Monday, May 2, 2022

சிறகுகள் முளைக்கும் சித்திரக்கதை (பறவை பார்த்தல்)

வணக்கம்.   

வீட்டின் அருகில் தினமும் நடைப்பயிற்சி செய்யும் பாதையில் நிறைய பறவைகள் பார்ப்பது வழக்கம். (இதுவரை 60 வகையான பறவைகள் கடந்த ஒரு வருடத்தில் பதிவு செய்த்திருக்கிறேன்) அனால் கையில் கேமரா இருக்காது. இன்று கேமராவுடன் கிளம்பி எடுத்த புகைப்படங்கள் தான் இன்றை பதிவு. என்னிடம் DSLR camera கிடையாது மற்றும் புகைப்படம் எடுப்பதில் சரியான பயிற்சியும் கிடையாது. நண்பர் ஒருவரின் Point and Shoot கேமரா கொண்டு எடுத்த படங்கள் கொண்டே இந்த பதிவு.. 


முதல் தரிசனம் : ஒற்றை கால் நடனம் ஆடும் வல்லூறு. எங்கள் appartment பூங்காவிற்கு தொடர்ந்து வரும் விருந்தினர். நகர பகுதிகளில் சாதாரணமாக பார்க்கக் கூடிய ஒரு வேட்டையாடிப் பறவை (Raptor bird)

சிறகுகளை ஒழுங்குபடுத்தும் பணியில் பச்சை நிற பஞ்சுருட்டான்(Green Bee eater). இவரின் இணை அங்கு தான் இருந்தார். ஆனால் புகைப்படத்தில் சிக்காமல் ஓடிவிட்டார். 


அடுத்து கீச்சான் வகை பறவை ஒன்று கண்ணில் பட்டது. 

கீச்சான்களில் நீண்ட வால் கீச்சான் மற்றும் Bay back Shrike கீச்சான்களை இப்பகுதியில் நான் பார்ப்பது வழக்கம். அனால் இவர் யார் என அப்போது தெரியவில்லை. புகைப்படத்தை கணினியில் பதிவேற்றம் செய்த பிறகு இவர் பழுப்பு கீச்சான் (Brown Shrike) என்பது உறுதியாகிற்று. பழுப்பு கீச்சான் இப்பகுதியில் முதல் பதிவு ஆகும். தமிழ் நாட்டிற்கு குளிர் கால வலசை வரும் இவை வலசை முடிந்த காலத்திலும் இங்கு தென்படுவது வியப்பு.

சுடலை குயில்(Pied Cuckoo): கடந்த டிசம்பர் வரை அடிக்கடி தென்பட்ட இவை நடுவில் 3 மாதங்களாக காணாமல் போயிருந்தனர். மார்ச் பிற்பகுதியில் இருந்து மீண்டும் தென்படுகிறார்கள். உள்ளூர் வலசை செல்லும் வழக்கம் இப்பறவைகளிடம் இருப்பதாக கூறுகிறார்கள்

சாம்பல் தகைவிலான் : எப்போதாவது இங்கு வருபவர்கள். வரும்போதெல்லாம் சத்தம் பலமாக இருக்கும்.

ஏதோ பிரச்னை... திடீர் என்று  பனங்காடை, கரிச்சான் மற்றும் இன்னும் சில குருவிகள் ஆபத்து கால ஒலிகள் எழுப்பின. அவ்விடம் நோக்கி விரைந்தேன். வேட்டையாடி பறவை ஒன்றால் அந்த கலவரம் அங்கு ஏற்பட்டிருந்தது  புரிந்தது. இவ்விடத்தில் வழக்கமாக காணப்படும் வேட்டையாடிகள் வல்லூறு மற்றும் பூனைப்பருந்து எனப்படும் Black winged Kite. ஆனால் இப்போது வந்திரும் பறவை இவை இரண்டும்  இல்லை என்பது உறுதி. சற்றே தொலைவில் அப் பறவை இருந்ததால் ஒரு தெளிவற்ற புகைப்படம் மட்டுமே எடுக்க முடிந்தது.  அடையாளம் காண முடியவில்லை. பிறகு கணினியில் ஏற்றிய பிறகு அது வெள்ளை கண் வைரி (White eyed buzzard) எனத்தெரிந்தது.


Black winged Kite : இந்த வேட்டையாடி பறவையை பெரும்பாலும் மின் கம்பிகளில் மட்டுமே பார்க்கிறேன்.

தவிட்டுப்புறா: களத்தில் புள்ளிப்புறாவா தவிட்டுப்புறாவா என்ற குழப்பம். தவிட்டுப்புறா தான் என்பது பிறகு உறுதியாகிற்று. 

 நிறைய குண்டு கரிச்சான்களையும் கருப்பு வெள்ளை புதர் சிட்டுகளையும் இன்று பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பாடிய வண்ணம் இருந்தன



எல்லாம் முடித்து கிளம்புகையில் கண்ணில் பட்ட பறவை தான் நீலமுக பூங்குயில் (Blue faced Malkoha). தொலைவாகவும் போகவில்லை காமெராவிலும் சிக்கவில்லை. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த கண்ணாமூச்சி தொடர்ந்தது. ஒருவழியாக பெயருக்கு சில படங்கள் எடுக்க முடிந்தது. 



மாங்குயில் : பச்சைக்கு உதாரணம் எப்படி கிளியை சொல்கிறோமோ அது போல மஞ்சள் வண்ணத்திற்கு மாங்குயில் பறவையை சொல்லலாம். ஆண் மாங்குயில் அழகாக பாடும் இயல்பு கொண்டது. 

புரசை மர பூவில் தேன் உறிஞ்சும் பச்சைக்கிளி. 

இவை அல்லாமல் கரிச்சான், செம்புழை சின்னான், கொன்ன வாய் குருவி, தேன் சிட்டு வகையறாக்கள், புறா போன்ற பறவைகளையும் பார்க்க முடிந்தது. ஆனால் அவைகளுக்கு கேமரா வில் இடம் தராமல் இதயத்தில் மட்டும் இடம் கொடுத்து இந்த பறவை பார்த்தல் நிகழ்வை முடித்தோம்.

எனது மூன்றரை வயது மகள் தான் இந்த நிகழ்விற்கு எனக்கு கம்பெனி. அப்பா செய்யும் வினோத செய்கைகளை பொறுத்து கொண்டு ஒரு மணி நேரம் அவர் பொறுமையாக இருந்தது பெரிய விஷயம். கரிச்சான் மற்றும் கவுதாரி பறவைகள் அவரின் favorite. இன்று கவுதாரி பார்க்காதது அவருக்கு சற்று ஏமாற்றமே.   

4 comments:

கார்த்திகேயன் கிருஷ்ணன் said...

அருமையான பதிவு… உங்கள் வேட்டை தொடரட்டும்…

Anonymous said...


வேட்டையா?? என்ன ஐயா என்னை சிறைக்கு அனுப்பும் திட்டமா?

Karthikeyan Krishnan said...

தவறாக எண்ணிவிடக்கூடாது…
பறவைகளை பார்வையிடும் உங்கள் வேட்கை தொடரட்டும் என்ற அர்த்தத்தில் சொன்னது…

Anonymous said...

நல்ல முயற்சி