Thursday, December 19, 2024

கிடை (கி. ராஜநாராயணன்) - மேய்ச்சலின் கதை

 கிடை – கி. ராஜநாராயணன் 1960 களில் எழுதிய குறு நாவல். 

(கிடை போடுதல் என்பது விளைநிலங்களில் ஆநிரைகளை (கால் நடைகள்) இரவில் அடைத்து வைத்து அவற்றின் கழிவுப்பொருட்களான சாணம் மற்றும் சிறுநீரினை உரங்களாக மாற்றுவது ஆகும். பகலில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வார்கள்.  கீதாரி என்பவர் ஒரு கிடையின் தலைவர்.)

இந்த நாவல் அப்படிப்பட்ட கிடைகள் போட்டு ஆடுகள் வளர்க்கும் ஒரு ஊரில் நடக்கும் கதை. துவக்கத்தில் சில கதை மாந்தர்கள் மற்றும் கதை நடக்கும் களம் பற்றிய ஒரு அறிமுகம் தரும் ஆசிரியர் பிறகு சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலம்  பிறகு கிடை போடுவது பற்றியும் அதில் உள்ள நுணுக்கங்கள் பற்றிய நமக்கு தெரியப்படுத்துகிறார். 

கிடை பற்றிய கி.ரா வின் அறிமுகம்

கிடை மறித்தல்

கிடை மறித்தல் : கிடையின் ஆடுகள் எந்த விளைநிலத்திலாவது மேய்ந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டால் நிலத்துக்கு சொந்தக்காரர் கிடை மேய்ச்சலுக்கு போகையில் மறித்து விடுவர். பிறகு ஊர் கூடி பயிர் சேதத்திற்கு காரணமான கிடையின் சொந்தக்காரர் யார் என்பதையும் தீர்வு என்ன என்பதையும் சொன்ன பிறகு தான் கிடை மேய்ச்சலுக்கு போக முடியும். ஆநிரை சொந்தக்காரர்களுக்கும் உழவர்களுக்கு இப்படி ஒரு புரிதல். 

இப்படிப்பட்ட ஒரு கிடை மறித்தல் கதையில் வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பாக நம்மை இட்டு செல்கிறது. நம்மில் குறுநகை ஏற்படுத்தும் இடங்களும் பல உண்டு. 

இப்படி ஆர்வமாக கதை சென்று கொண்டிருக்கும் போது சட்டென ஒரு அதிர்ச்சியுடன் கதையை முடிக்கிறார். அந்த முடிவு இதுவரை சொல்லப்பட்ட கதையின் வேறு ஒரு பரிணாமத்தை நமக்கு உணர்த்துகிறது. கதையின் கடைசி கட்டமே இக்கதையின் அடிநாதமாக உள்ளது. 

 - இது எனக்கு கிடைத்த வாசிப்பு அனுபவம். உங்களுக்கு சற்றே வேறு அனுபவம் கூட கிடைக்கலாம். 

1960 களில் எழுத்தப்பட்ட இந்த கதை, மற்றும் சமூக பார்வை  இன்றைய கலகட்டத்திற்கும் பொருத்தமாகவே உள்ளது. படிக்கவும்  சுவாரிஸ்யமாகவே உள்ளது. கண்டிப்பாக அனைவரும் படிக்கலாம். இந்த பதிப்பில் உள்ள ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. (ஓவியர் - எம். கணேசன்)

நம்மை கதையுடன் ஒன்ற வைக்கும் ஓவியங்கள்

இக்கதையில் கி. ரா அவர்கள் அந்தக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பொருள்கள் மற்றும் தாவரங்களின் பெயர்கள் பலவற்றை கூறுகிறார். அந்த பொருள்களின் பெயர்கள் நமக்கு புதிதாக இருந்தாலும் சற்றே யோசித்தால் அவற்றின் பயன் மற்றும் உருவகம் நமக்கு புரிந்து விடுகிறது. இதில் சொல்லபட்ட தாவரங்கள் மற்றும் பொருள்கள் பற்றி ஒரு தனி பதிவு எழுதும் அளவிற்கு செய்திகள் உள்ளன.