Thursday, December 10, 2009

சித்திரக்கதையில் அப்புசாமி (Appusami in comics)

வணக்கம் நண்பர்களே, தமிழ் இலக்கிய உலகில் சற்று பின்தங்கிய நிலையில் இருப்பது நகைச்சுவை இலக்கியம் தான் என்பது என் கருத்து. (அடுத்ததாக குழந்தைகள் இலக்கியம்) அரிதான நகைச்சுவை கதைகளில் மிகவும் முக்கியமான கதை வரிசை அப்புசாமி - சீதாப்பாட்டி கதை வரிசையாகும். குமுததின் முக்கிய இலக்கியவாதியான பாக்கியம் ராமசாமியால் படைக்கப்பட்ட இப்பாத்திரங்கள் இன்றளவும் தமிழக மக்களால் ரசிக்கப்படுகிறார்கள்.


பெரும்பாலும் சிறுகதை / நாவல் வடிவத்திலேயே எழுதப்பட்ட இக்கதைவரிசை அவப்போது சித்திரக்கதை வடிவிலும் வந்துள்ளது. அதில் என் கைக்கு சிக்கிய ஒரு புத்தகத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

1993 யில் (1997இல் மறுபதிப்பு) மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள 52 பக்கங்கள் கொண்ட "அப்புசாமியின் கலர் டி.வி" சித்திரக்கதை புத்தகத்தின் அட்டைபடம் உங்கள் பார்வைக்கு.


இந்த இதழுக்கு சித்திரங்கள் வரைந்திருப்பது ஓவியர் ஜெயராஜ் ஆகும். இதுவரை வெளிவந்துள்ள அனைத்து அப்புசாமியின் கதைகளுக்கும் சித்திரம் வரந்திருப்பது இவரே. புத்தகதிற்கு லேனா தமிழ்வாணன் எழுதிய முன்னுரையும் இதழின் சில பக்கங்களும் உங்கள் பார்வைக்கு.






கதையில் எம்.ஜி.ஆர் தோற்றம்

அப்புசாமி கலர் டி.வி க்கு ஆசைப்பட்டு அதனால் சீதாப்பாட்டிக்கு வந்திடும் தொல்லைகள் பற்றியே கதை. நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சம் இல்லாது கதை போகிறது. நிறைய இடங்களில் வாய்விட்டு சிரிக்கலாம். சித்திரக்கதையானாலும் பெரியவர்களையும் கவரும் விதமாகவே கதை பின்னப்பட்டுள்ளது. புத்தக வடிவமைப்பை பார்க்கும் போது இந்த கதை ஏற்கனவே வார இதழ் ஏதோ ஒன்றில் வந்த கதை போல் இருக்கிறது. குமுதமாக இருக்க கூடும். ஓவியர் ஜெயராஜ் கவர்ச்சியாக படம் வரைவதில் புகழ்பெற்றவர். அவரின் ரசிகர்களுக்காக ஒரு படம்.

இந்த இதழை பொறுத்த வரை மகிழ்ச்சியான மற்றும் சோகமான செய்தி என்னவென்றால் இன்னும் இப்புத்தகம் பதிப்பகத்தாரிடம் ஸ்டாக் இருப்பதே. இன்றும் இப்புத்தகதை வாங்கலாம் என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் ஒரு சித்திரக்கதை இதழ் 12 வருடங்களாக விற்பனையாகாமல் இருப்பது ஆரோக்யமான செய்தி அல்ல.....

- - - இதழின் விலை ரூ.10 மட்டுமே. இதழை வாங்க 044 - 24342926 க்கு தொடர்பு கொள்ளவும் - --

(இந்த இதழுடன் வேறு சில சித்திரக்கதை புத்தகங்களையும் மணிமேகலை பிரசுரத்தில் வாங்கி உள்ளேன். அவற்றை பின் வரும் பதிவுகளில் எழுதலாம் என்று உள்ளேன்)
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி

அப்புசாமி - சீதா பாட்டி

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேற்கை 1 - ஓவியர் ஜெயராஜ் அவர்கள் அப்புசாமி - சீதாப்பாட்டி கதை வரிசைக்கு ஓவியம் வரைந்ததை மிகவும் பெருமையாக் குறிப்பிடுகிறார். ஓவியர் ஜெயராஜ் அவர்கள் பற்றி தினமலர்-வாரமலர் இதழில் தொடர் கட்டுரை வந்தது. அதில் சீதாப்பாட்டி, அப்புசாமி பற்றி அவர் கொடுத்துள்ள செய்தி மற்றும் பேட்டி.

                        
கேள்வி : சீதாப்பாட்டி, அப்புசாமி தாத்தா என்ற மறக்க முடியாத உருவங்களை, நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்கள் உருவான கதை பற்றி?

பிரபல எழுத்தாளரும், குமுதத்தின் முன்னாள் உதவி ஆசிரியருமான ஜ.ரா.சுந்தரேசன், காலத்தால் அழியாத, மறக்க முடியாத இரு பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.

                  ஓவியர் ஜெயராஜ்
அப்புசாமியை வைத்து முதல் கதை எழுதியபோது, என்னிடம், "நல்ல பழுத்த கிழம், நல்ல புத்தி உள்ள ஒரு கேரக்டரை வைத்து கதை எழுதப் போகிறேன்...' என்றார். கொஞ்சம் யோசித்து தாத்தா உருவத்தை வரைந்தேன். சுந்தரேசன் சாருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. உடனே அந்த டிராயிங்கை ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யிடம் காண்பித்தார்.


அவரும், "ரொம்ப பொருத்தமாக இருக்கு. அப்படியே போடுங்க...' என்று உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஜ.ரா., சொல்லாமலே நானே, அந்த தாத்தாவிற்கு ஒரு ஜோடியாக, வயதான பாட்டியின் படம் வரைந்தேன். அதுவும் அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று.

அப்புசாமி தாத்தாவின் முகத்தையே, சீதாப்பாட்டிக்கும் போட்டேன். அதற்கு மேலே தலைமுடி, மூக்குக் கண்ணாடி, குங்குமம் என்று சில எக்ஸ்ட்ரா விஷயங்களை வரைந்தேன். வாசகர்களுக்கும் இரு உருவ அமைப்புகளும் மிகவும் பிடித்து விட்டன. கிளாமராக நான் வரைந்த இளம் பெண்களின் படங்களை விட, எனக்கு அதிகமான அங்கீகாரம், புகழ்பெற்றுக் கொடுத்தது, அப்புசாமி - சீதாப்பாட்டி என்பது தான் மறுக்க முடியாத உண்மை. தமிழ்ப் பத்திரிகை உலகில், சாகாவரம் பெற்ற இரு பாத்திரங்கள். அவர்கள் ஏற்கனவே நல்ல வயதானவர்கள் என்பதால், அவர்களுக்கு இனி வயதாகாது. இவர்களின் உருவங்களைத் தான், நான் என் விசிட்டிங் கார்டில், ஒரு ஓவியன் என்று சட்டென்று விளங்க, உபயோகப்படுத்துகிறேன்.

சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்ற மூன்று வடிவங்களிலும் வந்திருக்கும் ஒரே கதை (நான் அறிந்தவரை) சீதாப்பாட்டி - அப்புசாமி கதை. குமுதம் முன்னாள் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமஸ்வாமி (அவரது பெற்றோர் பெயரில்) என்ற பெயரில் எழுதிய அந்தக் கதைக்கு, ஆரம்பம் முதலே படம் வரையும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பல ஆண்டுகள் குமுதத்திலும், பிறகு விகடன், குங்குமம், கல்கி என்று பல பத்திரிகைகளிலும் அப்புசாமி கதைகள் வந்தன. எந்த பத்திரிகையில் அப்புசாமியின் கதை வந்தாலும், அதற்கு படம் போடும் வாய்ப்பை, தொடர்ந்து எனக்கே கொடுத்தனர். இதுவும் ஒரு வகை சாதனை தான்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிற்சேற்கை 2 - அப்புசாமி காமிக்ஸ் பற்றி ஏற்கனவே லக்கிலூக் வலைதளத்தில் விவாதம் நடந்துள்ளது. இங்கு ஒரு அப்புசாமி - சீதாப்பாட்டி சித்திர சிறுகதையும் நீங்கள் படிக்கலாம். அதற்க்கான தொடர்பு


கிழக்கு பதிப்பகத்தினர் அப்புசாமியின் கதைகளை சித்திரக்கதைகளாக வெளியிட போவதாக கூறி இருந்தனர். அதற்க்கான தொடர்பு

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவினை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறிவிடுங்கள்

Saturday, November 21, 2009

இன்ஸ்பெக்டர் கருடா (Inspector eagle)

வணக்கம் நண்பர்களே,

ஐந்து தமிழ் காமிக்ஸ் பத்திரிக்கைகளில் இடம்பெற்ற ஒரு இந்திய படைப்பு பற்றி இந்த பதிவு

தமிழ் காமிக்ஸ் உலகில் அனைத்து வகைகளிலும் சூப்பர் ஸ்டாராக திகழ்வது லயன் - முத்து காமிக்ஸ். இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லாத அளவு விதவிதமான கதைகளை அறிமுகபடுத்திய பெருமை லயன் - முத்து காமிக்ஸ்க்கு உண்டு. ஆங்கிலத்தில் வெளிவராத சில அயல் நாட்டு கதைகளை கூட தமிழ் மொழி வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அத்தகைய லயன் - முத்துவில் இந்திய படைப்புகள் இடம் பெறுவது என்பது மிக அறிது. இந்த 'எப்பொழுதாவது வரும்' இந்திய கதைகளில் குறிப்பிட தகுந்த கதை வரிசை இன்ஸ்பெக்டர் கருடா (அல்லது இன்ஸ்பெக்டர் ஈகிள்). கபீஷ், அதிமேதை அப்பு போன்ற படைப்புகளும் லயன்/முத்து வில் இடம்பெறும் இந்திய கதைகளில் குறிப்பிடதக்கவை.

இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகள் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள் மற்றும் விமல் காமிக்ஸ் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது.

பெரும்பாலும் 20 பக்கங்களில் அடக்கிவிடகூடிய கதைகளே நமது காமிக்ஸ்களில் இடம்பெற்றுள்ளது.
அனைத்து கருடாவின் கதைகளும் " ஒரு குற்றம் - கருடா மற்றும் பல்பீரின் விசாரணை - கொலையாளி பற்றிய குழப்பம் - கருடாவின் துப்பறியும் திறன் மூலம் கொலையாளி சிக்குதல் - சிறிய ஆக் ஷன் - முடிவு " என ஒரே ஃபார்முலாவில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஆனால் அனைத்து கதைகளும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

என்னுடைய கணிப்பு படி லயன்/முத்து இதழ்களில் மொத்தமாக 10 இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகள் இடம்பெற்றிருக்கலாம். அவற்றில் சில கதைகளின் முதல் பக்கம் உங்கள் பார்வைக்கு...

பாங்க் கொள்ளை - லயன் காமிக்ஸ் வெளியீட்டு எண் - 72 (மீண்டும் ஸ்பைடர்)


 
காணாமல் போன சிப்பாய் - முத்து காமிக்ஸ் வெளியீட்டு எண் - 172 (சைத்தான் சிறுவர்கள்)
(இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் ஈகிள், பல்பீரின் பெயர் - ஹவில்தார் நாயக்)


 

விபரீத விருந்து - முத்து காமிக்ஸ் வெளியீட்டு எண் - 278 (மரண மண்)



இவற்றில் விபரீத விருந்து தமிழில் கடைசியாக வெளிவந்த இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதையாகும்.
 
இது தவிர ராணி காமிக்ஸில் வெளிவந்த இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதையின் முதல் பக்கம்
(புத்தாண்டு விருந்து - ராணி காமிக்ஸ் வெளியீட்டு எண் - 86**)
(இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் சம்பத், பல்பீர் செவன் நாட் திரீ என அழைக்கப்படுகிறார்)





 இது தவிர விமல் காமிக்ஸ் எனும் காமிக்ஸ் இதழிலும் இவர் கதையை பார்க்க முடிகிறது. அட்டைபடத்தில்*** கருடா இடம்பெற்றிருப்பதும் இருவண்ணத்தில் தாயாரிக்கப்பட்டிருப்பதும் இவிதழின் சிறப்புகள்.




நான்காவதாக பார்வதி சித்திரக்கதையிலும் தலை காட்டி உள்ளார் கருடா. இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் இந்த்ரஜித் ஆகும். 

இன்ஸ்பெக்டர் கருடாவின் படைப்பாளிகள் பற்றிய தெளிவான விபரங்கள் கிடைக்காத நிலையில் நண்பர் ரஃபிக் கொடுத்துள்ள தகவல்கள்படி கதை - ஜகஜிட் உப்பால்(Jagjit Uppal) ஓவியங்கள் - பிரதீப் சட்டே (Pradeep Sathe). வெளிவந்த பத்திரிக்கை Sapthaik Hindustan & Satyakatha *

லயன்/முத்து ஆசிரியர் விஜயன் அவர்கள் இன்ஸ்பெக்டர் கருடாவை பக்க நிரப்பியாகவே உபயோகித்து வந்துள்ளார் என்பது என் என்ணம். ஆனால் 8~9 வருடங்களுக்கு முன் முத்து காமிக்ஸில்(வெ.எண் - 171) வந்திட்ட முத்து மினி காமிக்ஸ் விளம்பரம் இன்ஸ்பெக்டர் கருடாவின் சித்திரகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் அந்த முயற்சி விளம்பரத்தோடு நின்று விட்டது தான் பரிதாபம்.



--- நன்றி ---

Update at 13/03/10 : மேற்கண்ட இதழ்கள் அல்லாமல் பார்வதி சித்திரக்கதை மற்றும் பூந்தளிரிலும் தலை காட்டி உள்ளார் கருடா. இங்கு இவரது பெயர் இன்ஸ்பெக்டர் இந்த்ரஜித் ஆகும். பூந்தளிரில் வெளியான கருடா சாகஸம்.  (விரைவில் பார்வதி சித்திரக்கதை ஸ்கேனும் இடம்பெறும்)


Update at 25/09/2015:  இந்தியில் வெளிவந்த மனோஜ் காமிக்ஸ் தான் கருடாவின் மூலம் என்று தெரிகிறது. அங்கு அவர் பெயர் இன்ஸ்பெக்டர் மனோஜ். (Inspector Manoj - Manoj comics)


 

* தகவல்கள் உபயம் - ரஃபிக்
** அட்டைபடம் உபயம் - டாக்டரின் அ.கொ.தீ.க வலைதளம்
*** scan உபயம் - R T முருகன்

Tuesday, November 17, 2009

கோகுலம் வண்ணப் படக்கதை - சில விளம்பரங்கள்

சென்ற பதிவில் இடம்பெற்ற ஆனந்தி - வினு அவர்களின் சித்திரகதைகளை பற்றிய சில விளம்பரங்களை இங்கு காண்போம்..







மேலே பார்த்தவை யாவும் கல்கியில் 1985 ~ 1990 களில் வெளிவந்த விளம்பரங்கள். இனி பார்ப்பது இதே காலகட்டத்தில் கோகுலத்தில் அடுத்த இதழில் வர போகும் கதை பற்றிய விளம்பரங்கள்



கடைசி படம் மட்டும் குமரன் என்பவரின் கதைக்கான விளம்பரம் என்பதை கவனிக்க...

Friday, November 6, 2009

கதை - ஆனந்தி, படம் - வினு (Story - Ananthi, Art - Vinu)

வணக்கம் தோழர்களே,

இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகளாக இருந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இனிமையான தமிழிலே வளமான தரத்திலே கோகுலம், பூந்தளிர், சிறுவர்மலர் போன்ற பல தமிழ் சிறுவர் பத்திரிக்கைகளை படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த இனிமையான யுகத்தின் இறுதி காலகட்டங்ளில் படிக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்த நானும் அதிர்ஷ்ட்டசாலி தான். தற்போதய குழந்தைகள் 'பவர் ரேஞ்சர்' தொடர் மற்றும் பல வீடியோ கேம்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். அந்த இனிமையான கலகட்டங்களில் பல சித்திரகதைகளை கொடுத்திட்ட ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளை பற்றியே இந்த பதிவு.



என்னிடம் இருக்கும் 1985 ~ 1990 இடைப்பட்ட காலங்களில் வந்த பல கோகுலம் புத்தகங்களின் நடுபக்கங்களை அலங்கரிப்பது ஆனந்தி - வினு கூட்டணியின் படைப்புகளே. 1986ல் அழ.வள்ளியப்பா அவர்கள் ஆசிரியராக இருந்தார். இந்த கூட்டணி எப்போது ஆரம்பித்தது, எவ்வளவு சித்திர கதைகளை படைத்திருகிறார்கள் போன்ற விபரங்கள் என்னிடம் துல்லியமாக இல்லை. கிட்டதட்ட 100 கதைகளுக்கு மேல் படைத்து இருப்பார்கள் என் எண்ணுகிறேன்.

நான் படித்திட்ட அனைத்து கதைகளும் சரியாக 16 பக்கங்கள் கொண்டவையே. சில பக்கங்கள் முழு வண்ணத்திலும் சில பக்கங்கள் இரட்டை வண்ணத்திலும் இருக்கும். பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகளையே உருவாக்கிருகிறார்கள். சரித்திர கதைகளை நிறைய எழுதியதற்கு ஆனந்தி அவர்கள் தமிழின் முதன்மையான சரித்திர கதை எழுத்தாளர் ஒருவரின் புதல்வியாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம். ஆம் நண்பர்களே ஆனந்தி அவர்கள் பொன்னியின் செல்வன் படைத்த எழுத்தாளர் கல்கியின் புதல்வியாகும். (அவர் தனது தந்தை பற்றி கொடுத்த பேட்டியை படிக்க இங்கே கிளிக்கவும்)

ஆனந்தி அவர்கள்

சரித்திர கதைகளை 16 பக்கங்களில் அடக்கி அனைவருக்கும் புரியும் படியாகவும் சுவையாகவும் கொடுப்பது என்பது அவ்வளவு எளிய காரியம் அன்று. அதனை திறம்பட செய்திருகிறது இந்த கூட்டணி. அதற்கு ஓவியர் வினுவின் பங்களிப்பும் முக்கியமானது. வினு அவர்களின் ஓவிய தரம் பற்றி யாரும் சொல்ல தேவையில்லை. கல்கி போன்றவர்கள் வர்ணணையில் கொண்டுவரும் அழகினை அப்படியே ஓவியத்தில் பதித்து விடுவார். ஆக இப்படி ஒரு தரமான எழுத்தாளர் மற்றும் ஒரு ஓவியர் சேர்ந்து அழகான சித்திரகதைகளை படைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அனைத்து கதைகளும் சிறுவர்களுக்கு உபயோகமான சரித்திர தகவல்களையும் தேவையான் அறிவுரைகளையும்  கொடுக்கும் கதைகள்.
இங்கு கோகுலத்தி வெளிவந்த சில சித்திரகதைகளின்  பக்கங்களை பார்க்கலாம்.
தயமந்தி சுயவரம்




ஆனந்தி - வினு அவர்களின் கூட்டணியின் படைப்புகள் பூந்தளிரின் இறுதி காலகட்ட இதழ்களில் வெளிவந்தன. இவை வெளிவரும் போது பூந்தளிர் ஆசிரியராக இருந்தவர் நமது வாண்டுமாமா.

மந்திர பொம்மை

சிந்துபாத்

மந்திர அம்புகள்

பதிவை படித்துவிட்டு கருத்துகளை கூறுங்களேன்....

Friday, October 9, 2009

தமிழர் புகழ் போற்றும் இராஜ கம்பீரன் (Rajakambeeran)

வணக்கம்,
தமிழகத்திற்க்கு சற்று தொலைவில் உள்ள ஒரு தீவில் தமிழர்கள் பலர், தமிழர்களை வெறுக்கும் ஒரு கொடூரனால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். . அவர்களை மீட்க புலி கொடி பறக்கும் கப்பலில் தனது வீரர்களுடன் வருகிறார் தமிழினம் காக்கும் தலைவர். தமிழ்பற்றுள்ள வீரர்கள் அவர்களை மீட்பார்களா இல்லையா?

என்ன நண்பர்களே தமிழர்களை வருத்தும் ஈழ பிரச்சனை பற்றி கூறுவது போல இருக்கிறதா... இல்லை இது ஓவியர் ப.தங்கம் அவர்கள் படைத்துள்ள "இராஜகம்பீரன்" சித்திர கதையின் சாரம் தான்.



தமிழில் உருவாக்கப்படும் சித்திர கதைகள் அறவே நின்று விட்ட இன்றைய காலகட்டதில் வெளியிடப்பட்டு இருக்கும் முழுமையான தமிழ் சித்திர கதை தான் இராஜகம்பீரன். கிரவுன் சைஸ் அளவில் 214 பக்கங்களுடன்ம் அருமையான் சித்திரங்களுடனும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓவியர் ப. தங்கம் அவர்கள் கதையெழுதி சித்திரம் வரைந்து இந்த இதழை படைத்திருக்கிறார். 70 வயது ஆகி இருந்தாலும் தமிழ் - தமிழர் வரலாறு - சித்திரகதை ஆகியவை மேலுள்ள பற்றால் அருமையான இந்த இதழை வெளியிட்டு இருக்கிறார். இவரிடம் இருந்து இன்னும் பல வரலாறு கூறும் சித்திர கதைகளை எதிர் பார்க்கலாம் என் நினைக்கிறேன். தினதந்தி நாளிதழில் பணியாற்றி இருக்கும் தங்கம் அவர்கள், கருப்பு கண்ணாடி என்ற சித்திர கதையை உருவாக்கி உள்ளார். இந்த கதை 1960களில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. (எனது தந்தை கூட தனது சிறு வயதில் இந்த கதை படித்துள்ளதாக கூறுவார்). கன்னிதீவு கதையின் ஆரம்ப காலங்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழர் வரலாறின் மீது தீராத பற்று வைத்து இருப்பது அவர் எழுத்தில் நன்றாக தெரிகிறது.



900 ஆண்டுக்கு முன் வாழ்ந்து சரித்திரதில் முக்கிய இடம் பெற்றுள்ள இராஜராஜ சோழன் காலத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கடல் வாணிபர்கள் கடற்கொள்ளையன் ஒருவனால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க செல்லும் சோழ நாட்டு வீரர் குழு கடற்கொள்ளையர்களை வீழ்த்துகிறார்களா என்பதே கதை சுருக்கம்.

சோழர் காலத்து வரலாற்று கதையினை சித்திர கதை வடிவில் படிப்பதே மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது. கதையின் பல இடங்களில் தமிழர்களின் பழம்பெருமைகள் நன்றாகவே உணரமுடிகிறது. இராஜராஜ சோழன் தவிர கவிஞர் ஒட்டக்கூத்தர், குலோத்துங்கசோழன் ஆகியோரும் இந்த கதையில் இடம் பெற்றுள்ளனர். கூடவே ஒரு புத்தபிட்சு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். பண்டைய தமிழகத்தில் புத்த மதத்தினர் தமிழ்ர்களுடன் நல்ல நட்புடன் வாழ்ந்து இருக்கிறார்கள். (ஆனால் இன்று ?? )

பழைய தமிழர்கள் கடற்பயணத்தை எப்படி திட்டமிட்டு மேற்கொண்டார்கள் என்பதை நுணுக்கமாக விவரித்துள்ளார் ஆசிரியர். தீவில் இருக்கும் கைதிகளை மீட்கும் விதமும் ஏனோதானோ என் இல்லாமல் சுவையாகவும் நம்பும்படியாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சில காட்சிகளில் ஒரே கருத்துள்ள வசனங்கள் திரும்ப திரும்ப வருவது ஒரு சின்ன குறை. அதே போல் கதை இராஜராஜ சோழன் பற்றியதா அல்லது இரண்டாம் இராஜராஜ சோழன் பற்றியதா என்பதிலும் சிறு குழப்பம் உள்ளது.

ஓவியங்களை பொறுத்த வரை சிறப்பவாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழர்களின் கலை பன்பாட்டு அடையாளங்கள் நன்றாகவே பிரதிபலிக்கிறது. இராஜராஜ சோழனின் கம்பீர தோற்றம் மனதை கொள்ளை கொள்கிறது. (கதையின் தலைப்பு போலவே)
சித்திர கதை மட்டுமில்லாமல் பல வரலாற்று தகவல்களும், சிற்பங்களின் புகைபடங்களும் இந்த நூலில் அடங்கியிருக்கிறது.

Pic1 - கதாபாத்திரங்கள் அறிமுகம்


Pic2 - குலோத்துங்கசோழன் தனது அன்னையிடம் ஆசி பெறும் காட்சி



Pic3 கப்பல் கட்டும் இடம்

Pic4 - ராஜராஜ சோழனின் கம்பீர தோற்றங்கள்

Pic5 - கடற்பயணம் துவக்கம்

Pic6- கடற்கொள்ளையர்கள் அழிப்பு

தமிழில் இது போன்ற சித்திர கதைகள் வந்ததே இல்லை என கூறுவதை விட இது போன்று இன்னும் நிறைய கதைகள் வரவேண்டும் என்பதே என் விருப்பம். தமிழக நூலக துறை இந்த புத்தகத்தை அங்கிகரித்து நூலகங்களில் இடம்பெற செய்திருப்பது ஆரோக்கியமான செய்தி.
சென்ற பதிவிற்கு கருத்துரை எழுதிய ஓவியர் ப. தங்கம் அவர்களின் மகன் இராஜேந்திரன் தங்கமுத்து அவர்களுக்கு நன்றிகள்

புத்தக விபரங்கள்

பதிப்பகம் தங்கப்பதுமை,
முகவரி - ஞானம் நகர், 6வது தெரு மேற்கு
மாரியம்மன் கோவில் அஞ்சல்
தஞ்சாவூர்

பக்கங்கள் - 214, விலை - 145/-

Wednesday, September 30, 2009

தினதந்தி புத்தக மதிப்புரையில் "இராஜ கம்பீரன்"

(பதிவிற்க்கு செல்லும் முன்  திருமண வாழ்க்கையில் "அடி" எடுத்து வைக்கும் ரஃபிக் நண்பர்க்கு வாழ்த்துக்கள்........ ஹனிமூன் கிளம்பியாச்சா சார்?? )

இன்றைய (30/09/09)  தினதந்தி பத்திரிக்கையில் "புத்தக மதிப்புரை" பகுதியில் வெளிவந்துள்ள "இராஜ கம்பீரன்" என்ற சித்திரகதை புத்தகம் பற்றிய மதிப்புரை உங்கள் பார்வைக்கு.....



எழுத்து & சித்திரம் - தங்கம்
பதிப்பகம் - தங்கப்பதுமை, தஞ்சாவூர்.

(ராஜராஜன் கால கதை என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்)

இப்புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும்? ? இனிமேல் தான் தேட வேண்டும். கிடைக்குமிடம் தெரிந்தால் நன்பர்கள் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்....

Thursday, September 24, 2009

கதை மலர் - தொடர்ச்சி (Kathai malar - 2)

இது கதை மலர் - ஒரு அறிமுகம் பதிவின் தொடர்ச்சி.......

கதை மலரின் ஓவியர்கள்

ஏற்கனவே குறிப்பிட்ட படி கதை மலரின் 80% சித்திரங்களை ஓவியர் சங்கர் வரைந்துள்ளார். அது மட்டுமல்லாது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்க்கு நன்கு பரிச்சியமான ஓவியர்கள் பலரை இங்கு பார்க்கலாம். (உ-ம்) செல்லம், வினு, மணியம் செல்வன், ரமணி, சித்ரலெகா, பத்மவாசன், கோபன், தாமரை, ஜயந்தி ஆகியோரின் ஓவியங்களை கதை மலரில் நாம் ரசிக்காலாம்.

10க்கு மேற்பட்டோர் கதை எழுதி உள்ளனர். அதில் வாண்டு மாமா, எ. சோதி (முட்டாள் கதைகள் புகழ்) போன்றவர்களும் அடங்கும். வாண்டு மாமா பீர்பால் கதைக்கு கதையமைப்பு செய்துள்ளார். ஓவியர்கள் அனைவரது கைவண்ணத்தையும் இங்கு நீங்கள் காணலாம்.

ஓவியர் செல்லம்


 
சித்ரலெகா 


ஜயந்தி



கோபன்


 

தாமரை

 

ஓவியர் ரமணி


ஓவியர் வினு



பத்மவாசன்




ஓவியர் மணியம் செல்வன்


வாண்டு மாமாவின் பீர்பால் கதை



கதை மலர் Vs அமர் சித்திர கதா

கதை மலரில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வட இந்தியாவில் இருந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளிவரும் "அமர் சித்திர கதா" இதழிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டு இதழ்களும் புராண கதைகளை வெளியிடும் பத்திரிக்கைகள் என்பது ஒற்றுமை.

கதை மலரில் கிட்டதட்ட அனைத்து கதைகளும் 4 பக்க கதைகள். (எப்பிடிப்பட்ட புராண சம்பவத்தையும் 4 பக்கங்களில் அடக்கி விடுகிறார்கள்). ACK ல் 32 பக்க கதையாக தருகிறார்கள். கதை மலரில் சாந்தமான தெய்வீகமான் காட்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் AKC ல் அதிரடியான ஆக் ஷன் சம்பவங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஓவியங்களில் கதை மலரை ACK யால் மிஞ்ச முடியாது. இந்த ஒப்பீட்டை கதை பகுதிகளில் இருந்து நீங்கள் கண்டு கொள்ளலாம்.

அய்யபன் வரலாறு கூறும் கதையை  இந்த இரண்டு இதழ்களிலும் பார்க்க நேரிட்டது. அதில் வரும் ஒரு கட்சியை இரண்டு இதழ்களிலும் பாருங்களேன்...

அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (ACK)


 
அய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (கதை மலர்)



கதை மலர் ஆங்கில பதிப்பு

கதை மலர் ஆங்கில பதிப்பு - அழகான ஆங்கிலத்தில் மொழிபெயற்ப்பு செய்யப்பட்டு "Pictorial stories for children" எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.
கதை மலர் ஆங்கில பதிப்பு 1990 களின் ஆரம்பத்தி தொடக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. காமிக்ஸில் தமிழ் to ஆங்கிலம் மொழிமாற்றம் வேறு எங்கேனும் செய்யப்பட்டு இருக்கிறதா?? என்க்கு தெரியவில்லை

ஆங்கில இதழின் சில பக்கங்கள் இங்கே...







படித்துவிட்டு கருத்துகளை கூறிடுங்கள் நன்பர்களே....