Tuesday, November 15, 2022

வாதநா மரம் (வாதநாராயணன் மரம்)

 

வாதநா மரம் (வாதநாராயணன் மரம்) 

நாமக்கல், சேலம் போன்ற கொங்கு பகுதிகளில் மிக சாதரணமா வளர்க்கப்படும்/காணப்படும் வாதநா மரம் (அறிவியல் பெயர் - Delonix elata) இன்று அப்பகுதிகளிலேயே மிக குறைந்து காணப்படுகிறது. நம் மண்ணின் மரமான இம்மரம், வளர்ப்பதற்கு மிக எளிதான ஒன்றாகும்.

நன்கு வளர்ந்த வாதநா மரங்கள்


பெருங்கொன்றை, குல்முகர், சூபாபுல் போன்ற அயல் மரங்களுக்கு மாற்றாக ஏன் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். (இந்த அயல் மரங்களை இன்னும் சீமை வாதநா மரம் என்று அழைக்கும் வழக்கம் கொங்கு பகுதிகளில் உள்ளது)

1. இது நம் மண்ணின் மரம். சூபாபுல் போன்று அதிகமாக பரவி பிற தாவரங்களை வளரவிடாமல் செய்யும் சிக்கல் இல்லை.

2. வறண்ட பகுதிகளுக்கும் தண்ணீர் வளம் உள்ள பகுதிகளுக்கும் ஏற்றது. நட்டு வைத்த பின் சில காலங்களுக்கு தண்ணீர் ஊற்றினால் போதும். புன்செய் காடுகளில் பரவலாக இம்மரம் இருப்பதே வறண்ட பகுதிகளுக்கு ஏற்ற மரம் என்பதற்கு சான்று. 

3.வளர்ந்த மரங்களில் இருந்து வெட்டப்பட்ட கிளைகளை மண்ணில் ஊன்றுவது மூலம் மிக எளிதாக நடவு செய்யலாம். (போத்து நடவு)

4. இலைகள் மண்ணுக்கு சிறந்த தழை சத்தாக விளங்குகிறது. 

5. இலைகள் கீரையாக சமைத்து சாப்பிட்டால் வாதம் உள்ளிட்ட நோய்கள் தீருவதாக கூறுகிறார்கள்.(இதன் மருத்துவ பலன்கள் என்று ஏராளமான தகவல்கள் இணையத்தில் வருகின்றன. அவற்றின் உண்மைத்தண்மை அறிந்து பின்பற்றவும். எப்படியிருந்தாலும் ஆரோக்கியமான கீரை என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது)

6. உயிர் வேலிக்கு பொருத்தமான மரம். 8~9 அடிக்கள் வேலியாகவும் அதற்கு மேல் உள்ள கிளைகள் பரந்து  விரிந்து குடை போல நிழல் தரும் அமைப்பாக உள்ளது.

உயிர் வேலியாக வாதநா மரம் 


7. மிக வேகமாக வளரக்கூடிய மரம். (ஒரு வருடத்தின் வளர்ச்சியை படத்தில் காணவும்) 


வாதநா மரம் - ஒரு வருட வளர்ச்சி

வளர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:

1.பெருங்கொன்றை, குல்முகர் போன்று அதிக  பூக்கள் பார்க்க முடியாது.   அழகான  பூக்களை அதன் பூக்கும் காலத்தில் பார்க்கலாம்

வாதநாரயணன் பூக்கள்


2. வறண்ட பகுதிகளில் வளரும் மரங்களில் இலை உதிர் காலங்களில் அதிக நிழல் இருக்காது. 

3. பெரும்பாலும் நர்சரிகளில் கிடைப்பதில்லை. ஏற்கனவே இருக்கும் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வளர்க்கலாம்.