Wednesday, September 9, 2009

கனவா நிஜமா - Parvathi chitra kathai

தமிழில் பல காமிக்ஸ்கள் வந்து இருந்தாலும் வெற்றி பெற்றவை சிலவே. அதிலும் மொழி மாற்றம் இல்லாமல் நேரடியாக வெளிவந்த காமிக்ஸ் இதழ்களில் வெற்றி பெற்றவைகளில் முதன்மையான இதழ் " வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள்" ஆகும். விற்பனையில் சாதனை புரிந்த இந்த இதழ் நின்று போனது தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு பெரும் சோகமே. இத்தகைய சிறப்புக்கள் மிகுந்த இதழின் 15 வது படைப்பு " கனவா நிஜமா". வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள் பற்றிய முழு விபரங்களை விவாதிக்க ஒரு பதிவு போதாது. இந்த பதிவில் எனக்கு பிடித்த கதை ஒன்றை பற்றி எழுதுகிறேன்.

ஒரு ஆடு மேய்க்கும் இடையனால் எப்படி ஒரு தேசத்தை காப்பாற்ற முடிகிறது என்பதே கதை.

இமயத்தின் அடிவாரத்தில் மாயாபுரி என்று ஒரு தேசம் மன்னர் வஜ்ரபாகு வின் நல் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆடு மேய்க்கும் இடையன் நீலன் தான் இக்கதையின் நாயகன். அவன் ஒரு முறை ஆடு மேய்க்கும் போது ஒரு விதமான வாயுவினை சுவாசிக்க நேரிடுகிறது. அது அவனை கனவா நிஜமா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் பத்து வருடங்களுக்கு பின் இட்டு செல்கிறது. பத்து வருடங்களுக்கு பின் அவன் நாட்டில் நடந்திடும் மாற்றங்களை அவனால் பார்க்க முடிகிறது. மாற்றங்கள் மகிழ்ச்சி தருபவையாக இல்லை. தற்போது சேனாதிபதியாக இருக்கும் தந்தவக்கரின் அடிமைசாசனத்தில் நாடு அவதி பட்டுக்கொண்டு இருந்து.

சிறிது நேரத்திலேயே நிகழ்காலத்திற்கு வந்து சேரும் நீலனால் அமைதியாக இருக்க முடியவில்லை. சாதாரண ஆடு இடையனாக நாட்டை காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் உதாசீனப்படுத்தபடுகிறது.
ஆனால் அவன் நாட்டை காப்பற்றும் முயற்சியில் பின் வாங்கவில்லை. தன் அடையாளங்களை மாற்றுகிறான். மாற்று வழியினை தேர்ந்து எடுத்து வெற்றியும் பெறுகிறான்.
இந்த கதை எந்த வடிவத்தில் (நாவல், திரைப்படம், காமிக்ஸ் etc) வந்து இருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும் என்பது என் கருத்து.

வாண்டு மாமாவின் அருமையான கதை, மொழி நடை மற்றும் செல்லத்தின் அட்டகாசமான சித்திரங்கள் என தரமான இதழ். இங்கே நாம் காணும் சித்திரங்கள் எந்த ஒரு அயல் நாட்டு சித்திர கதைக்கும குறைந்தது இல்லை.
கதை இந்தியாவில் நடந்தாலும் ஒரு சில காட்சிகளில் ஓவியங்களில் மிக சிறிதாக பாரசீக மற்றும் ரோமானிய சாயல் தெரிகிறது. ஆனால் இதுவே மாயாபுரி வீரர்களுக்கும் தார்தாரியர் வீரர்களுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது.
பெருன்பான்மையான பார்வதி சித்திர கதைகள் பழைய கல்கி, ஆனந்த விகடன், கோகுலம் ஆகிய இதழ்களில் தொடர் கதையாக வந்தவைதான் எனபது அனைவரும் அறிந்ததே. கனவா நிஜமா எந்த பத்திரிகையில் வந்தது எனபது தெரியவில்லை. அதேபோல் இந்த இதழின் அட்டை படமும் யார் வரைந்தது என தெரியவில்லை.
பதிவை படித்து கருத்துக்களை பகிர்ந்திட மறவாதீர் நண்பர்களே..

14 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையான பொக்கிஷப் பதிவு, நன்றி.

சித்திரங்களில் மதிப்பிற்குரிய ஓவியர் செல்லம் அவர்கள் பின்னி எடுத்திருக்கிறார் என்பது உண்மை. கதையில் வாண்டுமாமா கலக்கியிருப்பார்.

நீங்கள் இங்கு தந்துள்ள ஸ்கேன்கள் பெரிதாக மறுக்கின்றன :) இக்கதையை இன்றுதான் முதலில் பார்க்கிறேன் என்பதினால் நீங்கள் வழங்கியுள்ள சில பக்கங்களையாவது முழுமையாக ரசிக்கும் ஆர்வத்திலேயே இவ்வேண்டுகோள்.

பொன்னியின் செல்வன் பதிவில் நீங்கள் என் கேள்விக்கு தந்த கனிவான பதில்களுக்கு நன்றி.

அருமையான பதிவு நண்பரே, நிறுத்தி விடாதீர்கள் இப்படியான பதிவுகளை/

கனவில் வாழ்பவன் said...

அருமை அருமை.. பார்வதி சித்திரக் கதை ஒன்றை மீள இங்கே எடுத்துப் பதிப்பித்தமைக்கு. உங்கள் ஸ்கான் படிமங்கள் பெரிதாக மறுக்கின்றனவே???

Rafiq Raja said...

அருமை சிவ். பார்வதி சித்திரக்கதைகள் பற்றிய முதல் பதிவிற்கு வாழ்த்துகள். வாண்டுமாமா மற்றும் செல்லம்மின் வெற்றி கூட்டணியில் உருவான பல சித்திரதொடர்களில் இதுவும் ஒரு அரிய படைப்பு. அதை பற்றி நச்சென்று உங்கள் பாணியில் விவரித்துள்ளீர்கள்.

செல்லம் பெரும்பாலும் அவர் கதைகளில் நம் கலாசாரத்தின் ஊடே சில மேற்கத்திய ஆடை அணிகலன்களை புராண காலத்தில் சேர்ப்பதில் வல்லவர். அதை இந்த தொடரிலும் அருமையாக சேர்த்திருக்கிறார்.

பார்வதி சித்திரகதைகள் நின்று போனதற்கு காரணம், அவர்களின் தொடர்கதைகள் இருப்பு தீர்ந்து போனதே. எல்லா பத்திரிக்கை தொடர்கள் (முக்கியமாக வாண்டுமாமாவின்) காலியானதும், சில இதழ்களுக்கு வெளிநாட்டு கதைதொடர்களை பிரசுரித்து பார்த்தார்கள். அதோடு அவர்கள் வியாபாரம் நின்று போனது. எனக்கு தெரிந்து இந்திய கலைஞர்கள் அதுவும் தமிழர்களை வைத்து ஓரளவுக்கு பிரபலமாக விற்று தீர்ந்த ஒரே புத்தகம் இதுவாக தான் இருக்கும்.

பெரும்பாலான பார்வதி சித்திரகதைகள் அட்டைபடங்களுக்கு ஓவியம் வரைந்தவர் அரஸ் என்று நியாபகம். இது கூட அவரின் பாணியில் தான் இருக்கிறது, எனவே அவராக தான் இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் பிரதியில் சேதம் அடைந்துள்ள அந்த இடது கீழ்புற கோணத்தில் அவர் பெயர் இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம்.

மிக நாட்களாக எனக்கு மிகவும் பிடித்தமான இந்த சித்திர தொடர் பற்றி ஒரு தொடர் பதிவிட நினைத்திருந்தேன்... ஆனால் நாம் பிரதான வேலைக்கு நடுவே, அதை செயல்படுத்த முடியவில்லை. நீங்கள் அந்த குறையை போக்கியதற்கு நன்றிகள். தொடருங்கள் உங்கள் அதிரடிகளை.

SIV said...

நன்றி காமிக்ஸ் நன்பர்களே, இந்த கதை எனக்கு பிடித்தது போலவே உங்களுக்கும் பிடித்தது கண்டு மகிழ்ச்சி.
கனவுகளின் காதலர் மற்றும் Mr. J வருத்தப்பட்டது போல் படங்கள் பெரிதாகவில்லை தான். எனக்கும் ஏன் என்று தெரியவில்லை. நான் பதிவு இடும் முறையில் ஏதோ தவறு என என்னுகிறேன்.
ரஃபிக் போன்ற கனிப்பொறி வல்லுனர்கள் உதவலாமே....

ரஃபிக் - நீங்கள் நேரம் கிடைக்கும் போது பார்வதி சித்திரகதை மற்றும் வாண்டு மாமா பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவு இட வேண்டும்.

(கனவுகளின் காதலரே - உங்கள் mail ID சொல்லுங்கள். இந்த scan களை அனுப்பி வைக்கிறேன்)

முத்து விசிறி said...

அருமையான பதிவு. கனவா நிஜமா கல்கியில் தொடர் கதையாக வந்தது. 60 இல் வந்த தொடர் இது. கடைசியாக ஈஸ்வரி நூலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த ஞாபகம். திரு ராகுலனிடம்(Star Comics) இந்த தொடர் இருக்கிறது என நினைக்கிறன்.

Lucky Limat - லக்கி லிமட் said...

நண்பரே,
இந்த பதிவை பார்க்கும் போதே சிறு வயது நினைவுகள் வந்து மனதில் ஒட்டி கொள்கின்றன. இந்த கதையை எங்கோ எப்போதோ படித்த நினைவு வருகிறது . எனக்கும் ஸ்கேன் அனுப்புங்கள் நண்பரே , மேலும் ஈஸ்வரி நூலகம் எங்கு உள்ளது ?
அன்புடன் ,
லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நண்பரே,

பதிவிலும் கருத்துக்களிலும் உண்மைக்கு புறம்பான சில தகவல்கள் இருப்பதால் இந்த கமெண்ட் (எப்போதுமே நமக்கு முழுமையாக தெரியாதவற்றை பற்றி ஊகித்து சொல்வது பொது ஊடகத்தில் தவறு ஆகும்).

பார்வதி சித்திரக் கதைகள் நின்று போவதற்கு காரணம் திரு வாண்டுமாமா அவர்களின் மரணமும், அதன் பின்னர் எழுந்த கதை உரிமை குறித்த கேள்வியும் தான். வாண்டுமாமா எழுதிய மொத்த கதைகள் 182, அதில் சிறுவர்களுக்கு என்று எழுதிய கதைகள் மொத்தம் 124, அதில் சித்திரக் கதைகள் மட்டுமே என்பதுக்கும் மேல். அதில் இன்னமும் பிரசுரிக்க பல கதைகள் இருந்த நிலையில் கதைகள் தீர்ந்தவுடன் புத்தகம் நின்றது என்று கூறுவது தவறு.

இதே காரணத்தால் தான் பூந்தளிர் இதழும் நின்றது. வாண்டு மாமா அவர்களின் மறைவுக்கு பின்னர் எடிட்டர் வேலையை திறம்பட செய்ய யாரும் இல்லை. பஞ்சு அவர்கள் என்னதான் திறமையானவர் ஆக இருந்தாலும், வாண்டுமாமா அவர்களின் இடத்தை நிரப்புவது கடினமே.

பார்வதி சித்திரக் கதைகளில் வந்த கதைகள் எதுவும் ஆனந்த விகடனில் வந்தவை அல்ல. வாண்டு மாமா அறுபத்தி ஒன்றில் சிறிது மாதங்கள் அங்கு ஒரு சிறிய அளவில் பணி புரிந்தாரே தவிர அவர் பிற்காலத்தில் அந்த குழுமத்தில் பணி ஆற்ற வில்லை. அதனால் இந்த கதைகள் கல்கி மற்றும் கோகுலம் இதழ்களில் வந்தவையே ஆகும்.

இந்த இதழின் அட்டை படத்தை வரைந்தவர் அரஸ் ஆவார். இவர் அப்போது அந்த குழுமத்தில் வரைந்து கொண்டு இருந்தார். இவருடன் சுப்பு, ஷ்யாம் போன்றவர்களும் வரைந்து கொண்டு இருந்தார்கள். அரஸ் எப்போது அட்டைப் படம் வரைவார் என்றால் மற்ற ஓவியர்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே. அவர் மிகவும் சீனியர். அதனால் பெஉம்பாலான அட்டைப் படங்களுக்கு அவர் வரைந்தார் என்பதும் கூட தவறே. (சமீபத்தில் அவரின் இரண்டு மகன்களும் இனைந்து ஒரு சிறந்த ஓவிய கண்காட்சியை நடத்தினர், நானும் சென்று பார்த்தேன். நன்றாக வரைகிறார்கள்)

தமிழர்களை வைத்து பிரமாதமாக வெற்றி பெற்ற முதல் புத்தகம் இது அல்ல.எழுபதுகளில் வந்த முல்லை தங்கரசனின் மாயாவி காமிக்ஸ், எண்பதுகளின் ஆரம்பத்தில் அருமையான தரத்தில் வந்த மதி காமிக்ஸ் (ஆரம்ப காலம் மட்டும் - முல்லை தங்கராசன் இருந்த வரையில்) போன்றவை தரத்திலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்கின.

பார்வதி சித்திரக் கதைகள் ஆரம்பத்தில் சிறப்பாக விற்பனை ஆனாலும் சுமார் பத்து இதழ்களுக்கு பின்னர் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டது. அதனாலே அவர்கள் கபீஷ் கதம்பம் போன்ற வியாபர யுத்திகளை மேற்கொண்டனர். பின்னர் கூட இவை விற்பனை அளவில் மந்தமாகவே இருந்தது. என்னுடைய உறவினர் ஒருவர் இந்த புத்தக குழுமத்தில் வந்த மாத நாவல் ஒன்றில் பணி ஆற்றினார். ஆகையால் இவை எல்லாம் நேரிடையான தகவல்கள், வெறும் யூகங்கள் அல்ல.

நெடுநாளைய காமிக்ஸ் ரசிகர்கள் இந்த காமிக்ஸ் இதழை அறவே வெறுத்தனர். அற்புதமான சித்திரங்களை கொஞ்சம் கூட ரசனை இல்லாமல் மட்டமான தாளில், தவறாக பிரசுரித்து இந்த கதைகளின் உயிரோட்டத்தை கெடுத்து விட்டனர் என்று மிகப் பரவலான குற்ற சாட்டு உண்டு. அது நூறு சதவீதம் உண்மை ஆகும். அதனாலேயே கூட இந்த காமிக்ஸ் இதழை பற்றி காமிக்ஸ் ஆர்வலர்கள் பெரிய அளவில் பேச மாட்டர்கள். (சமீபத்திய உதாரணம் - அமெரிக்காவின் டைட்டன் நிறுவனம் வெளியிடும் மாடஸ்டி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் தொகுப்புகள் - மிகவும் மட்டமான முறையில் இவை தற்போது வெளியிடப் படுகின்றன - எண்பதுகளில் இவை முதல் முறையாக வெளியிடப் பட்டதற்கும் இப்போது உள்ளதற்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ளதாகும்).

இந்த இதழ் குறித்த தகவல்கள்:

வெளிவந்த இதழ் - கல்கி

வெளிவந்த தேதி - 4-2-1979 முதல் வாரம் வெளியான நாள். (அறுபதுகளில் அல்ல)

முறை - வாரம் இரண்டு பக்கங்கள் (பத்தாவது பாகத்தில் மட்டும் மூன்று பக்கங்கள்).

கொடுமையான விடயம் என்னவெனில் இந்த கதை சித்திரங்களுக்காக பேசப் பட்டதோன்றாகும். ஆனால் இந்த பார்வதி சித்திரக் கதையில் அந்த சித்திரங்களின் அழகை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டனர். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனில் நான் இன்னும் சிறிது நாட்களில் இந்த கதையை பற்றி விரிவாக பதிவிடலாம் என்று நினைக்கிறேன். அப்போது அந்த சித்திரங்களின் அழகை முழுமையாக பார்த்து ரசிக்கும்படி நல்ல ஸ்கான்'களை அளிக்கிறேன். பொறுத்து இருங்கள்.

லிமட் - ஈஸ்வரி நூலகம் செல்வது தேவை அற்றது. நண்பர்கள் எப்போதோ அதனை சூறையாடி விட்டனர்.

Vedha said...

wow, now this blog looks very nice.

even now, you can make it better by broadening the content space by modifying HTML Code. contact me, if you want to know how.

the storyline is very much similar to that of the Final Destination Films. Yesterday only i was watching the 4th part and your post makes it very similar reading to the plot of that.

here in this story, the hero gets a feel of what is going to happen in the future. he prevents it from happening. likewise in the film, the lead characters get to know their destiny and avaoid death, initially.

good post and even better to know how people participate eagerly with their data. great.

SIV said...

Muthu fan உங்களின் கருத்துரை பார்த்ததில் மகிழ்ச்சி.
காமிக்ஸ் வலைபதிவர்கள் மத்தியில் lion / muthu comics களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வாண்டுமாமா போன்றவர்களுக்கு கொடுக்கப்படுவதிலை என்பது என் எண்ணம். எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஏர்படுத்தியவர் அவர். அவர் பற்றி நிறைய பத்திவுகள் வர வேண்டும் என்பது என் ஆசை. ஆகையால் தான் குறைவான தகவல்களே இருந்தாலும் இந்த பதிவை இட நேர்ந்தது. சரியான தகவல்களுடன் அந்த குறையை நிவர்த்தி செய்த அனைவருக்கும் நன்றி. (குறிப்பாக மிகுந்த சிரத்தை உடன் தகவல்கள் கொடுத்த ஜாலி ஜம்ப்பர் அவர்களுக்கு)

//the storyline is very much similar to that of the Final Destination Films. //

சினிமா வருவதற்கு முன்பே இந்த கதை வந்து விட்டது. நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் concept ஐ வைத்து நிறைய கதைகள் வந்து இருக்கலாம். அதை எப்பிடி பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம். அதில் வாண்டு மாமா தான் ஒரு கில்லாடி என்பதை இந்த கதையில் நிறுபித்து உள்ளார்.

//கொடுமையான விஷயம் என்னவெனில் இந்த கதை சித்திரங்களுக்காக பேசப் பட்டதோன்றாகும்// - செல்லம் அவர்களின் ஓவியங்கள் சற்று சுமாரான அச்சில் வந்து இருந்தாலும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது என்பதே என் எண்ணம்.

ரஃபிக் மற்றும் ஜாலி ஜம்ப்பர் இருவரும் கோபமாக இருப்பதாக தோன்றுகிறது. My humble request pls dont fight

Rafiq Raja said...

சிவ்,

வாண்டுமாமாவை வாழ்வில் ஒருமுறை கூட சந்திக்காமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கம் இன்றும் மனதில் தங்கும் ஒரு குறை. அவரின் மிக அன்னியோன்யமான நண்பரான செல்லத்தையாவது, அவரின் தற்போதைய நிலையிலும் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததை வைத்து ஓரளவு தேற்றி கொள்கிறேன்.

இன்றும் அவர்கள் படைப்புகள் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, என்பது இந்த பதிவுகள் மூலம் தெளிவாகிறது. இவர்களின் பங்களிப்பு, தமிழ் காமிக்சின் ஈடு செய்ய முடியாத இழப்பு.

உங்களுடைய ஸ்கான் படங்கள் பெரிதாக மறுப்பதேன் என்று புரியவில்லை. நீங்கள் கூகிள் இணையத்தில் நேரடியாக பதிவை இடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக அங்கு சேர்க்கபடும் படங்களுக்கு அந்த பெரிதாக்கும் சுட்டிகள் தானாகவே சேர்க்கபடும். நீங்கள் பதிவிடும் போது ஏதாவது மாறி இருக்கலாம். என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால், மேற்கோண்டு இதை பற்றி பேசலாம்.

கூடவே, உங்கள் வலைப்பூவை அகலமாக்கலாம் என்று நான் முன் கூறிய விஷயத்தை பற்றியும் நீங்கள் விரும்பினால் பேசலாம். தொடர்ந்த இப்படிபட்ட அரிய காமிக்ஸ் பற்றிய உங்கள் பதிவுகளை இட்டு எங்களை மகிழ்வியுங்கள்.

Unknown said...

HAI SHIV I AM REALLY PROUD OF YOU.THANKS FOR THIS WONDERFUL POST.

காமிக்ஸ் காதலன் said...

அருமை.

நல்லதொரு கதை. இதனை வாரா வாரம் வெயிட் செய்து படித்தவர்களுக்கே இதன் அருமை தெரியும்.

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
எதிரிகள் ஜாக்கிரதை

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையான வண்ணத்தெரிவு, அழகான முகப்பு என்று மனதைக் கொள்ளை கொள்கிறது உங்கள் வலைப்பூ. பாராட்டுக்கள்.

Unknown said...

உங்களுடைய வலைப் பூ அருமையாக இருக்கிறது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் முழுவதும் படித்துவிடலாம்.