Sunday, June 19, 2011

தொந்தி பூதமும் மந்திர நாயும் (Tamil children magazines)

உங்கள் அப்பா சிறுவயதில் படித்திட்ட சிறுவர்கள் இதழ்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். ஆனால் நமது தாத்தா காலத்தில் அதாவது சுதந்திர அடையும் முன்பும் அதன் பிறகு சிறிது காலங்களிலும் சிறுவர் இதழ்கள் எப்படி இருந்தன?? அதை தெரிந்து கொள்ள உங்களுக்கு இந்த பதிவு உதவக்கூடும். இணையத்தில் தமிழம் ம.நடேசன் அவர்கள் ஆவணப்படுத்தி உள்ள தமிழ் பத்திரிக்கைகள் பற்றிய குறிப்புகளில் இருந்து ஒரு சில துளிகள் இங்கே....

தமிழம் ம.நடேசன் - ஒரு அறிமுகம்:


பொள்ளாச்சி நசன் என்று அழைக்கப்படும் திரு ம.நடேசன் அவர்கள் நடத்திடும் தமிழம் எனும் இணையப்பக்கத்தில் வெகு காலத்திற்கு முன்பு வந்த தமிழ் மாத, வார பத்திரிக்கைகள் பற்றிய தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. நம் அப்பா, தாத்தா காலங்களில் பத்திரிக்கை உலகம் எப்படி இருந்ததென்பதை அறிய தமிழம் பக்கத்திற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரவும். இவருடை பத்திரிக்கைகளின் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.  தமிழம் பக்கத்தில் இருக்கும் சில சிறுவர் பத்திரிக்கைகளின் அட்டைபடமும் தகவல்களும் உங்கள் பார்வைக்கு. இதற்கு பிறகு இந்த பதிவில் வரும் தகவல்களும் படங்களும் தமிழம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

சித்திரக்குள்ளன் (1932)


சித்திரக்குள்ளன் : ஆசிரியர் - கேலிச்சித்திரக் கலைஞர் சந்தனு. சிறுவர் இதழ். இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் இது. சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு எழுதிய மலைவீடு தொடர்கதை, காட்டுச் சிறுவன் கண்ணன், வேதாள உலகத்தில் என்கிற கேலிச்சித்திரத் தொடர்கதை, குள்ள மாமாவைக் கேளுங்கள் என்கிற வினாவிடைப் பகுதி, அறிவுப் போட்டிகள் எனச் சிறுவர்கள் வாங்கிப் படித்து மகிழ்வதற்குரியதாக சித்திரக்குள்ளன் சிறுவர் இதழ் வந்துள்ளது. வென்றாலும் தோற்றாலும் பரிசு உண்டு எனச் சிறுவர்களை ஊக்குவித்து எழுதவைத்து, பெயரை அச்சாக்கி மாணவர்களை வளர்த்து வந்தன அன்றைய சிறுவர் இதழ்கள். எழுதிப் பரிசு பெறாதவர்கள் அனைவருக்கும் குத்துச் சண்டை குப்பசாமி சிறுகதை நூல் ஒன்று (விலை 4 அணா) இனாமாக அனுப்பப் படும் என்று குறிப்பிட்டுள்ளது.

பாப்பா :

பாப்பா சிறுவர் இதழ். சூன் 46 ல் சென்னையிலிருந்து வெளியான இந்த இதழ் 4 ஆம் ஆண்டின் 5 ஆவது இதழ். சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது. விளம்பரத்தைக்கூட சுவையான ஈர்ப்புடைய செய்தியாக ஒருபக்க அளவில் வெளியிட்டுள்ளது. ருக்மணி எழுதியுள்ள சவாரி குதிரை மாணவர்களின் நெஞ்சை விட்டகலாதது.

டமாரம்:


1948 இல் சிறுவர் இதழ்கள் தரமாக வெளிவந்தன. பாலர் மலர் ஏழரை ஆண்டுகளும், சஙகு மூன்று ஆண்டுகளும், டமாரம் 5 ஆண்டுகளும் வெளிவந்தன. சங்கு 3 பைசா, டமாரம் 6 பைசா அதாவது அரையணா. இவ்வகை இதழ்கள் சிறுவர்களுக்கு ஆர்வமூட்டி, படிக்கும் பழக்கத்தை வளர்தெடுத்தன. நம் தொகுப்பில் டமாரம் 1- டம் டம் 43 முதல் டமாரம் 2- டம்டம் 20 வரை உள்ளன.
சந்திர ஒளி :

சந்திர ஒளி - சிறுவர் இதழ். ஆசிரியர் : சாமி. 1949 இல் இரண்டணா விலையில் சிறுவர்களுக்காக வெளிவந்த மாதமிருமுறை இதழ். சென்னை 7 லிருந்து தமிழ்நாட்டுத் தம்பி தங்கைகளின் நல்லொழுக்கத்தை வளர்க்கத் திட்டமிட்டு வெளிவந்த இதழ். 20-10-49 இல் வெளிவந்த 8 ஆவது இதழ் இது. சிறுகதை, கவிதை, தொடர்கதை, கேள்வி பதில், குறிப்பு, பொன்மொழிகள், போட்டிகள் என சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வெளியிட்டுள்ளது. கசகசா எழுதிய தங்கச் சுரங்கம் தொடர்கதை வியப்பூட்டும் வகையில் தொடர்ந்துள்ளது.

பாலர் மலர்:

பாலர் மலர் - சிறுவர் இதழ் : ஆசிரியர். வ்.எஸ். நடேசன்., 1949 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த சிறுவர் இதழ். இந்த இதழ் ஆறாவது ஆண்டின் 11ஆவது இதழ். பாலர் மேடை, பேனா நண்பர்கள் சிறுவர்களுக்கான சிறப்பான தொடர். இதழிலுள்ள சிறுகதைகள் சுவையாக உள்ளன.

தம்பீ:

 சிறுவர்களுக்கான வாரஇதழ். 1949 செப்டம்பர் 12 இல் வெளியான இதழ். பதிவு பெற்ற இதழ். விலை ஒரு அணா. மணி ஆசிரியராக இருந்து புதுக்கோட்டையிலிருந்து வெளியிடப்பட்ட இதழ். 16 பக்கங்களில் சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வெளியிட்டுள்ளது. கதைப்போட்டிகள் நடத்தி பரிசளித்துள்ளது. வளரும் கதை என தொடர்கதை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் இவர் யார் என பிரெஞ்சு தேசத்து எஞ்சினியரை அறிமுகப்படுத்தியுள்ளது. செய்துபார் என குண்டூசியைத் தண்ணீரில் மிதக்க வைத்தல் பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளது. பாரதி நாள் பற்றியும், பெரிய மருது சின்ன மருது பற்றியும் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. மாய சைக்கிள் சிறுகதை சுவையுடையதே.

மான் :
 சிறுவர்களுக்கான இதழ். இதழ் பெயர் : மான் 1949 களில் சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்த வார இதழ். சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது. தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என வினா விடை பகுதி, எனத் தரமாக வெளிவந்துள்ளது. போட்டிக்கான பரிசு ரூ 10 அளித்துள்ளது.


பாபுஜி:


சிறுவர்களுக்கான சிறந்த மாதப்பத்திரிகை. இதழ் பெயர் : பாபுஜி ., ஆசிரியர் - சதாசிவம். 1949 களில் சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். தம்பி தங்கைகளே என அழைத்து சிறுவர்களுக்கான பல்வேறு செய்திகளைத் தருகிற இதழ். சிறுவர் நாடகம், இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள், தொடர்கதை, வேடிக்கைக் கணக்குகள், ஈர்ப்புடைய சிறுகதைகள் என வெளியிட்டுள்ளது. பாபுஜி சிறுவர் சங்கம் என விண்ணப்பம் வெளியிட்டு சிறுவர்களை இணைத்து, சங்கத்தின் வழி படைப்பாளர்களை உருவாக்கியுள்ளது.

ஜிங்லி (1951)
ஜிங்லி : சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து வெளிவந்த குழந்தைகளுக்கான வார இதழ். தனியிதழ் 2 அணா. இந்த இதழ் 10-1-1951 இல் வெளியான முதலாம் ஆண்டின் 22 ஆவது இதழ். இந்த இதழில் தமிழேந்தி எழுதிய மகுடபதி, சூடாமணி எழுதிய அபாய மனிதன் கதையும் வெளியாகியுள்ளது. கோழை, தூக்க மாத்திரை, பிசாசுப் பெண் சிறுவர் கதையும் வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் போட்டி வைத்து பரிசளித்துள்ளது.

கோமாளி (1952)
 கோமாளி : 1952 ஆம் வருடம் சென்னையிலிருந்து திருநாவுக்கரசு அவர்கள் வெளியிட்ட சிறுவர் இதழ். இதழில் ராஜன் எழுதிய மர்ம மாளிகை என்கிற சிறுவர் தொடர் ஈர்ப்புடையதாக உள்ளது. துணுக்குச் செய்திகள் சுவையூட்டுவதாகவும், அறிவூட்டுவதாகவும் உள்ளன. நாவுக்கரசரைக் கேளுங்கள் என ஆசிரியரின் கேள்வி பதிலும் உள்ளன. சிறுவர்களுக்கான ஒரு பக்கச் சிறுகதைகளும் உள்ளன.


மிட்டாய் (1952)

மிட்டாய் : சிறுவர் இதழ் 1952 இல் திருநாவுக்கரசு அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். இது முதலாண்டின் 12 ஆவது இதழ். விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகளைச் சுடச்சுட எனத் தந்துள்ளது. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது

சாக்லெட் (1952)


அல்வா (1954) 

அல்வா - சிறுவர் இதழ் - வார இதழ் - ஆசிரியர் அருள்வாணன், 9, இப்ராகிம் சாயபு தெரு, சென்னை 1. 1954 மே மாதம் தொடங்கப்பட்ட இதழ். விலை அரையணா. ஆசிரியர் எழுதியுள்ள வீரன் விஜயவர்மன் அட்டைப்படக்கதை, ஹென்றி போர்டு பற்றிய குறிப்பு, மா.சா.கம்பதாசன் எழுதியுள்ள அறஞ்செய்ய விரும்பு, வெ.கைலாசம் எழுதிய சிறுகதை, டைரிக் குறிப்பு என சிறுவர்களை ஈர்க்கும் வகையில் இதழ் வெளியாகியுள்ளது.


கரும்பு (1956)

கரும்பு (சிறுவர் இதழ்) - 1956 நவம்பர் திங்களில் வெளிவந்த இந்த இதழ் மூன்றாவது ஆண்டின் 13 ஆவது இதழ். இந்த இதழ் சிறுவருக்காக சென்னையிலிருந்து வெளிவந்த சிறுவர் வார இதழ். ஆசிரியர் சங்கு கணேசன். இந்த இதழில் தஞ்சாவூர் அ.பிச்சை, சென்னை டி.பி.சீத்தராமன் என்கிற இரண்டு குழந்தை எழுத்தாளரின் படங்களைப் பிரசுரித்துள்ளது. புயலின் புன்னகை என்ற கோட்டோவியத் தொடர்கதையை வெளியிட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்குப் பரிசு என்று அழ.வள்ளியப்பா எழுதிய மலரும் உள்ளம் நூலுக்கு மத்திய அரசு ரூபாய் 500 பரிசளித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது. - இந்த நூலில் 2000 பிரதிகளை வாங்கி பள்ளிக்கூட நூலகங்களுக்கு அன்பாளிப்பாகத் தருவார்கள் என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளது.

கண்ணன்

கண்ணன் : ஆசிரியர் - ந.இராமரத்நம். ஒன்பதாவது ஆண்டின் மூன்றாவது இதழ் இது. சென்னை 4, கலைமகள் காரியாலயம் வெளியீடாக வெளிவந்த சிறுவர்களுக்கான மாத இதழ். சிறுகதை, பரிசுபெற்ற தொடர் கதை, மூளைக்கு வேளை, கடற்புலி படத்தொடர்கதை, பேனா நண்பர்கள் பட்டியல் என சிறுவர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கண்ணன் சிறுவர் இதழ் வழியாகக் கிளைக் கழகங்களை ஏற்படுத்தி, உறுப்பினர்களைச் சேர்த்து, ஊக்கப்படுத்தி மாணவர்களின் பல்முனை ஆற்றலை வளர்த்தெடுத்துள்ளது. கண்ணன் வெளியீடுகள் என ராஜி, ஆர்.வி.ஸாமி, ஜி.ஜயராமன், பெ.தூரன், கி.வா.ஜ, தி.ஜ.ர, சோமசன்மா, சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் சிறுவர்களுக்கான கதைகளை நூலாக வெளியிட்டுள்ளது.



கண்ணன். 1960 பிப்ரவரி மாதம் வந்த சிறுவர் இதழ் இது. இந்த இதழ் 11 ஆம் ஆண்டின் 4 ஆவது இதழ். கண்ணன் இதழ் மாதம் இருமுறை இதழாக வெளிவந்துள்ளது. சிறுவர்களுக்கான தரமான இதழாக மலர்ந்துள்ளது. விலை 15 ந.பை. (ஒரு ரூபாய்க்கு 100 பைசா) அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்கிற திருக்குறளைத் தலைப்பில் எழுதியுள்ளது. மயிலிறகு தலையில் உள்ள கண்ணன் வெண்ணைப் பானையில் வெண்ணை எடுப்பது போன்ற படமும் உள்ளது. இதழில் சிறுவர் கதை எழுதுகிற படைப்பாளிகளை அறிமுகம் செய்து வந்துள்ளது. இந்த இதழில் வி.ராஜாமணி, பெங்களூர் அறிமுகமாகியுள்ளார். மருதூர் மாளிகை படக்கதை இதழில் உள்ளது. ஆர்.வி. எழுதியுள்ள புதிய முகம் கதை சிறுவர்களை ஈர்ப்பதே. எ.ந.கணபதியின் லட்சியக்கனவு கவிதை இசைக்கக்கூடியதே. கொதிகலன்கள் பற்றி ரகு எழுதியுள்ள அறிவியல் கட்டுரை சிறப்பாக உள்ளது. மன்னர் மன்னன் நாடகம் சுவையானதே. படமும் செய்தியும் குறிப்பு பின் உள்அட்டையில் உள்ளது. இதழாசிரியர் ஆர்.வெங்கடராமன் சென்னையிலிருந்து இதழை வெளியிட்டுள்ளார்.


ஆராய்ச்சிமணி

சிறுவர்களுககான ஆராய்ச்சி மணி. மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்த குழந்தைகளுக்கான இதழ். இது முதல் இதழ். பதிப்பாசிரியர் மூர்த்தி. வெளியீட்டுத் தேதி குறிப்பிடப்படவில்லை. சிகப்பு பச்சை வண்ணத்தில் 8 பக்கத்தில் வெளியாகியுள்ள இதழ். காட்டில் ஸ்டிரைக், சோகக்குரல் என இரு கதைகளும், காக்கைக்குக் கண்சாய்ந்த வரலாறு, தேயிலை என இரண்டு குறிப்புகளும், வெளியாகியுள்ளன. கலைநேசன் என்கிற மாதமிருமுறை இதழ் பற்றிய குறிப்பும் இந்த இதழில காணப்படுகிறது

அணில் மாமா

அணில் மாமா - 1978 இல் சென்னையிலிருந்து வெளிவந்த சிறுவர் இதழ். ஆசிரியர் புவிவேந்தன். இதழில் சித்தன் கேலிப்படம் வரைய ஆசிரியரின் கில்லாடி கிரி படக்கதை பின் அட்டையில் சிறப்பாக வந்துள்ளது. நடுப்பக்கத்தில் அணில் அண்ணா எழுதிய மந்திரவாதியும் மூன்று குள்ளர்களும் படக்கதை வெளியாகியுள்ளது. அணில் அண்ணா எழுதியுள்ள தொந்தி பூதமும் மந்திர நாயும் கதை இந்த இதழில் உள்ளது. சிறுவர்களுக்கான தொடர்கதை, ஒரு பக்கக் கதை எனச் சுவையாகத் தந்துள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான பதிலும். குறுக்கெழுத்துப் போட்டியும். ஈர்ப்புடைய குறிப்புகளும் இதழில் வெளியிட்டுள்ளது.

அந்தக்கால சிறுவர் இதழ்களை நன்றாக ரசித்தீர்களா நண்பர்களே...

*அந்த கால அட்டைப்படங்கள் இரு வண்ணங்களில் அருமையாக உள்ளன. 

* சிறுவர்களிடம் தேச பக்தியையும் ஒழுக்கத்தையும் வளர்க்கும் விதமாக பல பத்திரிக்கைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது தெரிகிறது.

*  ஆசிரியர் கூற்றுப் படி 1932ல் வெளிவந்த சித்திரக்குள்ளன் இதழில் சித்திரக்கதைகள் இடம் பெற்று இருந்திருக்கிறது. இது தான் தமிழின் முதல் சித்திரக்கதையாக கூட இருக்கலாம். எப்படி இருப்பினும் விகடனில் 1956ல் வெளிவந்த ஜமீந்தார் மகன் தான் தமிழின் முதல் சித்திரக்கதை என்ற விகடனின் கூற்று தவறு என்பது தெரிகிறது. விஸ்வா கூட இது பற்றி கூறி இருந்ததை நண்பர்கள் நினைவு கொள்ளலாம்.

* கரும்பு இதழில் புயலின் புன்னகை என்ற சித்திர தொடர்கதை இடம்பெற்று உள்ளது.

* கண்ணன் சிறுவர் இதழ்,  தற்போதைய சிறுவர் இதழிகளின் அமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. இரண்டாவது கண்ணனின் அட்டைப்படம் அருமை.

* அணில் அண்ணா, கண்ணன் இதழ்களிலும் சித்திரக்கதைகள் இடம் பெற்றிருந்திருக்கிறது. அணில் அண்ணா அட்டைப்படம் வரைந்தவர் ரமணி.

நண்பர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி - தமிழம் இணையத்தளம்  மற்றும் பொள்ளாச்சி நசன் அவர்கள்

9 comments:

King Viswa said...

எங்கள் அருமை நண்பர் திரு நெல்லை நசன் அவர்களை பற்றி எழுதியமைக்கு நன்றி. பழகுவதற்கு எளிமையானவர், பண்பாளர் மற்றும் விருந்து உபசாரத்தில் சிறந்தவர் என்று இவரைப்பற்றி நான் அடுக்கிக்கொண்டே போகலாம். இவரை நேரில் சந்தித்து நீங்கள் எழுதியுள்ள இந்த புத்தகங்களில் 'சில' வற்றை அவருக்கு அன்பளித்தோம். இவரது உதவியின் மூலமே சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பிகள் இருவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

சில பின்னணி தகவல்கள்: கண்ணன் இதழில் மொத்தம் பதினோரு சிறுவர் சித்திரக்கதைகள் வந்தன (அதில் பத்தாவது கதையே அய்யம்பாளயத்தார் பதிவு செய்த இரு சகோதரர்கள்). அணில் அண்ணா தான் சிறுவர் இலக்கியத்தில் சிறப்பான பங்கு வகித்தவர். வீரப்பிரதாபன் கதைகளை எழுதியவர். பின்னாளில் காமிக்ஸ் கதைகளையும் வெளியிட்டவர். ஆனால், முதலில் அணிலின் ஆசிரியர் யார் தெரியுமா? சாட்சாத் அமரர் திரு தமிழ்வாணன் அவர்களேதான்.

இப்படி ஒவ்வொரு சிறுவர் இதழுக்கும் பல தகவல்களை அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் மற்றவர்களுக்கு போரடிக்கும் என்பதால் இப்போதைக்கு ஸ்டாப்.

Vimalaharan said...

ஹாய் ஷிவ்,
அருமையான பயனுள்ள பதிவு. காலசக்கரத்தில் பல ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது போன்று இருந்தது. நன்றி.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

ஷிவ்!

தமிழின் தொன்மையான சிறுவர் இதழ்களை தொகுத்தளித்து ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் சிற்றிதழ் உலகில் நன்கு அறியப்பட்ட நபர். நான் இதழியல் படிக்கும் போது சிற்றிதழ் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கும் ஒரு பயிற்சி பட்டறையில் அவரிடம் நிறைய விஷயங்கனை கற்றுக் கொண்டேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

King Viswa said...

//பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் சிற்றிதழ் உலகில் நன்கு அறியப்பட்ட நபர். நான் இதழியல் படிக்கும் போது சிற்றிதழ் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கும் ஒரு பயிற்சி பட்டறையில் அவரிடம் நிறைய விஷயங்கனை கற்றுக் கொண்டேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.//

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள் இந்த விஷயத்தை சொல்லவேண்டும் என்றே நான் மேற்கூறப்பட்ட சம்பவத்தை கூறவில்லை. நல்லவேளை, அவரே வந்து சொல்லிவிட்டார்.

SIV said...

பொள்ளாச்சி நசன் அவர்களின் தொகுப்பில் விஸ்வா மற்றும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பங்களிப்பு கண்டு வியப்படைந்தேன்.
கண்ணன், அணில் அண்ணா பத்திரிக்கைகள் பற்றி கூடுதல் தகவல்களுக்கு நன்றி விஸ்வா.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களே, குழந்தைகள் இலக்கியம் பற்றிய பதிவுகளை உங்கள் வலைப்பக்கதில் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. கவனிக்கவும்.

நண்பர் விமல், தங்களின் கருத்திற்கு நன்றி

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

ஷிவ்
பொள்ளாச்சி நசன் அவர்களின் தொகுப்பில் எனது பங்களிப்பு ஏதும் இல்லை. நண்பர் விஸ்வாவின் பங்கேற்பு உண்டு. எனது குழந்தையுடன் நேரம் செலவாகி விடுவதால் பதிவு குறித்து ஏதும் யோசிக்க வில்லை. நன்றி!

CAPTAIN HECHAI said...

மிக அருமையான அந்த கால சிறுவர் இதழ்கள் பற்றிய நல்ல பதிவு. இதில் "அணில்மாமாவைதவிர "மற்ற இதழ்களை நான் கால்பது இதுதான் முதல் தடவை இந்த அறிய புத்தகங்களை பாதுகாத்து வந்தமைக்கு நன்றிகள் தோழரே

Saranya said...

Hello Sir...
I am searching for a series "Chittu pen pinky" from Thangamalar-Dinathanthi...
Any possibility that i get it???
or can yo suggest some similar comic... ty

Saranya said...

Hello Sir...
I am searching for a series "Chittu pen pinky" from Thangamalar-Dinathanthi...
Any possibility that i get it???
or can yo suggest some similar comic... ty