்களுடன் நல்ல நட்புடன் வாழ்ந்து இருக்கிறார்கள். (ஆனால் இன்று ?? )

பழைய தமிழர்கள் கடற்பயணத்தை எப்படி திட்டமிட்டு மேற்கொண்டார்கள் என்பதை நுணுக்கமாக விவரித்துள்ளார் ஆசிரியர். தீவில் இருக்கும் கைதிகளை மீட்கும் விதமும் ஏனோதானோ என் இல்லாமல் சுவையாகவும் நம்பும்படியாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சில காட்சிகளில் ஒரே கருத்துள்ள வசனங்கள் திரும்ப திரும்ப வருவது ஒரு சின்ன குறை. அதே போல் கதை இராஜராஜ சோழன் பற்றியதா அல்லது இரண்டாம் இராஜராஜ சோழன் பற்றியதா என்பதிலும் சிறு குழப்பம் உள்ளது.

ஓவியங்களை பொறுத்த வரை சிறப்பவாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழர்களின் கலை பன்பாட்டு அடையாளங்கள் நன்றாகவே பிரதிபலிக்கிறது. இராஜராஜ சோழனின் கம்பீர தோற்றம் மனதை கொள்ளை கொள்கிறது. (கதையின் தலைப்பு போலவே)
சித்திர கதை மட்டுமில்லாமல் பல வரலாற்று தகவல்களும், சிற்பங்களின் புகைபடங்களும் இந்த நூலில் அடங்கியிருக்கிறது.

Pic1 - கதாபாத்திரங்கள் அறிமுகம்


Pic2 - குலோத்துங்கசோழன் தனது அன்னையிடம் ஆசி பெறும் காட்சிPic3 கப்பல் கட்டும் இடம்

Pic4 - ராஜராஜ சோழனின் கம்பீர தோற்றங்கள்

Pic5 - கடற்பயணம் துவக்கம்

Pic6- கடற்கொள்ளையர்கள் அழிப்பு

தமிழில் இது போன்ற சித்திர கதைகள் வந்ததே இல்லை என கூறுவதை விட இது போன்று இன்னும் நிறைய கதைகள் வரவேண்டும் என்பதே என் விருப்பம். தமிழக நூலக துறை இந்த புத்தகத்தை அங்கிகரித்து நூலகங்களில் இடம்பெற செய்திருப்பது ஆரோக்கியமான செய்தி.
சென்ற பதிவிற்கு கருத்துரை எழுதிய ஓவியர் ப. தங்கம் அவர்களின் மகன் இராஜேந்திரன் தங்கமுத்து அவர்களுக்கு நன்றிகள்

புத்தக விபரங்கள்

பதிப்பகம் தங்கப்பதுமை,
முகவரி - ஞானம் நகர், 6வது தெரு மேற்கு
மாரியம்மன் கோவில் அஞ்சல்
தஞ்சாவூர்

பக்கங்கள் - 214, விலை - 145/-

6 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சிறப்பான பதிவு. தமிழ் காமிக்ஸ்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள காதல் அரிதான ஒன்று. உங்கள் விருப்பம் போன்றே நானும் தமிழில் தரமான புதிய காமிக்ஸ் கதைகள் தோன்றிட வேண்டுமென விரும்புகிறேன்.

ஆசிரியர் தங்கத்தின் தளராத முயற்சிக்கு என் பாராட்டுக்கள். இந்த வயதில் அவர் இதனை சாதித்ததே பெரிய விடயம்.

தொடருங்கள் உங்கள் தனித்துவமான பதிவுகளை.

Ramesh said...

அருமையான முயற்சி. இதைத் தொடர வேண்டும்.
வாழ்த்துக்கள்!

நமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை விளக்கும் சித்திரப்படங்களை சிறுவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

SIV said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நன்பர்களே....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

Vedha said...

sir,

can i have the phone number of the publishers?

or the seller / distributor?

happy diwali to you & Your family/friends circle.

Lucky Limat - லக்கி லிமட் said...

நண்பரே ,
இந்த புத்தகம் நீங்கள் எங்கே வாங்குநீர்கள் என்று கூற முடியுமா ?. நானும் வாங்க வேண்டும் நண்பரே
அன்புடன் ,
லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

SIV said...

Vedha Madam & லக்கி லிமட் - As per the publishers, this book is not available in any book store in chennai. I purchased by sending MO to the publishers. You can contact the publishers directly so that they will guide you to get the books. Dont forget to register your views after reading this comics.

பதிப்பகம் தங்கப்பதுமை,
முகவரி - ஞானம் நகர், 6வது தெரு மேற்கு
மாரியம்மன் கோவில் அஞ்சல்
தஞ்சாவூர்

Phone - 04362 267488