Friday, February 18, 2011

சிதம்பர ரகசியம் - நகைச்சுவை சித்திரக்கதை

தமிழ் காமிக்ஸ் உலகில் கல்கி இதழில் வெளிவந்த தொடர் சித்திரக்கதைகள் மிகவும் முக்கியமான இடத்தை பெறுகின்றன. வாண்டுமாமா, செல்லம், ரமணி, வினு போன்ற ஒப்பற்ற கலைஞர்களின் திறமைகளுக்கு கல்கி இதழ் ஒரு சிறந்த வடிகாலாக விளங்கியது என்றால் அது மிகை அல்ல. இதில் வாண்டுமாமாவின் பல கதைகள் பார்வதி சித்திரக்கதைகள் இதழ் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றதை நாம் அறிவோம். இதோ இங்கு நாம் பார்க்கும் சித்திரக்கதை தொடர் ஒரு வித்தியாசமான கதை மற்றும் சித்திர அமைப்பு உடைய ஒரு  சித்திரக்கதையாகும்.


தமிழில் படைக்கப்பட்ட சித்திரக்கதைகளில் நகைச்சுவை கதைகளின் பங்கு சற்று குறைவு போல எனக்கு ஒரு தோற்றம் தெரிகிறது. அதிலும் வெளிவந்த நகைச்சுவை கதைகளின் சித்திரங்கள் சாதாரண சித்திரங்களிலேயே இருக்கும். (உ-ம் பலே பாலு, நந்து சிந்து மந்து). லக்கிலூக், சிக்பில் போன்று கார்டூன் வகை சித்திரங்களுடன் தமிழ் காமிக்ஸை பார்ப்பது மிகவும் அறிது. இன்றை தினத்தந்தி - தங்க மலர், சிறுவர் மணி போன்ற இதழ்களில் கார்டூன் வகை சித்திரங்களை அவ்வப்போது பார்க்க முடிகிறது. ஆனால் இக்கதைகள் யாவும் சிறிய வயது குழ்ந்தைகளுக்கானதே. தரமும் குறைவு.

சிதம்பர ரகசியம்:

இந்த பதிவில் நாம் பார்க்கும் சித்திரக்கதை 1970 ல் துவங்கி கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த ஒன்று. கோமதி சுவாமிநாதன் என்பவரின் கதைக்கு ஓவியர் ராமு சித்திரங்கள் வரைந்திருக்கிறார். கோமதி சுவாமிநாதனை பற்றி googling செய்த போது இவர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் என்பது தெரிகிறது.
 

சிதம்பர ரகசியத்தின் கதை இது தான். சிதம்பரம் பர்மாவில் இருந்து திரும்பவிருக்கும் ஒரு பெரிய பணக்காரர். அவரின் சொத்துக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது உறவினர்கள் யாரையும் பார்த்திராத இவர் எப்படியோ தனது உறவினர்களை கண்டறிந்து தந்து மாளிகைக்கு வர அழைக்கிறார். சிதம்பரம் ஊரில் இல்லாத போது அவரின் சொந்தக்காரர்கள் அவரின் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு மாளிகையின் விசுவாசமான வேலைகாரனும் புதிதாக சேர்ந்த சமையல்காரனும் இருக்கிறார்கள். எவ்வித சந்தேகமும் இல்லாமல் உறவினர்களிடையே சொத்துக்காக போட்டி நிலவுகிறது. ஆக இந்த ஆறு ஏழு கதாபாத்திரங்கள் மாளிகையில் அடிக்கும் கூத்துகளே கதை. கடைசி சில பக்கங்களில் சிதம்பரம் வருகிறார். அவர் யாருக்கு சொத்துகளை கொடுத்தார் என்பது முடிவு. ஒரு முழுநீள நகைச்சுவைக கதைக்கான அனைத்து அம்சங்களுடன் கதை விளங்குகிறது.


கதையின் முதல் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு......




கதை முழுவது விழுந்து விழுந்து சிரிக்கவில்லை எனினும் பல இடங்களில் புன்னகையையும் சில இட்ங்களில் சிரிப்பையும் கொடுக்கிறது இந்த கதை. சித்திரங்களின் தரம் அருமை. ராமுவின் கைவண்ணம் பற்றி ஏற்கனவே தமிழ்வாணன் கதைகளுக்கு வரைந்திட்ட ஓவியங்கள் மூலம் ஒரு சிறப்பான அபிப்பிராயம் இருந்தது. இந்த சித்திரக்கதையை படித்த பின் அந்த அபிப்பிராயம் இன்னும் கூடுகிறது. அவரின் திறமையை தமிழ் பத்திரிக்கைகள் சரியாக பயன்படுத்தி கொண்டார்களா என கூட சந்தேகம் வருகிறது.


கோமதி சுவாமிநாதன
(புகைப்படம் உபயம் - அப்புசாமி இணையதளம்)
அந்தகால பேச்சுவழக்கு, சினிமா மோகம், நாடக மோகம், உடைகள், ஏழை பணக்காரர்கள் உறவு, வாகனங்கள், அரசியல் கமெண்டுகள் என நமது அப்பா, தாத்தாக்கள் காலத்திற்கு ஒரு பயணம் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த கதை. நான் படித்தது தொடர்கதை பைண்டிங் இதழ் என்பதால் அந்த கால விளம்பரங்களையும் மற்றும் சில கட்டுரைகளையும் போனஸாக படிக்க முடிந்தது. இந்த தொடர்கதை கல்கியின் அட்டைபடத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இது அந்த கால கல்கி நிறுவனம் சித்திரக்கதைகளுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது. கோமதி சுவாமிநாதன் - ராமு கூட்டணியில் எத்தனை சித்திரக்கதைகள் வந்துள்ளன எந்த்தெரியவில்லை என்றாலும் தமிழில் ஒரு சிறந்த சித்திரக்கதையை கொடுத்த பெருமையை பெறுகிறது இந்த கூட்டணி.
பதிவை படித்த நண்பர்களே, தவறாமல் உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குறிப்பு : மங்க்கி காமிக்ஸ் பற்றிய பதிவு கூடுதல் ஸ்கேன்களுடன் update செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு

(எவ்வித லாப நோக்கமும் இன்றி சித்திரக்கதையின் சில பக்கங்கள் இங்கே வழங்கப்பட்டு இருக்கின்றன. உர்மையாளர் ஆட்சேபித்தால் இவை நீக்கப்படும்)

10 comments:

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

மற்றுமொரு காமிக்ஸ் படைப்பாளரை தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஆவணப்படுத்தியதற்கு நன்றி!

SIV said...

கருத்திற்கு நன்றி அய்யம்பாளையத்தார் அவர்களே.
தங்களில் வலைதளத்தில் அவ்வப்போது ஓரிரு பதிவுகளையாவது எங்கள் கண்களில் காட்டுங்கள் நண்பரே

King Viswa said...

மீ த ஃபர்ஸ்ட்டு! என்று போட வந்தால் பெரிய Rன் சிஷ்யர் நமக்கு முன்னே வந்து விட்டாரே?

சிவ்,

இந்த தொடருக்கு முன்னாடி வந்த ஜாங்கோ ஜக்கு தொடரையும், பாடுவோம் பாப் மியூசிக் தொடரையும் தேடிப்பிடித்து படிக்கவும், இந்த கதையை விட அவை பிரம்மாதமாக இருக்கும்.

King Viswa said...

// நான் படித்தது தொடர்கதை பைண்டிங் இதழ் என்பதால் அந்த கால விளம்பரங்களையும் மற்றும் சில கட்டுரைகளையும் போனஸாக படிக்க முடிந்தது. இந்த தொடர்கதை கல்கியின் அட்டைபடத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இது அந்த கால கல்கி நிறுவனம் சித்திரக்கதைகளுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது//

இந்த கதைதான் என்றில்லை, அந்த காலத்தில் எந்த படக்கதை முதலில் ஆரம்பித்தாலும், கல்கி இதழில் அது அட்டைப்படமாகவே வரும். நம்ம மாடஸ்டி கதையும் அப்படித்தான். பின்னர் ராமு வரைந்த பல காமிக்ஸ் கதைகளின் முதல் வார ஓவியங்கள் அட்டைப்படங்களில் அலங்காரம் செய்தன.

Rafiq Raja said...

நண்பர் சிவ்,

இன்னொரு கிளாசிக் காமிக்ஸின் அறிமுகம் பட்டையை கிளப்பி இருக்கிறது. ராமுவின் ஓவியங்களில் ஒரு கார்டூன் சிரிப்பு குடி கொண்டிருக்கிறது... நான் ஓவியர் ராமுவை அறிந்து கொண்டது ராணி காமிக்ஸின் அட்டை ஓவியர் என்ற முறையில் தான். அவர் கையெழுத்து இடும் முறையை வைத்து அப்போது அவர் பெயர் ராழி என்று நினைத்து கொண்டிருந்தேன்.

அவர் புகைப்படம் ஏதாவது கிடைத்தால் கண்டிப்பாக பகிருங்கள்.

Rafiq Raja said...

1970 ம் வருடம், 40 காசு.... ஆஹா ஒரு கால இயந்திரம் இருந்திருக்க கூடாதா.... :)

SIV said...

விஸ்வா, சித்திரக்கதைகள் மட்டும் இல்லாது நாவல்கள் தொடர்கதையாக ஆரம்பிக்கும் போதும் அட்டைபடங்களாக பார்த்திருக்கிறேன். உங்களிடம் இது போல் இன்னும் பல கதைகள் கைவசம் இருப்பது பொறாமை கொள்ள வைக்கிறது.
கருத்திற்கு நன்றி.

SIV said...

//அவர் புகைப்படம் ஏதாவது கிடைத்தால் கண்டிப்பாக பகிருங்கள்// ஒரு சிறந்த ஓவியர் பற்றிய தகவல்களும் புகைப்படமும் googleல் இல்லாதிருப்பது வருத்தம் தான்.

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.html

King Viswa said...

#RIP (காமிக்ஸ் கதைகளையும் எழுதிய)நகைச்சுவை எழுத்தாளர் கோமதி சுவாமிநாதன் (95)காலமானார்