Thursday, July 19, 2012

நல்லதங்காள் கதைச்சுருக்கமும் சில சித்திரங்களும்

நல்லதங்காள் கதைச்சுருக்கம்:


நல்லதங்காள் பிறப்பு மற்றும் திருமணம்:
மதுரை பட்டணத்தை ஆட்சி செய்து வந்தார் ராமலிங்கன் எனும் அரசர். அவரின் மனைவி இந்திராணி. அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை நல்லதம்பி. அவனின் தங்கையாக பிறந்தவள் தான் நல்லதங்காள். நல்லதம்பி இளைஞனாக உருவெடுத்தபின் மூளியலங்காரி என்னும் பெண்ணிற்கு மணம் முடித்து வைத்தனர் அவனின் பெற்றோர். மூளியலங்காரிக்கு நல்லதங்காளை அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நல்லதம்பி அளவு கடந்த பாசத்தை தன் தங்கை மீது வைத்துள்ளான். சிறிது காலத்திற்குப்பின் ராமலிங்கன் தான் மூப்படைந்ததால் அரச பொறுப்புகளை தன் மகனிடம் ஒப்ப்டைத்துவிட்டு இயற்கை ஏய்தினார். இந்திராணியும் சிறிது நாட்களில் இயற்கை ஏய்தினார்.
பிறகு நல்லதங்காளுக்கு காசிராஜன் என்னும் அரசனை வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்தான் நல்லதம்பி. நல்லதங்காளும் காசிராஜனும் இனிமையான மண வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆண்டுக்கு ஒன்று வீதமாக ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தாள் நல்லதங்காள்.

காசிமாநகரில் பஞ்சம்:
பிறகு காசிராசனின் நாட்டில் (காசிமாநகர்) கடும் பஞ்சம் வந்தது. காசிராசனின் வீட்டில் இருந்த தானியங்கள் அனைத்தும் தீர்ந்து போனது. கணவனின் பேச்சையும் மீறி தன் சகோதரனின் வீட்டிற்கு ஏழு குழந்தைகளுடன் புறப்படுகிறாள் நல்லதங்காள். தன் தாய் வீட்டிற்கு செல்லும் வழியில் காடு ஒன்றில் வழி தவறுகிறாள். ஆனால் இதை தன் கனவு ஒன்றின் மூலம் ஊகித்த நல்லதம்பி ஏப்படியோ அவளை கண்டுபிடிக்கிறான். கண்டுபிடித்தபின் தன் தங்கையை முதலில் தன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். அவன் சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறுகிறான்.

நல்லதம்பி வீட்டில் நல்லதங்காள்:
தன் தாய்வீட்டை அடைந்த நல்லதங்காளுக்கு அவளின் அண்ணி கதவை திறக்காமல் புறக்கணிக்கிறாள். வேதனையுற்ற நல்லதங்காள் தன் புனிதத்தின் மேல்கொண்ட சாபத்தினால் கதவைத்திறந்து உள்ளே செல்கிறாள். அங்கு குழந்தைகள் அங்கும்மிங்கும் ஓடியாடி அங்கிருந்த பழங்களை உண்ண ஆரம்பித்தனர். இதனை கண்ட நல்லதங்காள் அண்ணி அக்குழந்தைகளை அடித்து துன்புறுத்த ஆரம்பித்துவிட்டாள். மனம் நொந்த நல்லதங்காள் தன் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டிலிருந்து அண்ணனின் வருகைக்கும் காத்திறாமல் வெளியேருகிறாள்.

நல்லதங்காள் முடிவு:
வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று அங்கு மாடு மேய்ப்பவர்களிடம் இங்கு பாழுங்கிணறு எங்குள்ளது எனக் கேட்டு ஒரு பாழுங்கிணறு சென்றடைகிறாள். பஞ்சம், அண்ணியின் புறக்கணிப்பு, குழந்தைகளின் பசி ஆகியவற்றால் வேதனை அடைந்து அக்கிணற்றிலே குழந்தைகளை போட்டு தானும் குதித்து விடுகிறாள்.
இதனை அறிந்த நல்லதம்பி கடும் வேதனையும் தன் மனைவி மீது கோபமும் அடைகிறான். மூளியலங்காரியை கொன்றுவிட்டு தானும் மரணத்தை அடைகிறான். இதனிடையில் காசிநாட்டில் பஞ்சம் நீங்கி காசிராஜன் நல்லதங்காளை தேடி வருகிறான். ஆனால் அவன் கேள்விப்பட்ட செய்திகளின் துயரம் தாங்காமல் அவனும் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அப்போது இவர்களின் நல்ல உள்ளம் அறிந்த சிவபெருமான் அனைவருக்கும் மீண்டும் உயிரூட்டுகிறார்.

நல்லதங்காள் சில சித்திரங்கள்:
இங்கிருக்கும்  ஓவியங்கள் http://www.tamilheritage.org/ எனும் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் புகழேந்தி புலவரால் இயற்றப்பட்டுள்ளது. உரைநடைக்கும் செயுள்நடைக்கும் இடைப்பட்ட ஒரு நடையில் ஒரு நடையில் இந்த புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. புத்தகம் வெளிவந்த ஆண்டு தெரியவில்லை. கோவில்களில் வரையப்படும் ஓவியங்கள் பாணியில் சித்திரங்கள் உள்ளன. மிகவும் நுணுக்கமான மற்றும் நேர்த்தியான சித்திரங்கள்.  சித்திரக்கதைகளுக்கு பொருத்தமான பாணி என்று எண்ணுகிறேன். ஓவியர் பெயர் இல்லை.

புத்தகத்தின் முதல் பக்கம்

நல்லதங்காளுக்கும் காசிராஜனுக்கும் வெகுவிமர்சையாக திருமணம் நடக்கும் காட்சிகள்


காசிநாட்டில் பஞ்சம்

கணவன் சொல்லை மீறி ஏழு குழந்தைகளுடன் தன் அண்ணன் வீட்டிற்கு புறப்படும் நல்லதங்காள். அப்போது தோன்றிய கெட்ட சகுனங்களும் பட்டத்தில் காட்டப்பட்டிருக்கிறது

தன் அண்ணன் வீட்டு வாசலில் நல்லதங்காளும் அவள் குழந்தைகளும். உள்ளிருக்கும் காவலாளியிடம் அண்ணியிடன் தான் வந்திருப்பதாக எடுத்துக்கூற சொல்லி வேண்டுகோள் விடுக்கும் காட்சி

அண்ணன் வீட்டில் நல்லதங்காளின் குழந்தைகள் அவள் அண்ணியினால் துன்புறுத்தப்படும் காட்சி

அண்ணன் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பாழுங்கிணறு எங்குள்ளது என்று மாடு மேய்க்கும் ஆட்களிடம் நல்லதங்காள் கேட்கும் காட்சி.
(பிறகு இவர்களிடம் விசாரிப்பதன் மூலமாகத்தான் நல்லதம்பி நல்லதங்காள் கிணற்றில் இறங்கிய இடத்தை கண்டுபிடிக்கிறான்)

குழந்தைகள் ஒவ்வொன்றையும் கிணற்றில் போடும் காட்சி. ஒரு பையன் மட்டும் தனக்கு சாக பிடிக்கவில்லை என்று விலகி ஓடுகிறான். (அவனையும் விரட்டிப்பிடித்து கிணற்றில் போடுவதாக செல்கிறது கதை)

நல்லதம்பி தன் தங்கை மற்றும் தங்கை குழந்தைகளின் சடலங்களை கிணற்றில் இருந்து மீட்டு எரிக்கும் காட்சி

தன் மனையிடம் கடுங்கோபத்துடன் தங்கை பற்றி விசாரிக்கும் நல்லதம்பி

நல்லதம்பியும் காசிராஜனும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி.
(இருவரின் கையிலும் கத்தி இருப்பதை கவனிக்க)


நல்லதங்காள் கதையானது நாட்டாரியல் கதை என்று வகைப்படுத்தப்படுகிறது. இன்றும் சில கிராமங்களில் வாய்வழியாக இந்த கதை சொல்லப்பட்டு வருகிறது. நான் படித்த மணிமேகலை பிரசுரத்தின் புத்தகத்தில் இது ஒரு அரச குடும்ப கதையாக சொல்லப்படுகிறது. இணையத்தின் சில இடங்களில் சாதாரண குடும்ப கதையாகவும் சொல்லப்படுகிறது.



கதை இணையத்தில் படிக்க... இணைப்பு1இணைப்பு2.
tamil heritage தளத்தில் படிக்க 
மணிமேகலை பிரசுரத்தில் புத்தகமாக வாங்கிப்படிக்க

Thursday, July 12, 2012

முத்து காமிக்ஸ் - சில தகவல்கள்

வணக்கம், சமீபத்தில் முதலை பட்டாளம் முத்து காமிக்ஸின் முழு  நீள பட்டியலை வெளியிட்டு இருந்தார். அவரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பதிவு. அதிக முறை தலைகாட்டிய ஹீரோ யார் என்பதை தெரிந்துகொள்ள செய்த வேலைகள் அப்படியே இந்த பதிவில் கொண்டு விட்டு உள்ளன. முத்து காமிக்ஸ் பற்றிய சில நுண் தகவல்களை பார்ப்போம். 


எதிர்பார்த்த படியே மாயாவிதான் முத்துவின் நெ. 1. அவருக்கு அடுத்த இடத்தில் லாரன்ஸும் மூன்றாம் இடத்தில் ஜானி நீரோவும் உள்ளனர்.
இன்றைய தலைமுறை நாயகர்களில் டைகர் மட்டுமே டாப்-10ல் இடம் பெறுகிறார்.
இந்த அட்டவனையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதல் 5 இடங்களை பிடித்த நாயகர்கள் பட்டியலிடப்பட்டு உள்ளார்கள்.
எந்த ஒரு ஹீரோவும் அனைத்து மூன்று காலகட்ட டாப்-5 யில் இடம் பெற முடியவில்லை. முதல் 200 இதழ்கள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த மாயாவி அதன் பின் காணாமல் போகிறார்.

கதைகளின் தாயகத்தைப் பொறுத்தவரை அமெரிக்க காமிக்ஸ்களும் இங்கிலாந்து காமிக்ஸ்களும் கிட்டதட்ட சம அளவில் வெளிவந்துள்ளன. 200 இதழ்களுக்க பிறகுதான் ஐரோப்பிய கதைகளின் ஆதிக்கம் துவங்குகிறது. இன்றைய நிலையில் கிட்டதட்ட அனைத்து அமெரிக்க-இங்கிலாந்து நாயகர்களும் கைவிடப்பட்ட நிலையில் ஐரோப்ப காமிக்ஸ்களின் ஆதிக்கம் இன்னும் விரிவடையும் என் நம்பலாம்.


கதைகளை துள்ளியமாக வகைப்படுத்துவது என்பது இயலாத காரியம். எனக்கு  ஆக்சன் ஆகத் தோன்றும் கதை உங்களுக்கு துப்பறியும் கதையாகவோ சில பேர்க்கு thriller ஆகவோ தோன்றலாம். என்னை பொருத்த வரை மாயாவி, வேதாளர், மாண்டிரெக், மார்ட்டின் ஆகியோர் fantasy வகையில் வருகிறார்கள்.
மேலும் சில தகவல்கள்:

1. முத்து காமிக்ஸில் தொடர்ச்சியாக அதிக முறை இடம் பிடித்த ஹீரோக்கள் மாயாவி மற்றும் டைகர். மாயாவி முத்துவின் முதல் நான்கு இதழ்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று உள்ளார். டைகர் 294ல் இருந்து 297 வரை தொடர்ச்சியாக நான்கு இதழ்களில் இடம் பெற்று உள்ளார்.

2. அதிக விலை (ரூ 100) கொண்ட இதழ் 'என் பெயர் லார்கோ'  (வெ.எண் 314).  அதே சமயம் இந்த இதழ்தான் அனைத்து (லயன்+முத்து) 100 ரூபாய் இதழ்களிலேயே குறைந்த பக்கங்களை கொண்ட இதழ்.

3. ஜப்பான் நாட்டை மூலமாக கொண்டு 'நாடோடி ரெமி' என்ற கதை முழு வண்ணத்தில் பெரிய சைஸில் இதழ் எண்.135ல் வெளிவந்துள்ளது.

4. விங் கமெண்டர் ஜார்ஜின் கதைகள் அனைத்து காலகட்டங்களிலும் பரவலாக காண்ப்படுகிறது.

இறுதியாக ....:  ரொம்ப நாட்களாக excel மற்றும் power pointல் தமிழில் வேலை செய்ய வேண்டும் என்ற என் ஆசை இந்த பதிவு மூலம் சற்று நிறைவேறி உள்ளது. இந்த பதிவின் முதுகெலும்பு முதலைப்பட்டாளம் என்றே கூற வேண்டும். ஏற்கனவே கூறிய படி அவரின் லிஸ்டில் இருந்துதான் இந்த முழு பதிவும் தயார் செய்யப்பட்டது.
* இங்கு மறுபதிப்பு இதழ்கள் தனியாக பிரிக்கப்படவில்லை.
* ஒரே இதழில் ஒன்றுக்கு மேறபட்ட நாயகர்களின் கதைகள் இடம் பெறும் பட்சத்தில் முதன்மையான் ஹீரோவின் கதை மட்டுமே  கணக்கில் கொள்ளப் படும். (முதலை நண்பர் தனது பதிவில் அப்படித்தான் போட்டு உள்ளார்).
முடிந்த வரை தவறுகள் இல்லாமல் ரெடி செய்துள்ளேன். தவறுகள் இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டவும்.