தமிழில் பல காமிக்ஸ்கள் வந்து இருந்தாலும் வெற்றி பெற்றவை சிலவே. அதிலும் மொழி மாற்றம் இல்லாமல் நேரடியாக வெளிவந்த காமிக்ஸ் இதழ்களில் வெற்றி பெற்றவைகளில் முதன்மையான இதழ் " வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள்" ஆகும். விற்பனையில் சாதனை புரிந்த இந்த இதழ் நின்று போனது தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு பெரும் சோகமே. இத்தகைய சிறப்புக்கள் மிகுந்த இதழின் 15 வது படைப்பு " கனவா நிஜமா". வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள் பற்றிய முழு விபரங்களை விவாதிக்க ஒரு பதிவு போதாது. இந்த பதிவில் எனக்கு பிடித்த கதை ஒன்றை பற்றி எழுதுகிறேன்.
ஒரு ஆடு மேய்க்கும் இடையனால் எப்படி ஒரு தேசத்தை காப்பாற்ற முடிகிறது என்பதே கதை.
இமயத்தின் அடிவாரத்தில் மாயாபுரி என்று ஒரு தேசம் மன்னர் வஜ்ரபாகு வின்
நல் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆடு மேய்க்கும் இடையன் நீலன்
தான் இக்கதையின் நாயகன். அவன் ஒரு முறை ஆடு மேய்க்கும் போது ஒரு விதமான வாயுவினை சுவாசிக்க நேரிடுகிறது. அது அவனை கனவா நிஜமா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் பத்து வருடங்களுக்கு பின் இட்டு செல்கிறது. பத்து வருடங்களுக்கு பின் அவன் நாட்டில் நடந்திடும் மாற்றங்களை அவனால் பார்க்க
முடிகிறது. மாற்றங்கள் மகிழ்ச்சி தருபவையாக இல்லை. தற்போது சேனாதிபதியாக
இருக்கும் தந்தவக்கரின் அடிமைசாசனத்தில் நாடு அவதி பட்டுக்கொண்டு இருந்து.
சிறிது நேரத்திலேயே நிகழ்காலத்திற்கு வந்து சேரும் நீலனால் அமைதியாக இருக்க முடியவில்லை. சாதாரண ஆடு இடையனாக நாட்டை காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் உதாசீனப்படுத்தபடுகிறது.
ஆனால் அவன் நாட்டை காப்பற்றும் முயற்சியில் பின் வாங்கவில்லை. தன் அடையாளங்களை மாற்றுகிறான். மாற்று வழியினை தேர்ந்து எடுத்து வெற்றியும் பெறுகிறான்.
இந்த கதை எந்த வடிவத்தில் (நாவல், திரைப்படம், காமிக்ஸ் etc) வந்து இருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும் என்பது என் கருத்து.
வாண்டு மாமாவின் அருமையான கதை, மொழி நடை மற்றும் செல்லத்தின் அட்டகாசமான சித்திரங்கள் என தரமான இதழ். இங்கே நாம் காணும் சித்திரங்கள் எந்த ஒரு அயல் நாட்டு சித்திர கதைக்கும குறைந்தது இல்லை.
கதை இந்தியாவில் நடந்தாலும் ஒரு சில காட்சிகளில் ஓவியங்களில் மிக சிறிதாக பாரசீக மற்றும் ரோமானிய சாயல்
தெரிகிறது. ஆனால் இதுவே மாயாபுரி
வீரர்களுக்கும் தார்தாரியர் வீரர்களுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது.
பெருன்பான்மையான பார்வதி சித்திர கதைகள் பழைய கல்கி, ஆனந்த விகடன், கோகுலம் ஆகிய இதழ்களில் தொடர் கதையாக வந்தவைதான் எனபது அனைவரும் அறிந்ததே. கனவா நிஜமா எந்த பத்திரிகையில் வந்தது எனபது தெரியவில்லை. அதேபோல் இந்த இதழின் அட்டை படமும் யார் வரைந்தது என தெரியவில்லை.
பதிவை படித்து கருத்துக்களை பகிர்ந்திட மறவாதீர் நண்பர்களே..