Saturday, March 20, 2010

இன்றைய தமிழ் பத்திரிக்கைகளில் காமிக்ஸ் - ஒரு ரவுண்ட் அப்

சமீப காலங்களில் தமிழ் வெகுஜன பத்திரிக்கைகள் சித்திரக்கதைளுக்கு முக்கியத்துவம் எதும் கொடுப்பது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் தமிழின் முக்கியமான பத்திரிக்கைகளில் காமிக்ஸ்கான இடங்கள் பற்றி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு.

குமுதம்:

தமிழ் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்கள் என்று நம்பப்படும் ஆனந்த விகடன் மற்றும் குமுதம் இதழ்களில் சித்திரக்கதைகளுக்கான இடம் மிகவும் குறுகியது தான். காமிக்ஸ் வடிவம் என்பது நகைச்சுவை துணுக்குகளுடன் நின்றுவிடுகிறது. குமுதத்தில் ஓவியர் பாலாவின் கார்டூன்கள் மிகவும் கலக்கலாக இருக்கிறது. தனி கார்டூன்கள் 'அடடே மதி' மாதிரியான ஸ்டைலில் இருக்கிறது. நமது அரசியல்வாதிகளின் முகங்கள் இவரது தூரிகையில் படாதபாடுகிறது. குறிப்பாக கலைஞர் அவரகளை வரைய ஸ்பெஷல் பயிற்சி எடுத்திருப்பார் போல. பல விதமான முக பாவனைகளில் பிரமாதப்படுத்துகிறார். தலையங்க கார்டூன் இல்லாமல் நான்கு பக்க நய்யாண்டி சித்திரக்கதை ஒன்றும் வாரவாரம் இடம் பெறுகிறது. தற்போது ஒரு சாமியாரும் அவரது சிஷ்யரும் அரசியல் நிகழ்வுகளை கலாய்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை செந்தில்-கவுண்ட்மணி வைத்து இந்த நய்யாண்டி சித்திரக்கதை ஓடும். இங்கும் செந்திலை பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் ஓவியங்கள்தான் ஹை-லைட். ஓவியர் பாலாவின் சித்திரங்கள் காமிக்ஸ் வடிவத்திற்கு நன்கு பொருந்துகிறது. ஏதேனும் முழுநீள சித்திரக்கதைக்கு அவர் ஓவியம் வரைந்தால் நிச்சியம் ஹிட் தான். மற்றபடி குமுததில் சித்திரங்களுக்கான இடம் ரொம்ப குறைந்துவிட்டது.

(இந்த சாக்கில் தமிழ் காமிக்ஸ் வலைபக்கங்களில் முதன்முறையாக சுவாமி நித்தியானந்தா பற்றிய சித்திரக்கதை வெளியிடப்பட்டு உள்ளது.)




ஆனந்த விகடன்:
நகைச்சுவை துணுக்குகளுக்கு புகழ்பெற்ற விகடனில் இன்னமும் நிறைய நகைச்சுவை துணுக்குகள் வெளியிடப்படுகிறது. அதிலும் பொக்கிஷம் பகுதியில் வரும் நகைச்சுவை துணுக்குகள் நன்றாக இருக்கிறது. இங்கு காமிக்ஸ் வடிவில் இருக்கும் ஒரே பகுதி நய்யாண்டி சித்திரக்கதை தான் (ஓவியர் - கண்ணா). இங்கும் இந்த வாரம் சுவாமி நித்தியானந்தா ஸ்பெஷல் தான். மதனின் ஓவியங்கள் ஆங்காங்கே தென்படுகிறது. விகடனில் தொடர்கதை மற்றும் சிறுகதைகளுக்கான சித்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. ஸ்யாம், அரஸ் போன்றவர்களின் கைவண்ணம்


செய்திதாள்கள்

தினத்தந்தி:
தினத்தந்தி - சித்திரக்கதை - சிந்துபாத். இக்கதை பற்றி அய்யபாளைத்தாரின் தளத்தில் முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். தினத்தந்தி இலவச இணைப்பில் சிறுகதை மற்றும் தொடர்கதைகளுக்கு சிறப்பான ஓவியங்கள் தென்படுகின்றன. பொதுவாக தினமணி, தினமலர் மற்றும் தினகரன் ஆகிய பத்திரிக்கைகளின் சிறுகதை மற்றும் தொடர்கதைகளுக்கு ஓவியங்கள் நன்றாக இருக்கிறது. தினத்தந்தி - தங்கமலரரில் மூன்று சித்திரக்கதை தொடர்கள் வெளிவருகிறது. இதில் இரண்டு தொடர்கள் Tinkle தமிழாக்கம் என்று எண்ணுகிறேன்.
 
தங்கமலர் சித்திரக்கதைகள்
 
தினமணி:
தினமணியில் வெளிவரும் அடடே மதி எப்போதும் என் all time favorite ஆகும். தினமணி - சிறுவர் மணி இதழும் சித்திரக்கதைகளுக்கு சிறப்பான பங்களிப்பை செய்து வருக்கிறது. 5 சித்திரக்கதைகளை வெளியிடும் சிறுவர்மணியில் 32 பக்கங்களில் 16 பக்கங்கள் சித்திரக்கதைகளால் நிரம்பி உள்ளது. இதில் அறிவியல் அறிஞர்கள் பற்றிய ஒரு அருமையான சித்திரத்தொடரரும் அடங்கும். (கதை, சித்திரம் - காலெப்). அலிபாபா +40 சித்திரத்தொடரும் சிறப்பான சித்திரம் மற்றும் கதையமைப்புடன் வெளிவருகிறது. (கதை, சித்திரம் - விஷ்னு)



சிறுவர்மணி சித்திரக்கதைகள்


தினமலர் - சிறுவர்மலர்:
இரண்டு சித்திரக்கதை தொடர்கள் இடம் பெற்றுள்ளது. ACK தமிழாக்கம் போல் தெரிகிறது.

 காலைக் கதிர்:
தினமலர் பத்திரிக்கையின் நகல் போல் வெளிவரும் காலைக்கதிர் நாளிதழில் தினசரி காமிக்ஸ் தொடர்கதை வெளியிடப்படுகிறது. தற்போது தெனாலிராமன் பற்றிய காமிக்ஸ் தொடர்கதை வந்து கொண்டு இருக்கிறது. காலைக்கதிரின் சிறுவர் இணைப்பிலும் சில சித்திரக்க்தைகள் வெளிவருகின்றன. இவையும் தினமலர் பாணியிலேயே உள்ளன. (ஸ்கேன்கள் வரைவில்)
ஆன்மீகப்பத்திரிககைகளான சக்தி விகடன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆகிய பத்திரிக்கைகளிலும் சித்திரக்கதை தொடர் வெளிவருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயமில் வரும் சித்திரக்கதைகள் கதைமலரில் வெளிவரும் கதைகளின் மூலம் ஆகும்.
 
ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - கதை1

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் - கதை2


வாரபத்திரிக்கைகளில் வரும் தொடர்கதை சித்திரங்களில் ஒரு சில உங்கள் பார்வைக்கு.... (வரிசை - 1,2 - விகடன், 3 - குடும்ப மலர், 4 - குங்குமம்)



வயாகரா தாத்தாவிற்காக 'குடும்ப' பத்திரிக்கையான குமுதத்தில் வெளிவந்த ஒரு படம். இதுவும் காமிக்ஸ் வடிவம் தானே.. (இதற்கு வசனம் எழுதிய 'இலக்கியவாதி' யாரென்று தெரியவில்லை)



பல சித்திரக்கதைகளை தமிழ் மொழிக்கு தந்த கல்கி வார இதழில் தற்போது எந்த சித்திரக்கதையும் வருவதில்லை என்பதுதான் சோகம்.

சத்தி விகடனில் வெளிவந்த சித்திரக்கதைகள் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்திருந்தோம். தற்கால கோகுலம், சுட்டி போன்ற சிறுவர் பத்திரிக்கைளில் வரும் காமிக்ஸ் பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம் 

உங்களுக்கு தோன்றும் கருத்துகளை தெரிவித்துவிடுங்களேன்..

Friday, March 5, 2010

சி.ஐ.டி சிங்காரம் IN டயல் ஒன் நாட் நாட் (CID Singaram)

சி.ஐ.டி சிங்காரம் - ஒரு அறிமுகம்

வாண்டுமாமா படைத்த பல கதாபாத்திரங்களில் என்னை கவர்ந்த ஒரு கதாபாத்திரம் சி.ஐ.டி சிங்காரம் ஆகும். மேலைநாடுகளின் ஷர்லக் ஹோம்ஸ் போன்ற துப்பறியும் கதாபாத்திரங்கள் அழியா புகழுடன் விளங்குவதற்கு காரணம் கதைகளின் விறுவிறுப்பும் சஸ்பென்ஸுமே ஆகும். அத்தகைய ஒரு கதாபாத்திரம் தமிழில் இல்லை என்று வருத்தபடுபவர்கள் வாண்டுமாமாவின் சி.ஐ.டி சிங்காரம் கதைகளை படிக்கலாம். மேலை நாட்டு துப்பறியும் கதைகளில் இருக்கும் அனைத்து விஷயங்களை உள்ளடக்கி அருமையக இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து உள்ளார் வாண்டுமாமா. ஒன்று மட்டும் எனக்கு நிச்சியமாய் தெரியவில்லை. ஜெய்சங்கர் இந்த கதாபாத்திரத்தை பார்த்து தனது படங்களுக்கு பெயர் வைத்தாரா அல்லது ஜெய்சங்கர் பார்த்து வாண்டுமாமா இந்த பெயர் வைத்தாரா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் நமது பேச்சுவழக்கில் சி.ஐ.டி சிங்காரம் மற்றும் சி.ஐ.டி சங்கர் போன்ற பெயர்கள் வழக்கமான ஒன்றாக போய்விட்டது. (C.I.D - Criminal Investigation Department)
 


  பார்வதி சித்திரக்கதை இதழின் 12வது இதழாக வெளியிடப்பட்டது டயல் ஒன் நாட் நாட் (Dial 100). 12 சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த தொகுப்பில் அனைத்து கதைகளின் வடிவமும் ஒன்றே. சென்னையில் நடக்கும் சிறு சிறு குற்றங்களை சிங்காரம் விசாரித்து சரியான குற்றவாளியை பிடிப்பதே அனைத்து கதைகளின் பொதுவான வடிவம். இந்த சாதாரண கதையமைப்பில் வாண்டுமாமா புகுத்திய புதுமை(தமிழில்) வாசகர்களின் மூளைக்கு வேலை கொடுப்பது. கதையில் ஆங்காங்கே சில வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் சிறிது யோசித்து விடைகளை யூகிக்க வேண்டும். இந்த யுத்தியால் சதாரண கதை கூட விறுவிறுபடைகிறது. லயன் வாசகர்களுக்கு இந்த யுத்தி 'ஜார்ஜ் நோலன்' மற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் (ட்ரேக்?? பெயர் மறந்து விட்டது) மூலம் ஏற்கனவே பழக்கம் தான் இருந்தாலும் தமிழ் படைப்பில் இத்தகைய விஷயத்தை பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கதை உங்கள் பார்வைக்கு...






காமிக்ஸ் கதைகளில் லாஜிக் என்பது அவ்வளவாக தேவையில்லை எனினும் துப்பறியும் கதைகளுக்கு ரொம்ப முக்கியம். இந்த கதைகளில் லாஜிக் ஓட்டைகள் மிக மிக குறைவு. ஆனால் இவ்வளவு புகழ் பெற்ற சி.ஐ.டி ஏன் ஜேப்படி திருடர்கள் போன்றவர்களையே வளைத்து வளைத்து பிடிக்கிறார் என்பது தான் புரியவில்லை. 'லம்ப்'பாக எதையாவது பிடிக்க வேண்டாமா. ஷர்லக் ஹோம்ஸ் கதைகளில் வாட்ஸன் போல பாலு எனற உதவியாளர் உள்ளார். இவர் சும்மா பேச்சுதுணைக்கு மட்டும் தான் போல. வேறு எதுவும் உருப்படியாக செய்வதாக தெரியவில்லை. எப்பிடி இருப்பினும் தமிழ் சித்திரக்கதைகளில் ஒரு வித்தியாசமான, சுவையான மற்றும் தரமான ஒரு கதையை கொடுத்த வாண்டுமாமாவிற்கு நன்றிகள். வழக்கமாக ஒருவர் 60 பக்க காமிக்ஸ் கதையை 60 நிமிடங்களில் படித்தால் இந்த கதையை படிக்க கண்டிப்பாக 80 நிமிடங்களாவது ஆகும். காரணம் வாண்டுமாமா உங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதுதான்.


ரமணி
இந்த கதைக்கு ஓவியம் ரமணி. இதுபோன்ற துப்பறியும் கதைக்கு நுணுக்கமான ஓவியங்கள் மிக அவசியம். அதை சிறப்பாக செய்திருக்கிறார் ரமணி. சிறு சிறு விஷயங்களை கூட தெளிவாக வரைந்துள்ளார். வாண்டுமாமா - செல்லம் கூட்டணிக்கு இனையான கூட்டணி வாண்டுமாமா - ரமணி கூட்டணியாகும். எழுத்துகளும் மிக அழகாக இருக்கிறது. ரமணி பற்றிய மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். அட்டைபடம் சுப்பு எனபவரால் வரையப்பட்டிருகிறது.

சி.ஐ.டி சிங்காரம் கதைகள் எழுத்து கதை வடிவில் பூந்தளிர் இதழில் வந்துள்ளது. இதே கதைகளை வானதி பதிப்பகம் முழு புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்களில் சித்திரங்கள் இல்லாதது பெறும் குறை. நண்பர் விஸ்வா சி.ஐ.டி சிங்காரமின் கல்கி இதழ் அவதாரம் பற்றி தனது பதிவில் கூறி உள்ளார்.





வாண்டுமாமா வேறுசில துப்பறியும் கதாநாயகர்களையும் உருவாகியுள்ளார். அதை பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போம்.

பின்குறிப்பு :
1. கூடுதல் தகவல்களுடன் அமுத நிலையத்தின் புராண சித்திரக்கதைகள் பதிவு update செய்யப்பட்டுளது. படிக்க இங்கே சொடுக்கவும்
பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை கண்டிப்பாக தெரிவிக்கவும்