Friday, March 23, 2012

தமிழ்ச் சித்திரக்கதைகள் ஒரு அறிமுகம்


மொழிமாற்றம் இல்லாமல் தமிழ் மொழியிலேயே உருவாக்கப்படும் சித்திரக்கதைகளைத் தமிழ்ச் சித்திரக்கதைகள் எனக் கொள்ளலாம். முதல் தமிழ்ச் சித்திரக்கதை எது என்ற குழப்பம் காமிக்ஸ் குறித்து ஆய்வு செய்யும் அனைவரிடமும் காணப்படு கிறது. இது குறித்து சில கூற்றுகள்:


1. ஆனந்த விகடன் (17-02-2010) இதழின் பொக்கிஷம் பகுதியில் தமிழின் முதல் சித்திரக்கதை பற்றிய குறிப்பில் இவ்வாறு கூறப்படுகிறது. “தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன் முறையாகப் படக்கதை இந்த ஆண்டு (1956) முதல் விகடனில் வெளியாகியுள்ளது. “ஜமீன்தார் மகன்” என்னும் அக்கதைக்குப் படங்கள் வரைந்தவர் மாயா”.

2. தமிழம் ம.நடேசன் (பொள்ளாச்சி நசன்) அவர்கள் தமிழின் சிறுபத்திரிகைகள், மாத, வார இதழ்களைத் தமிழம் என்னும் இணையப் பக்கத்தில் ஆவணப்படுத்தி வருகிறார். அதில் 1950இல் வெளியான ‘சித்திரக்குள்ளன்’ என்னும் சிறுவர் இதழ் பற்றி இவ்வாறு கூறுகிறார். கேலிச்சித்திரக் கலைஞர் சந்தனு நடத்திய இந்த இதழில் “வேதாள உலகத்தில்” என்ற கேலிச்சித்திரத் தொடர்கதை இடம்பெற்றுள்ளது. 1948இல் வெளிவந்த ‘டமாரம்’ இதழின் முதல் பக்கமே சித்திரக்கதை ஒன்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. எனவே ஆனந்தவிகடனின் கூற்று தவறு என்பதையும், அதற்கு முன்பே தமிழில் சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. எனினும் முதல் சித்திரக்கதை எது என்பதில் சிக்கல் நிலவுவதையும் அறியலாம்.

தமிழ்ச் சித்திரக்கதைகள் ஒரு பகுப்பு

தமிழ்ச் சித்திரக்கதைகளை வெளியீட்டின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

1. மாத, வார இதழ்களின் தொடர்கதைகளாக இடம் பெற்றவை.

2. தனிச்சித்திரக்கதை இதழ்களில் இடம்பெற்றவை.

3. சிறுவர் இதழ்களில் இடம்பெறும் கதைகள்.

4. பதிப்பகங்களிலிருந்து புத்தகங்களாக வெளிவந்தவை.

மாத, வார இதழ்களில் தொடர்கதைகளாக இடம்பெற்றவை

ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, குங்குமம் ஆகிய பத்திரி கைகளின் பழைய இதழ்களில் தொடர்ச்சியாகச் சித்திரக்கதை கள் வெளியிடப்பட்டன. பெரியவர்களும் சிறியவர்களும் படிக்க ஏதுவான கதை அம்சங் களையே இக்கதைகள் கொண் டிருந்தன. வாண்டுமாமாவின் பல படைப்புகள் இவ்விதம் உருவாக்கப் பட்டவையே. இவற்றில் வெளியான பெரும் பாலான கதைகள் 20-30 வாரங்களில் முடியக்கூடியவை. இவற்றில் வெறும் துப்பறியும் கதைகள்- சிறுவர் கதைகள் மட்டுமில்லாது, காதல் கதைகள், குடும்பப் பிரச்சனைகள், அறிவியல் புனைவுகள் எனப் பலவித ரசனைகளில் சித்திரக் கதைகள் வெளிவந்தன. அந்த காலகட்டத்தின் சுவடுகள், உடையலங்காரங்கள், பேச்சு வழக்கு, அக்கால சமூகப் பிரச்சனைகள் என அனைத்தையும் பிரதிபலிக்கும் கதைகளாக இவை விளங்குகின்றன. பெரும்பாலும் சித்திரக் கதைகள் இதழ்களில் வரும்போது அதன் படைப்பாளி பற்றிய குறிப்புகள் அதில் இடம்பெறுவதில்லை (உ.ம்: குமுதம்). எனினும் சில இதழ்கள் அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத் துள்ளன (உ.ம்: கல்கி). தமிழின் பல தரமான சித்திரக்கதைகள் இந்தப் பகுப்பிலேயே அடங்கும்.

தொடர்கதைகளாக வெற்றிபெற்ற பல கதைகள் முழுநீள சித்திரக்கதைகளாகவும், பதிப்பக வெளியீடுகளாகவும் வந்துள் ளன. இத்தகைய கதைகளை முக்கிய அங்கமாகக் கொண்ட இதழ்களில் ‘பார்வதி சித்திரக்கதைகள்’ முக்கியமான இதழாகும். “ஓநாய்க் கோட்டை”, “கனவா நிஜமா”, “அவள் எங்கே?”, “டயல் 100” போன்ற கதைகள் சித்திரத் தொடர்கதை களாக வந்தபோதும், பிற்காலத்தில் பார்வதி சித்திரக்கதை களில் முழுநீள கதைகளாக வந்தபோதும் மாபெரும் வெற்றி பெற்றன. கல்கியில் அக்கதைகளைச் சிறுவர்களாகப் படித்த வாசகர்கள் பிற்காலத்தில் பார்வதி சித்திரக்கதையில் பெரியவர்களாகிப் படித்து தங்களது சிறுவயது நினைவுகளுக்குச் சென்றனர்.

தமிழ்நாட்டில் பொதுவாகச் சித்திரக்கதைகள் மீதான பார்வை அவை குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை மற்றும் குழந்தைகளால் மட்டுமே விரும்பிப் படிக்கப் படுகின்றன என்பதாகும். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் 1960-1980 வரை வெளியான சித்தரக்கதைகளை அவர்கள் படிப்பார்களேயானால் இந்தப் பார்வையைக் கண் டிப்பாக மாற்றிக்கொள்வார்கள். பல குடும்பக் கதைகளையும், காதல் கதைகளையும், சமூகக் கதைகளையும் இந்தவரிசையில் பார்க்கலாம். அவள் எங்கே (கௌசிகன்), சந்திரனே சாட்சி (கௌசிகன்), ‘கண்ணாடி மாளிகை’ ராஜயோகம் போன்ற கதைகள்; சித்திரக்கதைகள் சிறுவர்களுக்கானது என்ற கூற்றை தவறானது என்று நினைக்க வைக்கின்றன. இவற்றில் பெரும் பாலன கதைகள் நடுத்தர மக்களின் வாழ்வியலோடு தொடர்பு டையதாகவும், சரித்திரக்கதைகளாகவும், அறிவியல் புனைவுகளாகவும் வெளிவந்துள்ளன.


தமிழ் சித்திரக்கதை இதழ்கள்

தமிழ்ச் சித்திரக்கதைகளில் பெரும்பாலானவை முழுநீள சித்திரக்கதை இதழ்களில் இடம்பெற்றவையாகும். வாண்டுமாமா, முல்லை தங்கராசன், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். இவ்வகை இதழ்கள் பல வெளிவந்தபோதிலும் அவற்றில் வெற்றிபெற்றவை மிகச் சில மட்டுமே. பார்வதி சித்திரக்கதைகள் (வாண்டுமாமா), மதி காமிக்ஸ் (முல்லைத் தங்கராசன்), பொன்னி காமிக்ஸ் (ஸ்ரீகாந்த், விவேகா) ஆகிய காமிக்ஸ்கள் ஓரளவு வெற்றிபெற்றன. ஆனால் மொழிபெயர்ப்புச் சித்திரக் கதை இதழ்களான ராணிகாமிக்ஸ், முத்து, லயன் ஆகியவற்றின் வர்த்தக வெற்றியுடன் ஒப்பிடுகையில் தமிழ்ச் சித்திரக்கதை களின் வெற்றி மிகச்சிறியது ஆகும்.

தரமில்லாத கதைகள் சுமாரான சித்திரங்கள், மோசமான விநியோக முறை ஆகியவையே இவ்விதழ்களின் தோல்விகளுக்குக் காரணம். இக்கதைகள் தமிழில் உருவாக்கப்பட்டாலும் ஆங்கிலத் துப்பறியும் சித்திரக் கதைகளின் சாயலிலேயே படைக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணம். வெகுசில கதைகளே இந்திய-தமிழகப் பின்னணி யில் நடைபெறுவதாகப் படைக்கப்பட்டிருந்தது. வாண்டுமாமா கதைகள் அனைத்தும் நம்நாட்டு கலாச்சாரத்தை அடிப் படை யாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய கால கட்டத்தில் இவ்வகை இதழ்கள் எதுவுமே வருவதில்லை. இறுதி யாக வந்த இதழ் ‘தேசமலர் காமிக்ஸ்’ (2008) ஆகும். அதற்கு முன் ‘தினபூமி காமிக்ஸ்’ 2004 வரை தொடர்ச்சி யாக வந்து பிறகு நின்றுபோனது. பூவிழி காமிக்ஸ், தேசமலர் காமிக்ஸ் போன்ற இதழ்கள் கோடை விடுமுறையின்போது மட்டுமே வெளிவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தன.


சிறுவர் பத்திரிகைகளின் சித்திரக்கதைகள்

சித்திரக்கதைகள் சிறுவர்களுக்கானவை என்ற எண்ணம் இங்கு மேலோங்கி இருப்பதால் சிறுவர் பத்திரிகைகளில் சித்திரக்கதைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இங்கும் நம் நினைவிற்கு முதலில் வருவது வாண்டுமாமாவின் படைப்புகளே ஆகும். சமத்துச்சாரு, குஷிவாலி ஹரிஷ், பலே பாலு போன்ற பாத்திரங்கள் முதன்முதலில் இடம்பெற்றது கோகுலத்தில் தான். 1948இல் வெளிவந்த டமாரம் என்ற சிறுவர் இதழின் அட்டைப்படத்தை அலங்கரிப்பதே ஒரு சித்திரக்கதைதான். அதுபோல் 1950இல் வெளிவந்த சித்திரக் குள்ளன் இதழில் ஓவியர் சந்தனுவின் காட்டுச்சிறுவன் கண்ணன் என்னும் சித்திரத் தொடர்கதையும், வேதாள உலகத்தில் விச்சு என்னும் சித்திரச் சிறுகதையும் இடம்பெற்றுள்ளன. கண்ணன், அணில்மாமா, ரத்தினபாலா, கோகுலம், பூந்தளிர், தினமலர்-சிறுவர்மலர், தினத்தந்தி-தங்கமலர், தினபூமி-சிறுவர்பூமி, தினமணி-சிறுவர்மணி, பூந்தளிர், சுட்டிவிகடன், பாலமித்ரா, பாப்பாமலர் ஆகியவற்றைத் தமிழில் வெளிவந்த முக்கிய சிறுவர் பத்திரிகைகளே எனக் கூறலாம். இவற்றோடு சம்பக், அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்கள் மொழிபெயர்ப்பு பத்திரிகைகளாக இன்னும் வெளிவருகின்றன.

மேற்கூறிய சிறுவர் பத்திரிகைகளில் பல காலங்களில் பல வடிவங்களில் பல தரங்களில், பல படைப்பாளிகளினால் பல சித்திரக்கதைகள் வந்திருக்கின்றன. தொடர் சித்திரக்கதைகள், 4 பக்கக் கதைகள், ஒரு பக்கக் கதைகள், 16 பக்கக் குறுங்கதைகள் எனப் பல வடிவிலான சித்திரக்கதைகளை இந்தச் சிறுவர் பத்திரிகைகளில் பார்க்கலாம். கோகுலத்தில் வாண்டுமாமா வின் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. 1985-90களில் கோகுலத்தில் கல்கி அவர்களின் புதல்வியான ஆனந்தி அவர் களின் கைவண்ணத்தில் ஒவ்வொரு இதழிலும் 16 பக்க சித்திரக் கதை ஒன்று வெளிவரும். ஒவ்வொரு கதையும் புராண, சரித்திர பின்னணி கொண்டதாக இருக்கும். அக்கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர் வினு.

பூந்தளிர், தினத்தந்தி-தங்கமலர், தினமலர்-சிறுவர்மலர் ஆகிய இதழ்களில் நேரடி தமிழ்ச் சித்திரக்கதைகளைவிட வடநாட்டில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சித்திரக்கதை கள் அதிகம் வெளிவந்தன. மற்ற வகைச் சித்திரக்கதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தச் சிறுவர் சித்திரக்கதைகளுக்கு உண்டு. ஆம் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்வழி சித்திரக்கதைகள் இவை மட்டும்தான்.


பதிப்பக தமிழ்ச் சித்திரக்கதைகள்

வார, மாத இதழ்களாக அல்லாமல் பதிப்பகங்கள் மூலமாக வெளியிடப்படும் சில சித்திரக்கதைப் புத்தகங்களும் உண்டு. வானதி பதிப்பகம், மணிமேகலை பிரசுரம் ஆகிய பதிப்பகங் கள் சில சித்திரக்கதைகளை வெளியிட்டுள்ளன. பதிப்பகங்க ளால் வெளியிடப்படும் சித்திரக்கதைகளில் பல ஏற்கனவே ஏதாவது வார, மாத இதழ்களில் வந்தவையாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஓவியர் தங்கம் அவர்களின் “இராஜகம்பீரன்”, சந்திரோதயம் அவர்களின் “மர்மவீரன் ராஜராஜசோழன்” அமுத நிலையத்தின் ‘புராண சித்திரக்கதை கள்’ போன்றவை இதில் அடங்கும்.

தமிழ்ச் சித்திரக்கதைகளை வெளியிட்ட தமிழ்க்காமிக்ஸ் சிலவற்றையும், அவற்றில் பங்குகொண்ட படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளும் கீழே தரப்பட்டுள்ளன. (இங்கு குறிப்பிட்டுள்ள படைப்பாளிகள் தவிர வேறுசில படைப்பாளிகளின் பங்கும் அந்தச் சித்திரக்கதைகளில் இருக்கும்)

மதி காமிக்ஸ் - முல்லை தங்கராசு, செல்லம், பார்வதி சித்திரக்கதை - வாண்டுமாமா, செல்லம், ரமணி, பாப்பா காமிக்ஸ் - வாண்டுமாமா, பொன்னி காமிக்ஸ் - ஸ்ரீகாந்த், விவேகா, பாலமோஹன், மலர் காமிக்ஸ் - ஸ்ரீகாந், பூவிழி காமிக்ஸ் - ஐஸ்வர்யா, ஸ்ரீகாந்த், பிரைட் மூன் காமிக்ஸ் - ஐஸ்வர்யா, ஸ்ரீகாந்த், தேசமலர் காமிக்ஸ் - ஐஸ்வர்யா, ஸ்ரீகாந்த், தினபூமி காமிக்ஸ் - ஸ்ரீகாந்த், அமித் காமிக்ஸ் (சங்கர்லால்) - தமிழ்வாணன், புஜ்ஜாய், ராமு, மாயாவி காமிக்ஸ் - முல்லை தங்கராசன், செல்லம், சக்தி காமிக்ஸ் - முல்லை தங்கராசன், மங்க்கி காமிக்ஸ் - ராஜ்பிரசாத், புஜ்ஜாய், மாருதி, மலர்மணி காமிக்ஸ் - பொன்னி காமிக்ஸ் குழுமம், சித்தன் காமிக்ஸ் - மாசிலா, ரேகா காமிக்ஸ் - மனோகரன், ஜெயராஜ், சூர்யா காமிக்ஸ், வாசு காமிக்ஸ், ராஜா காமிக்ஸ்.
மாற்றுவெளி ஆய்விதழ் சித்திரக்கதை சிறப்பிதழில் இடம் பெற்ற கட்டுரை. இதர கட்டுரைகளை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

நன்றி - இணைய நண்பர்கள், மாற்றுவெளி ஆய்விதழ், சு.பிரபாவதி, கண்ணன்.எம், கீற்று இணையதளம்.