Thursday, December 19, 2024

கிடை (கி. ராஜநாராயணன்) - மேய்ச்சலின் கதை

 கிடை – கி. ராஜநாராயணன் 1960 களில் எழுதிய குறு நாவல். 

(கிடை போடுதல் என்பது விளைநிலங்களில் ஆநிரைகளை (கால் நடைகள்) இரவில் அடைத்து வைத்து அவற்றின் கழிவுப்பொருட்களான சாணம் மற்றும் சிறுநீரினை உரங்களாக மாற்றுவது ஆகும். பகலில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வார்கள்.  கீதாரி என்பவர் ஒரு கிடையின் தலைவர்.)

இந்த நாவல் அப்படிப்பட்ட கிடைகள் போட்டு ஆடுகள் வளர்க்கும் ஒரு ஊரில் நடக்கும் கதை. துவக்கத்தில் சில கதை மாந்தர்கள் மற்றும் கதை நடக்கும் களம் பற்றிய ஒரு அறிமுகம் தரும் ஆசிரியர் பிறகு சிறு சிறு நிகழ்ச்சிகள் மூலம்  பிறகு கிடை போடுவது பற்றியும் அதில் உள்ள நுணுக்கங்கள் பற்றிய நமக்கு தெரியப்படுத்துகிறார். 

கிடை பற்றிய கி.ரா வின் அறிமுகம்

கிடை மறித்தல்

கிடை மறித்தல் : கிடையின் ஆடுகள் எந்த விளைநிலத்திலாவது மேய்ந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டால் நிலத்துக்கு சொந்தக்காரர் கிடை மேய்ச்சலுக்கு போகையில் மறித்து விடுவர். பிறகு ஊர் கூடி பயிர் சேதத்திற்கு காரணமான கிடையின் சொந்தக்காரர் யார் என்பதையும் தீர்வு என்ன என்பதையும் சொன்ன பிறகு தான் கிடை மேய்ச்சலுக்கு போக முடியும். ஆநிரை சொந்தக்காரர்களுக்கும் உழவர்களுக்கு இப்படி ஒரு புரிதல். 

இப்படிப்பட்ட ஒரு கிடை மறித்தல் கதையில் வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பாக நம்மை இட்டு செல்கிறது. நம்மில் குறுநகை ஏற்படுத்தும் இடங்களும் பல உண்டு. 

இப்படி ஆர்வமாக கதை சென்று கொண்டிருக்கும் போது சட்டென ஒரு அதிர்ச்சியுடன் கதையை முடிக்கிறார். அந்த முடிவு இதுவரை சொல்லப்பட்ட கதையின் வேறு ஒரு பரிணாமத்தை நமக்கு உணர்த்துகிறது. கதையின் கடைசி கட்டமே இக்கதையின் அடிநாதமாக உள்ளது. 

 - இது எனக்கு கிடைத்த வாசிப்பு அனுபவம். உங்களுக்கு சற்றே வேறு அனுபவம் கூட கிடைக்கலாம். 

1960 களில் எழுத்தப்பட்ட இந்த கதை, மற்றும் சமூக பார்வை  இன்றைய கலகட்டத்திற்கும் பொருத்தமாகவே உள்ளது. படிக்கவும்  சுவாரிஸ்யமாகவே உள்ளது. கண்டிப்பாக அனைவரும் படிக்கலாம். இந்த பதிப்பில் உள்ள ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. (ஓவியர் - எம். கணேசன்)

நம்மை கதையுடன் ஒன்ற வைக்கும் ஓவியங்கள்

இக்கதையில் கி. ரா அவர்கள் அந்தக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பொருள்கள் மற்றும் தாவரங்களின் பெயர்கள் பலவற்றை கூறுகிறார். அந்த பொருள்களின் பெயர்கள் நமக்கு புதிதாக இருந்தாலும் சற்றே யோசித்தால் அவற்றின் பயன் மற்றும் உருவகம் நமக்கு புரிந்து விடுகிறது. இதில் சொல்லபட்ட தாவரங்கள் மற்றும் பொருள்கள் பற்றி ஒரு தனி பதிவு எழுதும் அளவிற்கு செய்திகள் உள்ளன. 

Friday, December 15, 2023

திருப்பெரும்புதூர் பறவைகள் (Birds of Sriperumputhur)

பறவைகள் பார்த்தல் : 

சில காலங்கள் வரை அரிதாக ஒரு சிலரின் பொழுதுபோக்காக அறியப்பட்ட பறவை நோக்கல் இன்று அனைத்து தரப்பு மக்களும் பங்குகொள்ளும் ஒரு நிகழ்வாகவும் சூழியல் ஆர்வலர்கள் நாட்டம் கொள்ளும் ஒரு நிகழ்வாகும் மாறி உள்ளது. நம்மை சுற்றி உள்ள இயற்கையின் அங்கங்களை புரிந்து கொள்ள பறவை நோக்கல் ஒரு சிறந்த வழியாக உள்ளது. 

திருப்பெரும்புதூரும் பறவைகளும் :

புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்ககள் எதுவும் திருப்பெரும்புதூர்  சுற்றி இல்லை. ஆனாலும் பல உள்ளூர் நீர்நிலைகள் மற்றும் இங்குள்ள நிலப்பரப்பு  பறவைகளின் புகலிடமாக திகழ்கின்றன. திருப்பெரும்புதூர் அருகில் உள்ள நீர்நிலைகளும் அவற்றில்  பதிவான பறவை வகைகளின் எண்ணிக்கையும் கீழே.(தகவல் மூலம் - மக்கள் அறிவியல் தளமான ebird.org

செம்பரம்பாக்கம் ஏரி - 184

தென்னேரி - 172

நயப்பாக்கம் (வளர்புரம்) - 190

நாவலூர் - 134

திருப்பெரும்புதூர் ஏரி - 87

இந்த எண்ணிக்கை  ஒரு உத்தேசமாக ஒன்றாகும். முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டால் இன்னும் துல்லியமான எண்ணிக்கையை அறியலாம். 

பறவை பார்தலில் ஒவ்வொரு ஊருக்கு என்று சில சிறப்பு பறவைகள் இருக்கும். அவை மற்ற பகுதிகளில் காணப்பட்டாலும் அந்த பகுதியில் அதிகம் / எளிதாக பார்க்கக்கூடியதாகவோ, அல்லது எனக்கு குறிப்பிட்ட  நினைவுகளுடன் தொடர்புடையதாகவோ இருக்கும்  பறவைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

மூவண்ண சில்லைகள் (Try colored Munia) :

திருப்பெரும்புதூர் பகுதியில் பல இடங்களில் பரந்த இடுப்பளவு வளரும்  புல்வெளிகளை பார்க்கலாம் (பெரும்பாலும் நீர் நிலைகள் அருகில்). மரங்களும் இதர செடிகளும் குறைவாக இருக்கும் இப்பகுதிகளில் இந்த அழகான சில்லைகளை பார்க்கலாம். திருப்பெரும்புதூர் ஏரி புறம்போக்கு பகுதிகளில் அரண் நண்பர்கள் கணக்கெடுக்கும் போது  நூற்றுக்கணக்கான  மூவண்ண சில்லை பறவைகளை ஒன்றாக பார்த்தது ஒரு சிறப்பான அனுபவம். இவை இடுப்பு உயர புற்கள் மற்றும் புதர்களில் கூடு கட்டி வாழும்.

இதே குடும்பத்தை சேர்ந்த புள்ளி சில்லைகளை(Scaly Breasted Munia) நம் வீடு அருகில் கூட பார்க்கலாம். இடுப்பு உயர புற்  பரப்புகளில் அரிதாக சிவப்புச்சில்லையும் (வலசை வரும் பறவை) பார்க்கலாம். தண்டலம் ஏரியின் அருகில் இந்த அழகான - துடிப்பான சிவப்பு சில்லைகளை(Red avadavat) வெகு அருகில் பார்தது பசுமையாக நினைவில் உள்ளது. 



 கருப்பு வெள்ளை மைனா (Pied Starling) :

வட மாநிலங்களில் பார்க்கக்கூடிய இந்த மைனா வகை பறவையை தமிழ்நாட்டில் அரிதாக  ஒரு சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும். அந்த ஒரு சில இடங்களில் ஒன்றாக திருப்பெரும்புதூர் உள்ளது. திருப்பெரும்புதூர் ஏரிவளர்புரம் பகுதிகளில் பார்க்கலாம். பெரும் எண்ணிக்கையில் வலசை வரும் சூரைக்குருவிகளுடன்(Rosy Starling) சேர்ந்து சில சமயம் உலா வரும்.


Pic - eBird

இலை கோழிகள் (Jacanas) :

 தாமரை இலை கோழிகளில் இரண்டு வகைகள் நம் பகுதியில் உள்ளன. நீள வால் இலை கோழி(Pheasant Tailed Jacana)கரும் பச்சை இலை கோழிகள்(Bornz winged Jacana). இவை நம் பகுதியின் அனைத்து நீர் நிலைகளும் ஓரளவு  சாதாரணமாக பார்க்கலாம். நம் பகுதியில் சிறிய குளங்களிலும் கூட பார்க்க முடியும்.இப்பறவைகள் கால்கள்  இலைகளின் மேல் நடக்கும் வண்ணம் இருப்பது சிறப்பு. இப்பறவைகளுடன் தாழைக்கோழிகளையும் (Grey headed Swamphen)நாமக்கோழிகளையும்-Common coot (சற்று பெரிய நீர் நிலையாக இருக்கும் பட்சத்தில்) பார்க்கலாம்.  அழகான இப்பறவைகள் எளிதில் காணக்கூடியதாகவும் இருப்பதால் புதிதாக பறவை நோக்கலுள்க்கு வருபவர்கள்சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்த பொருத்தமான பறவைகள் இவை.




சீழ்க்கைச் சிறகிகள் (Whistling  Ducks) : 

வாத்துகளின் இருப்பும் வரவும் ஒரு நீர்நிலை சிறந்த உயிர் சூழலுடன் இருக்கிறது என்று பொருள். (வளர்ப்பு வாத்துகள் அல்ல. காட்டு வாத்துகள்) நம் பகுதிகளில் 8 10 வகையான வாத்துகளை பார்க்கலாம். அதில் மிக அதிக அளவில் காணக்கூடிய வாத்தினமாக இந்த சீழ்க்கைச் சிறகிகள் உள்ளன. இவை கத்தும் பொது விசில் அடிப்பது போல்  இருப்பதால் இந்த பெயர். ஒரே சமயத்தில் 100 க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பார்க்கலாம். கூட்டமாக நீரில் இருந்து எழுவதும்பறப்பதும் மீண்டும் நீரில் அமர்வதும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சிகள். இந்த காட்சிகளை பார்க்க எங்கெங்கோ செல்ல தேவையில்லை.  நாம் நம் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்றால் போதும் என்பது கூடுதல் சிறப்பு. உள்ளூர் பறவைகளான இவற்றுடன்இதே போல தெரியும் பெரிய சீழ்க்கைச் சிறகிகள் கலந்து இருக்கும். பெரிய சீழ்க்கைச் சிறகிகள் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் இனமாகும். ஒரே சமயத்தில் 300 க்கு மேற்பட்ட பறவைகளை இருங்காட்டுகோட்டையில் ஏரியில் பார்ததுள்ளேன். 



இரைக்கொல்லி பறவைகள்:

ஒரு காட்டின் உயிர் பன்மை வளம் (Bio-diversity) அந்த காட்டின் உயிர் கொல்லி விலங்குகளான புலிகள், சிறுத்தைகளின் எண்ணிக்கை கொண்டு அளவிடுவது வழக்கம். அதேபோல ஒரு பகுதியின் உயிர் பன்மை வளம் அப்பகுதியின் இரைக்கொல்லி பறவைகளின் எண்ணிக்கை கொண்டு அளவிடலாம்.   திருப்பெரும்புதூர் பகுதியில் சாதாரணமாக பார்க்கக்கூடிய இறை கொல்லி பறவைகளாக வல்லூறு, கருந்தோள் பருந்து உள்ளன. அதே சமயம்,  திருப்பெரும்புதூர் அருகில் உள்ள தென்னேரியும், நயப்பாக்கம் ஏரியும் பல்வேறு வகையான இரைகொல்லி பறவைகள் பார்க்கும் இடங்களாக உள்ளன. பாம்புண்ணி கழுகுகள், விராலடிப்பான், தேன் பருந்து ஆகியவை அவற்றில் சில. இவ்விடங்கள் பறவைகள் ஆர்வலர்களின் மத்தியில் பிரபலமான இடங்களாகும்.




பொதுவாக...

திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள அனைத்து பறவைகளையும் இக்கட்டுரையில் அடக்கிட முடியாது. நம் பகுதியின் சிறப்பு பறவைகள் என கருதக்கூடிய பறவைகளை மட்டும் இங்கு பார்த்துளோம்.

பொதுவாகவே பறவைகள் பார்ப்பதில் பொறுமை மிக அவசியம். அதிக அளவில் உள்ள பறவைகளை கூட சில முறை நம்மால் பார்க்க முடியாமல் போகலாம். (இதுவே பறவைகள் பார்த்ததில் உள்ள சுவாரிஸ்யமும் ஆகும்). அதிலும் இரைக்கொல்லி பறவைகளை பார்க்க கூடுதல் பொறுமையும், அதிஷ்டமும் வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கிருக்கும் பறவைகளை பார்த்தல் தான் பறவைகள் பார்த்தல் என்று கொள்ள தேவையில்லை. நம் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அருகிலும் பல்வேறு வகையான பறவைகளை பார்க்கலாம். நம் வீடுகளுக்கு அருகில் தென்படும் பறவைகளை நோக்கும் போது நம் அருகில் இவ்வளவு பறவைகள் உள்ளனவா என்று பலரும் ஆசிரியப்படுவர்.

மேலும் அவற்றின் நடத்தைகளை காண்பதும் ஒரு சுவாரிஸ்யமான விஷயமாக இருக்கும். பெயர் தெரியாத பறவைகளின் அடையாளங்களை குறிப்பெடுத்து இணையம் மற்றும் பறவை கையேடுகளில் தேடி அவற்றின் பெயர்களை அறியலாம். மேலும்  இவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது மிக அவசியம் ஆகும். நம் நாட்டிலேயே இல்லாத Toucan, Hummingbird போன்ற பறவைகளின் பெயரை ஆங்கில பாட நூல் மூலமாக அறிந்திருக்கும் நம் குழந்தைகள் நம் வீட்டிற்க்கு வரும் காக்கை, புறா, கிளிகள் தவிர இதர பறவைகளின் பெயரை அறியாமல் இருப்பது வருத்தமே.

 திருப்பெரும்புதூர் பறவைகளுக்கான சவால்கள் :

எல்லா இடங்கள் போலவே நம் பகுதிகளும் பறவைகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. அதற்கு காரணம் சினிமாக்களில் காட்டுவது போல செல்போன் டவர்கள் அல்ல. வாழிடங்கள் அழிப்பே முதன்மை காரணம் ஆகும். பறவைகள் கூடு கட்டி உணவு தேடி வாழும் இடங்களை அவற்றின் வாழிடங்கள் என்கிறோம். ஒவ்வொரு பறவையும் அதற்கான வாழிடங்களில்  மட்டுமே வாழக்கூடியவை ஆகும்.  மரங்கள் வெட்டுகையில் மரங்கள் சார்ந்த பறவைகளும், நீர்  நிலைகள் சிதைக்கையில் நீர்வாழ் பறவைகளும் பெருமளவில் அழிகின்றன. புற்கள் மற்றும் புத்தர் செடிகள் பட்டுமே இருக்கும் நாம் எதற்கும் உதவாத புறம்போக்கு நிலங்கள் என்று வரையறுக்கும்  நிலப்பகுதிகள் தான் பல்வேறு தரை வாழ், புதர் வாழ் பறவைகளுக்கு வாழிடங்களாக உள்ளன. (ஆள் காட்டி, கெளதாரி,காடைகள், ராபக்கிகள் etc)

கட்டுமானங்கள் பெருகுவதால் இத்தகைய வாழிடங்கள் பெருமளவு சுருங்கி வருகின்றன. இது பறவைகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயிர் சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நீர் நிலைகளை பொறுத்த வரை அசுத்த நீர் கலப்பதும், குப்பைகள் கொட்டுவதும் அங்கு உயிர் சூழல் கெட போதுமானதாக உள்ளது.

இன்றைய பறவைகள் வாழிடம். நாளைய குடியிருப்புகள்

அரண் மற்றும் பறவைகள் :

அரண் அமைப்பு பறவைகள் தொடர்பான பல ஆக்கபூர்வமான செயல்களை செய்து வருகிறது. திருப்பெரும்புதூர் அருகில் உள்ள நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு, பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பறவைகள் பற்றி அறிந்து கொள்ளும் வண்ணம் பறவை நடை நிகழ்வுகள், பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற செயல்கள் செய்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் அரண் வளர்த்து வரும் எழில்வனம், சுந்திரவனம் குறுங்காடுகள் பறவைகள் எந்த தொல்லையும் இல்லாமல் வாழக்கூடிய வாழிடங்களாக விளங்கி வருகின்றன. அங்கிருக்கும் மரங்கள் பெரிதான பின் மரங்களை திருப்பெரும்புதூர்  பகுதிகளில் பரப்பும் பணியை அவை எடுத்துக்கொள்ளும். பறவைகள் உலகு எனும் அற்புத உலகை அறிந்துகொள்ள அரண் அமைப்புடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

(அரண் 2ஆம் ஆண்டு மலரில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்)