Sunday, November 28, 2010

மர்ம வீரன் ராஜராஜ சோழன் (Marma veeran Rajaraja cholan)

வணக்கம் நண்பர்களே. விஜயன் சாரின் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும்  புத்துணரச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது. இந்த மகிழ்ச்சியான தருனத்தில் தஞ்சை நகரில் இருந்து வெளிவந்த ஒரு காமிக்ஸ் முயற்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பெரிய பெரிய வரலாற்று புத்தகங்களை புரட்டி தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இன்று உள்ளது. பள்ளிகளில் புகட்டப்படும் கல்வில் நம் சொந்த இன வரலாறு பற்றி அதிகம் கற்பிக்கப்படுவதில்லை. நெப்போலியன், அசோகா, ஷாஜகான் போன்ற மன்னர்களை விட ராஜராஜ சோழன் மற்றும் கரிகால சோழன் பற்றி நம் மாணவர்கள் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலக போர் பற்றி நமக்கு தெரிந்ததை விட இந்திய - சீன போர் பற்றி குறைவாகவே நமக்கு தெரியும். அவள்ளவு ஏன்? தீரன் சின்ன மலை என்ற தமிழ் வீரன் ஆங்கிலேயர்களை இரண்டு போர்களில் வீழ்த்தி உள்ளான். அவனை பற்றி எந்த பாடபுத்தகத்திலும் சரி எந்த வெகுஜன பத்திரிக்கையிலும் சரி நான் படித்தது கிடையாது (சிறிது காலம் முன் வரை). உங்களுக்கு தெரிந்த சில மாணவர்களிடம் மேற்கண்ட தகவல்கள் பற்றி சில கேள்விகள் கேட்டு பாருங்கள். நாம் நம்முடைய சொந்த கலாச்சாரம் பற்றியும் நம் தமிழ் வரலாறு பற்றியும் எந்த அளவு தெரிந்து வைத்துள்ளோம் என தெரியும். நம்முடைய வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டால் இந்த குறை ஓரளவு தீரும்.

அட்டைபடம்

முகப்பு பக்கம்

 அதே சமயம் நமது ஊடகங்களிலும் தமிழ் மன்னர்கள் பற்றிய கதை, கட்டுரை மற்றும் தகவல்கள் நிறைய வரவேண்டும். தமிழ் மன்னர்கள் பற்றி கொண்டு சேர்க்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்திடவே செய்கின்றன. கல்கியின் படைப்புகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தமிழ்நாட்டின் மன்னர்கள் கால வாழ்க்கை முறை பற்றி பாடப்புத்தகங்களின் மூலம் தெரிந்து கொண்டதை விட கல்கியின் நூல்கள் மூலமே நான் அதிகம் அறிந்து கொண்டேன் என்பதுதான் உண்மை. இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் நூலானது தமிழ் மன்னன் ராஜராஜ சோழனின் பெருமைகளை சிறுவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகும்.
கன்னிதீவு, தங்க கண்ணாடி, ராஜகம்பீரன் போன்ற சித்திரக்கதைகளை வழங்கிய ஓவியர் தங்கம் அவர்களின் துனைவியார் ஓவியர் சந்திரோதயம் அவர்களின் கைவண்ணத்தில் 'மர்ம வீரன் ராஜராஜ சோழன்' உருவாகி உள்ளது. தரமான காகிதத்தில் அற்புதமான அட்டைபடத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2005 லேயெ வந்துவிட்ட இந்த இதழ் இப்போதுதான் கையில் கிடைத்தது. விலை ரு.60
புத்தக விபரங்கள்
முன்னுரை


அணிந்துரை


சோழ அரசு வளமுடனும், பாண்டிய அரசு வீழ்ச்சி அடைந்த நிலையில் இருந்த காலகட்டத்தில் இந்த கதை துவங்குகிறது. சோழ இளவரசி குந்தவைக்கு குறி வைத்து பாண்டியர்கள் தீட்டும் சதி திட்டத்துடன் கதை ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் நாகையில் சோழ இளவரசர் அருள்மொழி ஒரு முக்கியமான கடற்பயணம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் ஆழ்ந்துள்ளார். கடற்கொள்ளையர்களை ஒழித்து தமிழக வாணிபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே அவரது கடற்பயனத்தின் நோக்கம். இந்நிலையில் அவர் பெருமதிப்பு வைத்திருக்கும் புத்த பிட்சுகள் புத்த சிலையை சாவகம், காம்போஜம் போன்ற தீவுகளுக்கு கொண்டு சேர்க்கு புனித பணியையும் இளவரசரிடம் கொடுக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் தன் அக்காவிற்கு ஆபத்து இருப்பதை சோழ நாட்டு ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொள்கிறார். இளவரசர் மாறுவேடத்தில் பழையாறுக்கு பயணமாகிறார். அங்கு தன் சகோதரிக்கு நிகழவிருந்த ஆபத்துகளை களைகிறார். பாண்டிய எதிரிகளை அழிக்கிறார். இது தான் கதை.

கதாபாத்திரங்கள் அறிமுகம்

கதையின் ஆரம்பம் (பாண்டிய ஒற்றர்களின் திட்டம்)
குந்தவை - அருள்மொழி சந்திப்பு

சிறுவர்களை குறி வைத்து கதை புனையப்பட்டிருப்பதால் 'தீவிர' இலக்கிய தாகத்துடன் படிப்பவர்களுக்கு ஏற்ற இதழ் இதுவல்ல. சிறுவர்களுக்கான படைப்பு என்ற வகையில் இது ஒரு மிகச்சிறந்த படைப்பு. சித்திரங்கள் நன்றாக உள்ளன. எடிட்டிங்கில் மட்டும் சிறிது அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது ஒரு சிறிய குறை. ஆசிரியர் கல்கியில் கதாபாத்திரங்களை கொண்டே இந்த கதையில் பாத்திரங்களை படைத்திருக்கிறார். கதை நடைபெறும் காலகட்டமும் பொன்னியின் செல்வன் காலகட்டமே. ஓவியர் மணியம் கொடுத்த உருவங்களிலே கதாபாத்திரங்களை உலாவிடுகிறார் ஆசிரியர் சந்திரோதயம். இந்த புத்தகத்தில் சித்திரக்கதை தவிர 'சித்திரமும் மொழியும்' எனற கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இதில் பழைய சித்திர எழுத்து முறை பற்றியும் இன்ன பிற தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழின் முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகத்தை பற்றியும் கூறுகிறார்கள். பயனுள்ள தகவல்கள். ஆசிரியர் சந்திரோதயம் அவர்கள் ஒரு ஓவிய ஆசிரியர் என்பது இங்கு ஒரு கூடுதல் தகவல். ஆசிரியர்க்கு ஓவியத்திலும் வரலாற்றிலும் ஒரு சேர ஆர்வம் இருப்பது புத்தகத்தில் தெளிவாய் தெரிகிறது. ஆர்வம் மட்டுமே முதலாய் கொண்டு இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளனர் தங்கம்-சந்திரோதயம் தம்பதியினர். அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.

சித்திர எழுத்துக்கள் பற்றிய கட்டுரை

ஆசிரியர் பற்றி

இந்த புத்தகம் இன்னும் ஆசிரியரிடம் இருப்பு உள்ளது. கீழ்கண்ட முகவரிக்கு M.O அனுப்பி இந்த புத்தகத்தை வாங்கி விடலாம். நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால் 'ராஜகம்பீரன்' சித்திரக்கதை புத்தகத்துடன் இதனுடன் வாங்கிட மறந்திட வேண்டாம். M.O அனுப்பி பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் புத்தகம் வாங்குவது தொடர்பான தகவல்களை அவர்களே தெரிவித்து விடுவர். நண்பர்களை இப்போதும் புத்தகம் வாங்கி படித்த பிறகும் நங்களுடைய கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.



தினத்தந்தியில் ராஜகம்பீரன் பற்றிய மதிப்புரை படிக்க
ராஜகம்பீரன் சித்திரக்க்தை பற்றிய முழுமையான பதிவை படிக்க
தினமணியில் தங்கம் தம்பதி பற்றிய கட்டுரை படிக்க


Sunday, November 14, 2010

ரஷ்ய சித்திரக்கதைகள் (Russian comics)

சிறிது நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலை தளத்தில் புத்தக வாசிப்பு பற்றிய ஒரு கட்டுரையில் தன் சிறு வயதில் படித்த படக்கதை ஒன்று பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அந்த பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்
\\\சிறுவயதில் படித்த படக்கதை ஒன்று.

ஒரு பூனை ஒன்று நூல்கண்டை உருட்டிக் கொண்டிருக்கிறது. நூல் உருண்டு உருண்டு போகிறது. பூனை நூலின் பின்னாலே விரட்டி போகிறது. முடிவில் நூல் முடிந்துவிடுகிறது. பூனை நூல் எங்கே போனது என்று புரியாமல் திகைத்து போய் நிற்கிறது. அந்த திகைப்பு அற்புதமானது.இந்த சித்திரக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. எட்டே வண்ணச்சித்திரங்கள். வெறுமையை புரிந்து கொள்ள முடியாத பூனை தான் வாசகனின் மனது.\\\
இதை படித்த உடன் என் மனதில் அட இது போன்ற ஒரு கதையை நாம் எங்கயோ படித்திருக்கிறோமே என்று பட்டது. அப்போதே அடுத்த முறை ஊருக்கு போகும் போது பழைய புத்தகங்களை புரட்டி போட்டாவது இந்த சித்திரக்கதை எதில் வந்தது என பார்த்து அந்த இதழை எடுத்திட வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். அவ்வாறே திபாவளி விடுமுறையில் ஊருக்கு சென்ற போது சில மணி நேர தேடல்களின் முடிவில் அவ்விதழினை கையகப்படுத்தினேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடும் அந்த சித்திரக்கதை மற்றும் அவ்விதழின் அட்டைபடம் இதோ....

அட்டைப்படம்

பூனையும் நூல்கண்டும்

அனேகமாக இந்த புத்தகம் தான் எனக்கு முதன்முதலில் வாங்கி கொடுக்கபட்ட புத்தகம் என எண்ணுகிறேன். இந்த இதழ் ரஷ்யாவின் ராதுகோ பதிப்பகம் இந்தியாவின் நியு சென்சுரி புக் ஹவுஸ் மூலமாக 19வெளியிட்டு இருக்கிறது. அட்டகாசமான அச்சுத்தரம், சிறப்பான சித்திரங்கள், வேடிக்கையான கதைகள் என ஒரு சிறந்த குழந்தைகள் புத்தகமாக திகழ்கிறது.  Off course இன்று இந்த புத்தகங்கள் கிடைப்பதில்லை.
இதே இதழில் இடம்பெறும் வேறு சில சித்திரக்கதைகள். சித்திரக்கதைகளுக்கான தலைப்புகள் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

தவளைகளின் அட்டகாசம்


எங்கே என் தொப்பி

வால் இழுக்கும் போட்டி


இந்த எளிய சித்திரக்கதைகள் எப்படி இருக்கின்றன?? படித்துவிட்டு பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.
அப்புறம் சொல்ல மறந்து விட்டேன்.  இரத்தப்படலம் கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னை போன்ற கிடைக்காதோர்க்கு சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்

Update on 09/01/12 :

Reprint of the above book is available in NCBH. With different coverpage. Price-Rs 60/-. For more details see here.